டிசம்பர்-6 இந்திய வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத களங்கம் படிந்த நாள் என்று விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கு வணக்கம். இன்று புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள். விளிம்புநிலை மக்களுக்கான துயர நாள். அத்துடன், பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நாள். இந்திய வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத களங்கம் படிந்த நாள்.
இந்நாளை நாம் ஆண்டுதோறும் தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சிநாள் என நினைவுகூர்ந்து வருகிறோம். கடந்த இருபதாண்டுகளாகவே இதனைக் கடைப்பிடித்து வருகிறோம். அதேபோல் இந்த ஆண்டும் ஆங்காங்கே சனாதன சக்திகளின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் வகையில் இந்நாளைக் கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.
இன்று நான் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் நகரில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசின் நிகழ்வொன்றில் பங்கேற்கவுள்ளேன். அதனையொட்டி, இங்கேயுள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு இயக்கத் தோழர்களுடன் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தவுள்ளேன்.
அதேபோல, ஆங்காங்கே நீங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திட வேண்டும்.
தலைநகர் சென்னையில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். எஸ். பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் கட்சி அலுவலகம், வெளிச்சம் அலுவலகம் ஆகிய இடங்களிலுள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்துகின்றனர். அத்துடன், கோயம்பேடு சந்தைக்கு எதிரிலுள்ள சிலைக்கும் வீரவணக்கம் செலுத்துகின்றனர். எனவே, ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத் தோழர்கள் அனைவரும் அந்நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டுகிறேன்.
திருவுருவச்சிலை மற்றும் திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்துவதோடு பின்வரும் உறுதிமொழியை ஏற்கவேண்டுகிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான (திசம்பர்- 06)இன்றைய நாளை “தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாளாக “ஏற்போம்.
சாதி ஒழிப்பை தனது முதன்மை இலக்காகக் கொண்டு தன் இறுதி மூச்சுவரையில் சனாதன ஃபாசிசத்தை மூர்க்கமாக எதிர்த்துப் போராடிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கனவை நனவாக்கும் வகையில், தலித், பழங்குடியினர், இசுலாயமியர் மற்றும் கிறித்தவர் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை மக்களின் ஒற்றுமையை வென்றெடுக்க – நிலைநாட்ட உறுதியேற்போம்! என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.