chennireporters.com

டி.பி.ஜெயின் கல்லூரியில் கட்டண மோசடி அரசு ஏற்று நடத்த சி.பி.எம்.பாலகிருஷ்ணன் கோரிக்கை.

சென்னை, துரைப்பாக்கம் டி.பி. ஜெயின் கல்லூரியில் அதீத கட்டண வசூல் முறைகேடு!
தனி அலுவலர் அமைத்து இக்கல்லூரியை அரசு கையகப்படுத்த உயர்கல்வித்துறை அமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:- சென்னை, துரைப்பாக்கத்தில் இயங்கும் டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் – அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை, சுயநிதிப்பாடப்பிரிவுகளாக மாற்றி – மாணவர்களிடம் அதீத கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதை தடுத்திடவும் – சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் இக்கல்லூரியை தமிழக அரசு கையகப்படுத்தி அரசுக் கல்லூரியாக மாற்றிடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கோருதல் தொடர்பாக:

சென்னை, துரைப்பாக்கத்தில், டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 50 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் 7 இளங்கலை, 3 முதுகலை பாடப்பிரிவுகளில் வருடந்தோறும் சராசரியாக 1000 மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

குறிப்பாக, அந்த பகுதியில் சென்னை நகரத்தில் இருந்து மறு குடியிருப்பு திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்பட்டுள்ள செம்மஞ்சேரி, கண்ணகி நகர், எழில் நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் உயர் கல்வி பெறுவதற்கு இக்கல்லூரியே முக்கிய பங்கு வகிக்கிறது.

1990ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் சுயநிதிப்பிரிவை தனியாக தொடங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில் மேலே குறிப்பிட்ட 10 பாடப்பிரிவுகளுடன் இக்கல்லூரி நிர்வாகம் சுயநிதிப் பிரிவில் மேலும் 10 பாடங்களை கூடுதலாக நடத்துகிறது.

இதில் சராசரியாக வருடத்திற்கு 1500 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர் இந்த பாடப்பிரிவில் அரசு உதவி பெறும் பிரிவில் வசூலிக்கப்படுவதை விட பல மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

சுயநிதிப் பாடப்பிரிவின் மூலம் லாபம் பெற ஆரம்பித்த டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பாடப்பிரிவையும் சுயநிதிப் பாடப்பிரிவாக மாற்றி அதீத கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக,
1. கடந்த நான்காண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு உயர்த்தி சுயநிதிப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு இணையான கட்டணத்தை வசூலித்து வருகிறது.

2. 2020-21ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.

3. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் பிரிவில் பணி நிறைவு பெறும் பேராசிரியர்களின் இடத்தில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதை நிறுத்தியுள்ளது.

இதுபோன்ற அரசின் விதிமுறைகளுக்கு புறம்பான கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்த 11 பேராசிரியர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்துள்ளது.

அரசின் அனைத்து உதவிகளையும் பெற்று கல்வி நிறுவனத்தை தொடங்கி உள் கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக் கொண்டு அதை அப்படியே சுயநிதி கல்லூரியாகவே மாற்றி செயல்படுத்தி வருகிறது.

அதீத கட்டண கொள்ளை வசூலில் ஈடுபடுவதால் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் அப்பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் சேரமுடியாமல் உயர்கல்வி பயில முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1976 பிரிவு 14 (அ)வை பயன்படுத்தி ஒரு தனி அலுவலரை நியமித்து அரசின் கட்டுப்பாட்டில் கையகப்படுத்தி தமிழக அரசே இக்கல்லூரியை ஏற்று நடத்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இதுபோன்று தமிழகம் முழுவதும் இயங்கும் 250 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் அரசின் விதிகளுக்குட்பட்டு செயல்படுகின்றனவா, அரசு நிர்ணயித்த கட்டணங்கள் தான் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கும் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,
தங்களன்புள்ள,
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்.

இதையும் படிங்க.!