மகன் ஆதித்யாவின் புதிய hairstyle Cornrows (கார்ன்ரோஸ்). முதலில் மகன் மிகவும் விருப்பப்பட்டார் என்று தான் Okay சொன்னேன். பின்னர் இந்த சிகை அலங்காரத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
ஒரு சிகை அலங்காரம் ஒரு இனத்து மக்களின் அடிமைத்தனத்துக்கு எதிரான கிளர்ச்சியின் அடையாளமாக திகழ்கிறது. நிற வேற்றுமைக்கு எதிரான குரல் இது என்பதையும் அறியும் போது ஒரு இனம் புரியாத அன்பு ஏற்படுகிறது.
பிரான்ஸில் நான் கண்ட வரையில் கருப்பர்கள் மட்டுமல்ல வெள்ளையர்கள் ஒரு சிலரும் கார்ன்ரோஸ் சிகை அலங்காரத்தில் இருந்தனர்.
கருப்பின மக்களின் பாரம்பரியமான கார்ன்ரோஸ் (Cornrows) தலைமுடி அலங்காரம் பற்றிய வரலாற்றில் நான் அறிந்து கொண்டது.
கார்ன்ரோஸ் என்பது தலைமுடியை தலைச் சருமத்திற்கு நெருக்கமாகச் சுருட்டி பின்னும் ஒரு பாணி. இது பிரெய்ட்ஸ் (Braids) என்பதிலிருந்து வேறுபடும். பிரெய்ட்ஸ் செய்யும்போது, மூன்று முடி குழல்களை கீழே தொங்கவிட்டபடி ஒன்றாகச் சேர்த்து பின்னுவார்கள்.
பிரெய்ட்ஸ் வடிவம் வைக்கிங் மக்கள், அமெரிக்க பழங்குடியினர், சீனர்கள் போன்ற பல இடங்களில் இருந்தாலும், ‘கார்ன்ரோஸ்’ என்ற பெயர் 16ஆம் நூற்றாண்டுக்கும் 19ஆம் நூற்றாண்டுக்கும் இடையே அமெரிக்காவில் உருவானது. அங்கு மக்கள் அடிமைகளாக வேலை செய்த மக்காச்சோளம் வயல்களைப் போலத் தோன்றுவதால் அப்படி பெயர் வந்தது. கரீபியன் பகுதிகளில் இதை ‘கேன்ரோஸ்’ (Canerows) என்றும் அழைப்பர்.
இந்த அலங்காரம், கரும்புத் தோட்டங்களில் மக்கள் அடிமைகளாக வேலை செய்த காலத்தையும் நினைவூட்டுகிறது. அதற்கு முன்பே, நைஜீரியாவில் யோருபா மொழியில் இதை ‘கோலேசே’ (kolese — “காலில்லா உயிரினம்” என்று பொருள்) என்று அழைத்துள்ளனர். அங்குள்ள பொதுப் பெயர் ‘இருன் டிடி’ (Irun Didi) ஆகும். Irun என்பது ‘முடி’ என்றும், Didi என்பது அந்த பாணியின் பெயர் என்றும் பொருள்.

சஹாரா பாலைவனத்தில் உள்ள டசில்லி பீடபூமி (Tassili Plateau) பகுதியில் கிமு 3000-ம் ஆண்டுக்கு முன் வரைந்த ஓவியங்களில் கார்ன்ரோஸ் அலங்காரத்துடன் பெண்கள் வரையப்பட்டுள்ளன. பண்டைய எகிப்தில் ஆண்களும் பெண்களும் கார்ன்ரோஸ் அல்லது எளிய பிரெய்ட்ஸ் வைத்தனர். அவற்றில் பொன் நூல் போன்ற அலங்காரங்களையும் சேர்த்தனர்.
அப்போது தலைமுடி பாணிகள் ஒருவரின் சமூக நிலையைச் சுட்டிக்காட்டின. போர்வீரர்கள், அரசர்கள் என பிரித்து அறிய முடிந்தது. இந்த அலங்காரம் நைல் நதிப் பகுதியில் இருந்து ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது. இன்றும் மேற்கு ஆப்பிரிக்கா, சூடான், கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இதை மக்கள் அணிகின்றனர். இது ஒருவரின் வயது, மத நம்பிக்கை, குடும்பம், திருமண நிலை, செல்வம் போன்றவற்றைக் காட்டுகிறது என்பதும் சுவாரசியம் தான்.
இது சிகை அலங்காரம் மட்டுமல்ல ஒரு இனத்தின் உரிமைக்குரல்.
