chennireporters.com

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? சமூக வலைதளங்களில் வைரவாகும் செய்தி.

மீண்டும் மின் கட்டணம் உயர்கிறது என்கிற செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது உண்மையான செய்தியா என்று இதுவரை அரசு அறிவிக்கவில்லை. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்குப் பிறகு தான் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா இல்லையா என்று தெரிய வரும்.

சென்னை-மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, ஒன்பது மாதங்களே ஆன நிலையில், ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, ஜூலை 1 முதல் கூடுதலாக, 4.70 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

தமிழக மின் வாரியம் நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் பயன்பாடு மற்றும் புதிய இணைப்பு கட்டணத்தை உயர்த்த விரும்பியது. அதற்காக, 2022 ஜூலை 18ல், ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்தது.

 

இது தொடர்பாக, மக்களிடம் கருத்து கேட்ட பின், 2022 செப்., 10 முதல், 35 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி, ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, வீடுகளுக்கு 400 யூனிட் வரை, 1 யூனிட்டிற்கு, 4.50 ரூபாய்; 401 – 500 வரை யூனிட்டிற்கு 6 ரூபாய்; 501 – 600 வரை யூனிட்டிற்கு 8 ரூபாய்; 601 – 800 வரை யூனிட்டிற்கு 9 ரூபாய்; 801 – 1,000 வரை யூனிட்டிற்கு 10 ரூபாய்; 1,001 மேல் யூனிட்டிற்கு, 11 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

அதற்கு முந்தைய பழைய கட்டணத்தில், வீடுகளுக்கு 1 யூனிட்டுக்கு, 2.50 ரூபாய் முதல் 6.60 ரூபாய் வரை கட்டணம் இருந்தது.உயரழுத்த பிரிவில் பெரிய தொழிற்சாலைகளுக்கான கட்டணம் யூனிட், 6.35 ரூபாயில் இருந்து, 6.75 ரூபாயாகவும்; கிலோ வாட்டிற்கு மாதம், 350 ரூபாயாக இருந்த தேவை கட்டணம், 550 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது.

இதேபோல், அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.இந்நிலையில், கடந்த ஆண்டில் ஆணையம் பிறப்பித்த மின் கட்டண உயர்வு ஆணையில், 2026 – 27 வரை ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 2023 ஏப்., நிலவரப்படி உள்ள பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம், இரண்டில் எது குறைவோ, அந்த அளவு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.இந்தாண்டு ஏப்., மாதத்தில் பணவீக்க விகிதம், 4.70 சதவீதமாக உள்ளது. இது, 6 சதவீத அளவுடன் ஒப்பிடும்போது குறைவு. எனவே, அடுத்த மாதம் முதல், அனைத்து பிரிவு கட்டணமும் 4.70 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. அதாவது, தற்போதுள்ள யூனிட் கட்டணம் எவ்வளவோ, அதில் 4.70 சதவீதம் உயரும்.

ஏற்கனவே உயர்த்திய மின் கட்டணத்தை செலுத்த முடியாமல், பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சூழலில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்த இருப்பது, மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. ஆணைய தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களை, தமிழக அரசு தான் நியமனம் செய்கிறது.  எனவே, முதல்வர் ஸ்டாலின் அந்த ஆணையை நிறுத்தி வைக்குமாறு, ஆணையத்திடம் வலியுறுத்தினால், கட்டண உயர்வில் இருந்து மக்கள் தப்பிக்க வழி உள்ளது.

இதையும் படிங்க.!