அரசியல் நாகரீகம் தெரியாமல் பத்திரிகையாளர்களிடம் பேசிவரும் பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது….
தமிழக பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் பாஜக தலைவர் அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம்!
மன்னிப்பு கேட்கும்வரை ஊடக நிறுவனங்கள் அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும்!
பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உடனடியாக மௌனம் கலைக்க வேண்டும்! என்று
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
கடலூரில் இன்று (27.10.2022) பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதற்கிடையில், கோயம்புத்தூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அண்ணாமலை மீதும் பாஜக மீதும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில், கடலூரில் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, செந்தில் பாலாஜி வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில், இதற்கு விருப்பப்பட்டால் அவர் பதில் அளிக்கலாம் அல்லது பதில் அளிக்க விருப்பம் இல்லை என்று நாகரீகமாக கூறுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது
ஆனால், அண்ணாமலையோ, கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் மிகவும் தரக்குறைவாக நடந்துகொண்டார். இந்த போக்கை அண்ணாமலை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.