chennireporters.com

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்த முதல்வருக்கு நன்றி கி.வீரமணி பாராட்டு..

தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்ததுபோல – அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தது பாராட்டத்தக்கது
தமிழர் தலைவர் கி.வீரமணி

தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சரான ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ மு.க.ஸ்டாலின் அவர்கள், புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை (14.4.2022) தமிழ்நாடு அரசு சமத்துவ நாளாக இனி கொண்டாடும்.

என்று நேற்று (13.4.2022) சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது, தித்திக்கும் தேன் போன்ற வரவேற்கப்படவேண்டிய வரலாற்று சிறப்புமிகுந்த பிரகடனமாகும்.அண்ணல் அம்பேத்கருக்குத்தமிழ்நாடு அரசு செய்துள்ள சிறப்பு!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூகநீதி நாளாக அறிவித்து, உறுதிமொழி ஏற்கச் செய்து, ஓர் அமைதிப் புரட்சிப் பொன்னேட்டை, திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றில் இணைத்தார்.

நேற்று அறிவித்திருக்கும் அறிவிப்பு மிகவும் பாராட்டி – வரவேற்கப்படும் – திராவிட இயக்க சாதனை மகுடத்தில் மற்றுமோர் ஒளிமுத்தே!காரணம், தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் புரட்சிக் கருத்துகள், சமத்துவ இலட்சியங்களுக்காகப் போர் புரிந்து, போராயுதங்களைத் தரும் அறிவாயுதத் தொழிற்சாலைகள்.

ஒரே (கொள்கை) நாணயத்தின் இரண்டு பக்கங்கள் டாக்டர் அம்பேத்கர் பேசப்படாத ஜாதி ஒழிப்பு மாநாட்டின் தலைமையுரையை, 1936-லேயே உரிமை பெற்று, தமிழிலேயே வெளியிட்டு, அம்பேத்கரை தமிழ்நாடு அறிந்து, வியந்து பாராட்டும்படி செய்தவர் தந்தை பெரியார்.

மும்பையில் தந்தை பெரியார் தலைமையில், அண்ணல் அம்பேத்கர் உரையாற்றினார். அப்பொழுது தந்தை பெரியாரின் தமிழ் உரையை ஆங்கிலத்திலும், அண்ணல் அம்பேத்கரின் ஆங்கில உரையைத் தமிழிலும் மொழி பெயர்த்தவர் அறிஞர் அண்ணா என்பது குறிப்பிடத்தக்க கூடுதல் செய்தியாகும்.

தமிழ்நாட்டில் அம்பேத்கர் பெயரில் கல்லூரி – சட்டப் பல்கலைக் கழகம்அம்பேத்கர் பெயரில் சென்னை வியாசர்பாடியில் அரசு கல்லூரி அமைத்தவர் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர். பிறகு அம்பேத்கர் பெயரில் தமிழ்நாடு சட்டப் பல்கலைக் கழகம் தலைநகர் சென்னையில்.

அம்பேத்கர் பிறந்த மண்ணில் அவர் பெயரை ஒரு கல்லூரியில் இணைத்தமைக்காக கடுமையான எதிர்போராட்டம் நடந்தது; தமிழ்நாட்டிலோ பலத்த வரவேற்பு. இதுதான் பெரியாரின் சமூகநீதி மண்ணின் தனிச்சாதனைதிராவிட மாடல் ஆட்சியின் இலட்சியங்களை இலக்காக்கிய சுயமரியாதை பூமியின் தனித்தன்மை!

தந்தை பெரியார் தம் வாழ்நாளில், அதிக தடவை சந்தித்த தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களே!தமிழ்தான் இந்தியா முழுவதிலும் பரந்து இருந்த மொழி – நாகர்களின் மொழி என்று ஆய்வுடன் எழுதியவர் அண்ணல் அம்பேத்கர்.

பர்மாவில் உலகப் பவுத்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியாரும் – அண்ணல் அம்பேத்கரும்!1953 ஆம் ஆண்டு பர்மாவில் தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஒன்றாக உலக பவுத்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

அப்போதுதான் டாக்டர் அம்பேத்கர் பவுத்தம் தழுவுவதற்கான முடிவின் இறுதி வடிவத்தை தந்தை பெரியாரிடம் கூறியபோது,‘’நீங்கள் பெருங்கூட்டத்துடன் சேருங்கள்’’ என்று யோசனை கூறியவர் தந்தை பெரியார்.

நாகபுரியில் 5 லட்சம் பேருடன் பவுத்த நெறிக்கு மாறினார் அம்பேத்கர் என்பது வரலாற்றுச் சுவடுகள்!மனுதர்மத்தை எரித்த இருவரும் சமத்துவத்துக்காக – பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட போராளிகள் – இருபெரும் தத்துவத் தலைவர்கள்!

அதனால் அந்தச் சுடரை அணையாது கொண்டு செல்கிறார் தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள நமது முதலமைச்சர்.

ஜாதியை ஒழிக்க அதன் ஆணிவேரான வர்ணதர்மம், சனாதன அடிபீடத்தை நொறுக்கச் சொன்னவர் டாக்டர் அம்பேத்கர்.

அவரது பிறந்த நாளை சமத்துவ நாளாகக் கொண்டாட அறிவித்திருப்பது அர்த்தமுள்ளது. அனைத்துத் தரப்பு ‘’அடிமை வகுப்பினரான’’ (‘’Servile Classes’’) எஸ்.டி., எஸ்.சி., ஓ.பி.சி., அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றுபடுத்தி – சமப்படுத்தி இணைத்துக் கூறும் அரிய சொற்றொடர் இது.

‘‘ஜாதியை, ஜாதி தர்மத்தைப் பரப்பிடும் மத நூல்களான இராமாயணமும், கீதையும் சமத்துவத்திற்கு எதிரான நூல்களே!’’ என்று துணிவுடன் – தந்தை பெரியார் போன்று அன்றே பேசிய, எழுதிய, அறிவு நாணயம் மிகுந்தவர் அம்பேத்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

-கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

14.4.2022
சென்னை

இதையும் படிங்க.!