தமிழக அரசியல் வரலாற்றில் நேர்மைக்கு பெயர் போன தலைவர் தமிழ தகைசால் விருது பெற்றவர் விடுதலைப்போராளி ஐயா தோழர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
முடிவுக்கு வந்த நூற்றாண்டு சகாப்தம்.. விடை பெற்றார் தோழர் நல்லகண்ணு..
கடந்த 20 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் தோழர் நல்லகண்ணு காலமானார். அவரது மறைவு செய்தி தமிழக மக்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயது மூப்பு, உடல்நலக்குறைவால் அவதி…
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் நல்லகண்ணுவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இப்படியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நல்லகண்ணுவுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை பின்னடவை சந்தித்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகம் உள்ளிட்ட பல கூட்டணி கட்சி தலைவர்களும் நேரில் சென்று அவரின் குடும்பத்தாரிடம் நல்லகண்ணு உடல் நலம் பற்றி விசாரித்தனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர். அதேசமயம் நல்லகண்ணு உடல்நலம் குறித்து வதந்திகளும் தீயாய் பரவ தொடங்கியது. நல்லகண்ணு உயிருடன் தான் இருக்கிறார் என கட்சி தலைமை வீடியோ வெளியிடும் அளவுக்கு உடல்நிலை பற்றிய தகவல்கள் வெளியானது.
![]()
விடைபெற்றார் விடுதலைப்போராளி..
இந்த நிலையில் 101 வயதான நல்லகண்ணு மருத்துவ சிகிச்சைகள் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவு கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பிற அரசியல் கட்சியினர், பொதுமக்கள், உழைக்கும் வர்க்கத்தினர் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நல்லகண்ணு 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரில் பிறந்தார். தனது 18வது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவர் கடைசி மூச்சு வரை அக்கட்சியில் இருந்து உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஆதரவாக களம் கண்டார். வயது மூப்பு காரணமாக மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக அரசியல் பயணத்தில் இருந்து விலகியிருந்தார். இருந்தாலும் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்றும் வந்தார்.
![]()
நல்லகண்ணு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி திடீரென வீட்டில் தவறி விழுந்தார். அப்போது காயமடைந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவருக்கு டிசம்பர் 25ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து ஜனவரி 8ம் தேதி வீடு திரும்பி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 1ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

