Chennai Reporters

ஆகஸ்ட் 17 திருமா என்னும் நெருப்பு பிறந்த தினம் இன்று.

விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளான இன்று அவரது அரசியல் பயணத்தை குறிக்கும் வகையில் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

அரியலூர் மாவட்டம் (அப்பொழுது திருச்சி மாவட்டம் ) அங்கனூரில் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 ம் நாள் இராமசாமி-பெரியம்மாள் பெற்றோருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தை கல்லனையை கட்டிய கரிகாற்சோழனைப் போல வரலாற்றில் தடம் பதிக்க வேண்டும் என்பதற்காகவே கரிகாற் சோழனின் இயற்பெயரான “திருமாவளவன்” என்கிற பெயரை தந்தை இராமசாமி சூட்டினார் .

பள்ளிக் கல்வி ( 1-8 ) அரசு நடுநிலைப் பள்ளி அங்கனூரில் படித்தார்,அந்த காலகட்டத்தில் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு நேர்ந்து விட்ட முடி நீண்டு வளர்ந்ததால், தந்தையை வற்புறுத்தி சலூனுக்கு அழைத்துக்கொண்டு போய் முடி வெட்டிக் கொண்டார். அதன்பிறகு தந்தைக்காக நேர்ந்து விட்டதை இன்றளவும் மொட்டை அடிக்கவே இல்லை .

எஸ் எஸ் எல் சி வரை ( 9-11) அரசு உயர்நிலைப் பள்ளி , திட்டக்குடி. வகுப்பறையில் ஒரு துண்டுச்சீட்டை வைத்துக்கொண்டு மாணவர்களோடு பேசியதை ஆசிரியர் கொடு என வாங்கி பார்க்க ,அதில் “கடவுளை மற ,மனிதனை நினை” என்ற பெரியார் வாசகம் இருந்தது. ஆசிரியர் தட்டிக்கொடுத்து அப்பொழுது அண்ணா எழுதிய நாடகத்தை திட்டக்குடி சென்று பார்க்க அறிவுறுத்தினார்.

பி யு சி (1978-79) கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி விருதாச்சலம். பி. எஸ். சி, வேதியியல் (1979-82) மாநில கல்லூரி சென்னை.
எம்.ஏ ( முதுகலை குற்றவியல் ) சென்னை பல்கலைகழகம் (1983-85). படிக்கும் போது தமிழ் மீதுள்ள பற்றின் காரணமாக “கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை” பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.(1984)

புரட்சியாளரிடம் விஞ்சி இருப்பது நாட்டுப் பற்றா சமுததாயப் பற்றா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்திற்கு நாட்டுப்பற்றே என்ற தலைப்பில் பேச ஒருவர் வராதபோது ,இவரை பேச வற்புறுத்த உடனே சரி என மேடை ஏறி பேசிஅனைவரின் பாராட்டை பெற்றார். தமது பேச்சால் அனைவரையும் இசைய வைக்க முடியும் என நம்பினார் .இதுவே இரா.திருமாவளவனுக்கு முதல் மேடை.

ஈழ விடுதலை ஆதரவு மாணவர் மாநாடு இரா.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. “விடுதலைப்புலி” என்ற ஈழத்தமிழர் ஆதரவு கையெழுத்து பத்திரிகையை ஆசிரியராக இருந்து நடத்தினார்(1984).

மீனவர் குப்பம் பகுகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை அழைத்து சமூக விழிப்புணர்வு கல்வி அளித்தார் . பிறகு தலித் மாணவ அம்பேத்கர்- இயக்க போராட்டங்கள் நடத்தி கல்லூரி மாணவாராக இருந்த போதே கைதானார். தலித் மீனவ இளைஞர் நல இயக்க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் (1985).

பி.எல் சென்னை சட்டக்கல்லூரி (1985-88 ).டாக்டர் பட்டமான பி.எச்.டி (குற்றவியல் துறை) மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பயின்று பல்வேறு அரசியல் களப் பணிகளுக்கு இடையிலும் முனைவர் பட்டம் பெற்றார்.

இந்திய அமைதிப்படையின் ஈழ அத்துமீரலை கண்டித்து (1986) கல்லூரி மாணவ கூட்டமைப்பை ஒருங்கிணைத்து இரா.திருமாவளவன் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்.

தமிழ் தேசியப் போராளியான இரா.திருமாவளவன் திராவிடர்கழகம் நடத்திய ஈழத்தமிழர் ஆதரவு “இரயில் மறியல் போராட்டத்தில்” பங்கேற்று கைதானார் (1986).

இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் பங்கேற்று கைது (1986),
ஈழத்தமிழர் பாதுகாப்பு கூட்டமைப்பு மனித சங்கிலி போராட்டத்திற்கு தலைமை (1987) , என போராட்டமே வாழ்க்கை என மாற்றிக்கொண்டார்
இரா.திருமாவளவன்.

கோவையில் தடய அறிவியல் துறையில் அறிவியல் உதவியாளராக (Scientific Assistant) பணியில் சேர்ந்து பணிபுரிந்தவர் , ஆட்குறைப்பு காரணமாக வேலையிழத்தார்.
மீண்டும் மதுரையில் உள்ள தடய அறிவியல் துறையில் , அறிவியல் உதவியாளர் (scientific assistant )பணியில் சேர்ந்தார் இரா.திருமாவளவன்.

“இந்திய தலித் பேந்தர் இயக்கம் ” மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் அ.மலைச்சாமி அவர்களை மதுரையில் சந்தித்தார்.ஏற்கனவே அவருடைய சகோதர் மூலம் இரா.திருமாவளவனின் பேச்சாற்றலை அறிந்ததால் கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்(1989).

மலைச்சாமி உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இறந்தார் (31.12.1989) .மதுரை தமுக்கம் கலையரங்கில் அவருக்கு இரங்கல் கூட்டம் இரா.திருமாவளவன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

” இந்திய தலித் பேந்தர் இயக்க” அமைப்பாளர் பொறுப்பை ஏற்க பலமுறை வற்புறுத்தியும் மறுத்து விட்டார். வேறுவழியின்றி ஒத்துக்கொண்ட இரா.திருமாவளவன் ஜனவரி 21 ,1990 “இந்தியஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் ” என பெயர் மாற்றி இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

” இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்” என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட என்ற வார்த்தையை நீக்கி “விடுதலை சிறுத்தைகள் ” என மாற்றினார். மதுரை கோ.புதுரில் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் முதல் கொடியை இரா. திருமாவளவன் ஏற்றினார் . (ஏப்ரல் 14,1990).கொடியில் நீலம் ,சிவப்பு சரிபாதியாக இருக்க நடுவில் வெள்ளை நட்சத்திரம் .நட்சத்திரத்தின் ஐந்து முனைகள் சாதி ஒழிப்பு ,பெண்விடுதலை உரிமை,தமிழ் தேசியம், வர்க்கபேதஒழிப்பு ,ஏகாதிபத்திய எதிர்ப்பு என ஐந்து இலட்சினைகளை கொண்டதாக வடிவமைத்தார்.

மராத் வாடா பல்கலை கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டியதால் தமிழர்கள் மீது சிவசேனா கட்சி தாக்குதல் நடத்தியது.இதனை கண்டித்து இரா.திருமாவளவன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இரயில் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். சுவரொட்டிகளை தானே எழுதி ஒட்டுதல் ,துண்டுப்பிரதிகளை எழுதி நகலெடுத்து மக்களிடம் விநியோகித்தல் போன்றவற்றை தானே செய்தார்.

இட ஒதுக்கீடு உச்ச வரம்பு பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டது.அதனை கண்டித்து விமான மறியல் போராட்டம் நடத்தியதால் இரா.திருமாவளவன் கைதானார்.அப்பொதுதான் “திமிறி எழுவோம் திருப்பி அடிப்போம்” “அத்துமீறுவோம் அடங்க மறுப்போம்” போன்ற பல முழக்கங்கள் இவரால் எழுதப்பட்டது.

திட்டக்குடி ,கடலூர் போன்ற பகுதிகளில் வன்னியர்களால் விசிக வைச் சார்ந்தவர்கள் மூன்று பேர் வெட்டிக்கொல்லப்பட்டனர்.இரண்டு குடிசைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. சாதூர்யமான அனுகுமுறையினை இரா.திருமாவளவன் கையாண்டார்.

தாமிரபரணி , பரமக்குடி துப்பாக்கி சூடு, சென்னகரம்பட்டி படுகொலை , திட்டக்குடி மற்றும் மேலவளவு படுகொலை , கண்டித்து பேரணி, ஆர்ப்பாட்டம் என அரசு பணியில் இருந்துகொண்டே நடத்தி கைதானார் இரா,திருமாவளவன்.

மேலவளவு முருகேசனுக்கு நினைவு மண்டபம் அமைக்க சம்பளத்திலிருந்து வீட்டுக்கு கூட கொடுக்காமல் ரூபாய் 90000 (தொண்ணூறு ஆயிரம் )அப்பொழுதே கொடுத்தது கவனிக்கத்தக்கது.

தேர்தல் பாதையை 1990 லிருந்து புறக்கணித்த விசிக , 1996 ல் நடந்த சட்ட மன்ற தேர்தலில் வாக்குப்பெட்டியில் இரட்டை வாக்குரிமை ,தலித் தனிதொகுதி என எழுதி போட்டது அரசியலில் கவனம் பெற்றது.

தாமக தலைவர் மூப்பனார் ஆலோசனையுடன் தேர்தல் அரசியல் தேவை என்பதை உணர்ந்து, தடய அறிவியல் துறை ” அறிவியல் உதவியாளர்” பணியினை இராஜினாமா செய்து விட்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் களம்காணுகிறார்.

சிதம்பரம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு 2 25 768 வாக்கு பெற்று இரண்டாம் இடம் பெற்றார் (1999).தேர்தல் நாட்களில் 504 குடிசைகள் ஒரே நேரத்தில் கொளுத்தப்பட்டது.மக்கள் பலரும் வாக்குச்சாவடிக்கு வரமுடியாத நிலை.வெட்டுண்ட மக்கள் மருத்துவமனையில் கிடந்ததைப் பார்த்த இரா.திருமாவளவன் மிகவும் வருந்தினார்.

திமுக ஆதரவுடன் உதயசூரியன் சின்னத்தில் மங்களூர் சட்ட பேரவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார் இரா.திருமாவளவன். (2001).

நவ 27 ,2002 தமிழறிஞர்களை கூட்டி பிறமொழிச் சொற்களை நீக்கச்சொன்னார்.தகப்பனாருக்கு இராமசாமி என்கிற பெயரை தொல்காப்பியன் என மாற்றி இரா.திருமாவளவன் என்கிற போராளி தொல் திருமாவளவன்என்றாகிறார். அதே மேடையில் 5000 தொண்டர்களுக்கு தமிழ்பெயர் சூட்டினார் .உலகிலேயே கட்சியில் உள்ள அனைவருக்கும் தமிழ் பெயர் சூட்டி அழகு பார்த்த ஒரே தலைவர் தொல்.திருமாவளவன் மட்டுமே மேதகு பிரபாகரனைப்போல.

தென்னாப்பிரிக்கா டர்பன் மாநகரில் நிற வெறிக்கான அனைத்துலக மாநாட்டில் (WCAR) பங்கேற்று பலருடைய கவானத்தையும் ஈற்றார்.செந்தமிழ் காவலர் விருது ( 3.4.03 ).

அரபு நாட்டில் துவக்கு மற்றும் விடுதலை சிறுத்தைகள் வாசகர் அணி இணைந்து தொல். திருமாவளவனுக்கு “எழுச்சித் தமிழர் விருது”தந்தது( 18.4.03). அவருடைய பிறந்த நாள் ” தமிழர் எழுச்சி நாள் ” என கொண்டாடப்படுகிறது. செம்மொழி செம்மல் விருது (ஜூலை 2003).

“விடுதலை சிறுத்தைகள் “மாத இதழ் 1999 ல் தொடங்கினார் . இதழைதொடர முடியாமல் கைவிட ,2003 லிருந்து” தமிழ்மண் ” என்ற பெயரில் “அமைப்பாய்த் திரள்வோம்” என எழுச்சி த்தமிழரின் தலையங்கத்தை தாங்கி வந்தது.தற்போது” நமது தமிழ்மண் ” என புதுப்பொளிவுடன் வரும் இதழின் ஆசிரியரான எழுச்சித்தமிழர் எழுத்து மற்றும் பேச்சுப் புரட்சி செய்து வருகிறார்.

மருத்துவர் இராமதாஸ் 2004 ஆகஸ்ட் 17 ல் அதாவது பிறந்த நாளன்று மேடையில் எழுச்சித்தமிழரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழகமே திரும்பிப் பார்த்தது.பழ .நெடுமாறன் மற்றும் டாக்டர் சேதுராமன் போன்ற தமிழ்பற்றாளர்களின் விருப்பபடி “தமிழ்பாதுகாப்பு இயக்கம் “ஆரம்பிக்கப்பட்டு அதன் தலைவராக எழுச்சித்தமிழரும் ,காப்பாளராக இராமதாஸ் அவர்களும் பொறுப்பேற்கிறார்கள்.மேலும் இந்தி எதிர்ப்பு போரில் தீவிரமாக களமாடுகிறார்.

சென்னை வேளச்சேரியில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நடத்தி, இலவச கல்வி அளித்து வருகிறார் எழுச்சித்தமிழர் .

விசிக வின் மாநில ,மாவட்ட அமைப்பு,கிளை அமைப்புகள் முற்றிலுமாக கலைக்கப்பட்டு ( அக்டோபர் 2,2007),எல்லா சமூக மக்களுக்குமான அமைப்பாக மாற்றினார். தலித் அல்லாதோர் பலரும் விசிக வில் சேர்க்கப்பட்டனர். இஸ்லாமியர்,கிருத்துவர்கள் என முக்கியத்துவம் தரப்பட்டது .
ஆக ஒடுக்கப்பட்டோர் அனைத்து சாதி மக்கள் , மதத்தினர் விசிக வில் இணைத்துக் கொண்டனர்.எல்லோரும் மதிக்கும் தலைவராக உருவெடுத்தார் எழுச்சித்தமிழர்.

சிகரம் விருது (1.8.07 ) இந்தியா டுடே வழங்கியது . கனடா-விடுதலைப் பேரொளி விருது, துபாய்- நல்லிணக்க நட்சத்திரம் விருது, கேரளா-National Excellence Award, “இந்தியாவின் ஸ்பார்ட்டகஸ்” என விருதுகளின் நாயகனானார். எழுத்தாழும் ,செயலாலும் , பேச்சாலும் சிந்தனையாலும் உச்சத்தை அடைந்தவருக்கு
தூயதமிழ் செம்மல் விருது (27.10.2007) வழங்கப்பட்டது .

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு,
“ஈழப்போரை நிறுத்த வேண்டும்” என்ற ஒற்றை கோரிக்கைக்காக தொடர் ( சாகும் வரை ) உண்ணாநிலைப் போராட்டம் (2009 ஜனவரி 16-19) எழுச்சித்தமிழரால் தொடரப்பட்டது. உடல் நிலை மோசமாக, மருத்துவர் இராமதாஸின் வற்புறுத்தலால் போராட்டம் நான்கு நாள் கழித்து கைவிடப்பட்டது.

சிதம்பரம் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்(2009). ஈழத்தமிழர்கள் மற்றும் விடுதலை புலிகளை ஆதரித்து பாராளுமன்றத்தில் தமிழில் பேசிய முதல் கன்னிப்பேச்சு இந்திய அளவில் கவனம் பெற்றது .(2.06.2009).

அம்பேத்கர் தேசிய விருது -(7.9.2011) ,இரண்டாம் புரட்சியாளராக பரிணாமம்.வாழ்நிலை சாதனையாளர் விருது-(6.3.12) மக்களுக்காக தன்னை அர்பனித்தவர்.கௌரவ டாக்டர் பட்டம்.
பல்துறை அறிவு ,புதிய சிந்தனை மற்றும் புதிய சித்தாந்தம் கொண்டவராக எழுச்சித் தமிழர் இருப்பதால் யுத்திகளோடு தொலைநோக்கு பார்வையில் களமாடுகிறார்.

காவிரி நீர் உரிமை ஊர்தி பயணம், (4.10.2012) ,விவசாயம் பாதுகாப்பு இயக்கம் என எழுச்சித் தமிழரால் முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்றம் முன்பு தேசிய மது விலக்கு கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்த ஒரே தலைவர் எழுச்சித்தமிழர் மட்டுமே .

எழுச்சித் தமிழர் பிறந்த நாள் பொன் விழா-(2012) சிறுத்தைகளிடம் மாவட்டம் தோறும் பொற்காசுகள் வழங்கும் விழா என கொண்டாடப்பட்டது.
கலைஞரிடம் மேஜர் ஜெனரல் என பாராட்டுப் பெற்றவர் .

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவோடு ஈழம் சென்று முள்வேலி முகாம் மக்களை சந்தித்து ஆறுதல் சொன்ன களப்போராளி.”போரின்போது திருமாவளவன் இலங்கையில் இருந்திருந்தால், இப்பொழுது இங்கே இருந்திருக்க மாட்டார்” என சொன்னான் இராஜபக்சே.ஆக மேதகு பிரபாகரனுக்கு இணையான எதிரியாக எழுச்சித்தமிழரைத்தான் அவன் பார்த்தான் என்பது குறிப்பிடத்தக்கது .

கலைஞர் தலைமையில் அமைக்கப்பட்ட ஈழ ஆதரவு டெசோ அமைப்பில் எழுச்சித்தமிழர் ஒரு உறுப்பினர்.

சேலத்தில் கல்வி உரிமை மாநாடு -ஆரம்ப படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை இலவச கல்வி என இடி மழைகளுக்கிடையிலும் எழுச்சியோடு முழங்கினார்.

தொல்காப்பியர் நினைவு அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு , இலவச மருத்துவம் மற்றும் நலத்திட்டங்கள்.மேலும் திருமா பயிலகம் வாயிலாக அனைத்து போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை அம்பேத்கர் திடலில் எழுச்சித்தமிழர் வழிகாட்டல் படி.

விடுதலை சிறுத்தைகள் கட்சி “வெள்ளிவிழா மாநாடு” எழுச்சித்தமிழர் தலைமையில் மதுரையில் நடைபெற்றது -(25.04.2015).

சென்னை முழுவதும் கனமழை, செம்பரப்பாக்கம் ஏரியால் மூழ்கியபோது உணவுப்பொட்டலங்கள்,பாய் போர்வை போன்ற பொருட்கள் வழங்கியதோடு, சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த தலைவராக பலராலும் பாராட்டப்பெற்றார்.

தர்மபுரி இளவரசன் , ஓமலூர் கோகுல்ராஜ், டி எஸ் பி விஷ்னுப்பிரியா படு கொலைக்கான நீதி கேட்பு போராளி. கோகுல்ராஜ் உடலை புதைப்பதற்கு மண்வெட்டி பிடித்து குழி தோண்டியது மகத்தானதாக பார்க்கப்பட்டது .

கூட்டணி ஆட்சி கோட்பாடு. இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக “மக்கள் நலக் கூட்டனி” யை உருவாக்கினார் (2016) எழுச்சித்தமிழர் . இதில் விசிக மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது. தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருகிறார் .

பெண்களுக்கு தேர்தலில் 25 % சீட்டுகளை ஒதுக்கியதன் மூலம் இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக சீட்டுகளை சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கிய ஒரே கட்சி விசிக என முத்திரை பதித்துள்ளது.

சிறுத்தைகள் தந்த தங்கக் காசுகளைக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கென காட்சி ஊடகமான “வெளிச்சம் தொலைக்காட்சி” எழுச்சித்தமிழரால் தொடங்கப்பட்டது .

கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின் ,சசிகலா போன்ற இரண்டு திராவிட கட்சித் தலைமைகளையும் கவர்ந்த ஒரே தலைவர் .

களத்தில் முதல்வர். மீத்தேன், நியுட்ரினோ ,ஹைட்ரோ கார்பன் , நீட் , மாட்டுக்கறி , ஜல்லி கட்டு ,தலித் வன்கொடுமை ,டெல்டா பெட்ரோலிய மண்டலம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு , எட்டுவழிச்சாலை எதிர்ப்பு என இப்படி மக்கள் போராட்டம் இவருடைய தலைமையில் தமிழகமெங்கும் முன்னெடுக்கப்பட்டது

ஈழத்தமிழர் ஆதரவு இயக்கம் தனி ஈழ கோரிக்கையை முன்வைத்து நடந்து வருகிறது .மது ஒழிப்பு போராட்டம்,கோடி கையெழுத்து இயக்கம் என விடுதலை சிறுத்தைகளால் நாடு முழுவதும் எழுச்சித் தமிழர் அறிவுறுத்தல் படி தொடர்கிறது.
கண்டது.

வன்கொடுமை தடுப்பு சட்டம் நீர்த்து போகச்செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அனைத்து தலித் தலைவர்களையும் சென்னை சைதாப்பேட்டையில் ஒருங்கிணைத்த மாபெரும் பேரணிக்கு எழுச்சித்தமிழர் தலைமை தாங்கினார். தமிழகத்தின் கவனம் திரும்பியது.

விசிக சமூக நீதி தளத்தில் எத்தனையோ மாநாடுகளை கண்டது. அடக்குமுறை சட்டங்கள் எதிர்ப்பு மாநாடு — 2003
இந்துத்துவா பண்பாட்டு திணிப்பு மாநாடு — 2004
இரட்டை வாக்குரிமை மாநாடு — 2005
பஞ்சமி நில மீட்பு மாநாடு — 2005
ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு — 2006
தமிழக பொன்விழா மன்னுரிமை
மாநாடு — 2006
சமூக நீதி மீட்பு மாநாடு — 2006
மன்னுரிமை மாநாடு — 2007
கருத்துரிமை மாநாடு — 2008
தலித் கிருத்துவார் எழுச்சி
மாநாடு — 2008
தமிழீழ அங்கீகார மாநாடு — 2008
எழும் தமிழீழ இனவிடுதலை
மாநாடு — 2009
உழைக்கும் மகளிர் விடுதலை
மாநாடு — 2010
மரணதண்டனை ஒழிப்பு மாநாடு — 2011
சமூக அமைதிக்கான மக்கள்
ஒற்றுமை மாநாடு — 2013
பொன்விழா நிறைவு மாநாடு — 2013
கல்வி உரிமை மாநாடு — 2014
வெள்ளி விழா மாநாடு –2015
மதுஒழிப்பு மகளிர் மாநாடு — 2015
மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு — 2016
நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு — 2016
அரசியல் சட்ட பாதுகாப்பு மாநாடு — 2016
மாணவர்களுக்கான கல்வி உரிமை மாநாடு –2017
பழங்குடியினருக்கான சிறப்பு
மாநாடு –2017
ஆனவப்படுகொலை ஒழிப்பு
மகளிர் மாநாடு — 2017
மாநில சுயாட்சி மாநாடு — 2017 .
மகளிரும் அர்ச்சகராகும் சட்ட
மாநாடு — 2018
மாநில சுயாட்சி மாநாடு –2018 (ஆந்திர)
தேசகாப்போம் பேரணி –2019
தேசம் காப்போம் மாநாடு– 2019
மாநில சுய ஆட்சி மாநாடு தமிழகம் ,புதுவை ,ஆந்திரா என மற்ற மாநிலங்களிலும் கவனம் பெறுகிறது எழுச்சித்தமிழரால்.

காவிரி மீட்பு நடை பயணம் ஐந்து நாட்கள் அரியலூர் தொடங்கி கடலூர் வரை அனைத்துக்கட்சி தோழர்களும் எழுச்சித்தமிழர் தலைமையில் நடந்தே சென்றனர்.இந்த பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

எழுச்சித் தமிழரால் எழுதி வெளியிடப்பட்ட அமைப்பாய்த் திரள்வோம் என்ற நூல் கட்சி சார்பற்று அனைவராலும் ஆய்வாரங்கம் நடத்தப்பெற்று மிகுந்த பாராட்டைப் பெற்று வருகிறது.இது இன்னொரு திருக்குறள் என்ற பெருமையை பெறும் எனலாம் .

பனை மரம் நடுவோம்- தமிழர் பாரம்பரியம் காப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் பனை விதை சேகரித்தல் நடுதல் என ஐந்து நாட்களாக காடு மேடுகளில் மழை வெயில் என களமாடியவர் எழுச்சித்தமிழரே. ஒரு கோடி பனை நடுவது என்ற இலக்கோடு மாநிலம் முழுவதும் பனை நடு விழா தொடங்கியதில் ஒட்டு மொத்த தமிழகமும் உற்றுப்பார்கிறது அந்த அங்கனூர் அதிசயத்தை.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக பானை சின்னத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்குமான குரல்களாக பல்வேறு தலைப்புகளில் முழங்கிகொண்டு வருகிறார்.

சட்டமன்ற தேர்தல் –2021 இல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் 6 இடங்களில் நின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்கு இடங்களில் வெற்றி பெற்றது டாக்டர் எழுச்சித்தமிழரின் இமாலய சாதனைகளில் ஒன்று. இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டது டாக்டர் எழுச்சித்தமிழரின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை தேசியவிடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும் என்று டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்கள் மக்களவையில் கோரிக்கை விடுத்தார் .

மேலும் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவநாளாக அறிவிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இரண்டும் நிறைவேறியது.

முன்னதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருமாவளனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!