உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே மத பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 116 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹத்ராஸ்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் நடைபெற்ற சத்சங்க (Satsang) நிகழ்வில், சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து எட்டா பகுதி மூத்த காவல் அதிகாரி ராஜேஷ் குமார் கூறுகையில், “புல்ராய் கிராமத்தில் நடைபெற்ற சத்சங்க நிகழ்வில் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இக்கூட்ட நெரிசலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். (தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது). இதில் பலர் பெண்கள் ஆவர். மீட்கப்பட்டவர்களின் உடல் எட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,
இதனிடையே, உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், புல்ராய் கிராமத்தில் நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தும் படி அதிகாரிகளுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உயிரிழந்த குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள ஆங்கரா ஏடிஜிபி மற்றும் அலிகார் கமிஷ்னர் தலைமையில் தனிப்படை அமைக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு மேற்கொள்ள தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை டிஜிபி சென்றுள்ளனர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கும் விதாமாக, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ் குமார் கூறும் போது, “இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 50 முதல் 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது” என தெரிவித்தார்.
தலைவர்களின் இரங்கல்: ஹத்ராஸில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிந்தவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ‘X’ பக்கத்தில், “ஹத்ராஸில் நடந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்த சம்பவம் மனதிற்கு வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் படுகாயம் அடைந்தவர்ககள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடி.
மேலும் பிரதமர் மோடி தனது ‘X’ சமூக வலைத்தள பக்கத்தில், “ஹத்ராஸ் விபத்து குறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் கேட்டறிந்தேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்யும் நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களும் ஹத்ராஸில் நடந்த கோர விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலும், சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குண்மடைய வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி .
அதேநேரம், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான நெரிசலில் விலைமதிப்பற்ற உயிர்களின் சோகமான இழப்புகளால் வேதனையில் ஆழ்ந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .
மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடந்த கோர சம்பவத்தில் அதிக அளவில் மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்” என தனது ‘X’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உ. பி மாநிலம் அத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தில் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களும் இல்லை, ஆக்சிஜன் சிலிண்டரும் இல்லை. அரசு நிர்வாகம் முடங்கிப் போய் உள்ளது என்று உத்தரப்பிரதேச மாநில அரசாங்கத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயலிழந்து போன உ.பி மாநில அரசின் செயல்பாடுகள் மனித சமூகத்துக்கு எதிராகவே இருக்கிறது.