Chennai Reporters

“ஆவின் காப்பாற்றப்படுமா..? வீழ்த்தப்படுமா…?” மக்களின் (தமிழக) முதல்வரே முடிவு செய்யட்டும்.

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 1000ம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது. இந்நிலையில் திமுக தலைமையில் புதிய அரசு அமைந்ததும் முறைகேடுகளை சரி செய்து ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆவின் நிர்வாக இயக்குனராக கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்.

ஆவின் நிர்வாக இயக்குனராக கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் பொறுப்பேற்றதும் ஆவினுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட காரணமாக இருந்த C/F ஏஜென்ட் எனும் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் முறையை அதிரடியாக ரத்து செய்ததோடு, முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பினாமிகளாக இருந்து ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட பொதுமேலாளர்கள் சுமார் 34பேரை ஆவின் வரலாற்றிலேயே முதன் முறையாக கடந்த 17.07.2021அன்று பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

நிர்வாக இயக்குனர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்களின் அதிரடி நடவடிக்கைகளை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்றதோடு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஊழல் முறைகேடுகளில் தொடர்புடைய அந்த 34பொது மேலாளர்களையும் பணியிட மாற்றம் செய்வது மட்டுமே முறைகேடுகளை தடுக்க தீர்வாக அமையாது எனவும் அவர்களை பணியிட மாற்றம் செய்ததோடு பணியிடை நீக்கம் செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிர்வாக இயக்குனர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்ட 34 பொது மேலாளர்களில் ஆறு பேரை அதாவது ஜெயக்குமார் (கோவை) காஞ்சிபுரம்-திருவள்ளூருக்கும்,  இளங்கோவன் (நந்தனம் அலுவலகம்) சிவகங்கைக்கும், ராஜசேகர் (சிவகங்கை) கோயம்புத்தூருக்கும், தங்கமணி (நீலகிரி) புதுக்கோட்டைக்கும், வெங்கடாசலம் (புதுக்கோட்டை) நீலகிரிக்கும், சதீஷ் (தூத்துக்குடி) அம்பத்தூருக்கும் பணியிட மாற்றம் செய்து நேற்று (24.09.2021) நிர்வாக இயக்குனர்  கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் உத்தரவிட்டுள்ளதோடு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆறுபேரும் அவர்களுக்கான பணி மாறுதல் இடத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மேற்கண்ட பணியிட மாற்றம் தொடர்பான உத்தரவு வெளியாகி 24மணி நேரம் ஆவதற்குள் ஆறு பொதுமேலாளர்களுக்குமான பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்து அவரவர் பணியாற்றும் ஒன்றியங்களிலேயே பணியாற்றுமாறு நிர்வாக இயக்குனர் 25.09.2021 தேதியிட்ட கடிதம் வாயிலாக உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருப்பதோடு 24மணி நேரத்தில் இரண்டு விதமான உத்தரவுகளை பிறப்பித்துள்ள ஆவின் நிர்வாக இயக்குனரின் உத்தரவு நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

ஏனெனில் ஏற்கெனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆவின் பொதுமேலாளர்கள் 34பேரும் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முன் வேறு எந்த ஒன்றியங்களுக்கும் மாற்றப்பட முடியாது என்கிற நிலையில் ஒருவேளை அவ்வாறு பணியிட மாற்றம் செய்தே ஆகவேண்டும் என்கிற சூழல் இருக்குமானால் அது தொடர்பான கோப்புகள் தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முதல்வரின் ஒப்புதல் பெற்ற பிறகே அறிவிப்பு வெளியிட முடியும்.

ஆனால் அந்த நடைமுறை கடைபிடிக்கப்படாமல் ஆவின் நிர்வாக இயக்குனர் அவர்களால் ஆறு பொது மேலாளர்களை அவசர அவசரமாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிடவும், அவ்வாறு உத்தரவிடப்பட்ட அவரது ஆணையை 24மணி நேரத்திற்குள் அவரே ரத்து செய்யவும் வேண்டிய அவசர அவசியம் ஏன் வந்தது..? அப்படியானால் ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்களை சுயமாய் செயல்பட விடாமல் அவருக்கு பின்னிருந்து ஏதோ ஒரு சக்தி அழுத்தம் கொடுக்கிறதோ..? என்கிற ஐயம் அழுத்தமாக எழுகிறது.

ஏற்கனவே ஆவினில் ஊழல், முறைகேடுகள் பெருக ராஜேந்திர பாலாஜியின் வலதுகரமாக இருந்த ரமேஷ்குமார், ராஜேஷ்குமார், சிவக்குமார், ராஜசேகர், புகழேந்தி உள்ளிட்ட அதிகாரிகளை வெறும் பெயரளவில் மட்டும் பணியிட மாற்றம் செய்து விட்டு அதே அதிகார பலத்துடன் கூடிய பதவியில் வைத்திருந்தால் ஆவினில் எப்படி முறைகேடுகள் தடுக்கப்படும்..?

பால் கொள்முதலை விட பால் விற்பனை மிகவும் குறைவாக இருப்பதால் ஆவினில் சுமார் 16ஆயிரம் டன் பால் பவுடர் மற்றும் 6ஆயிரம் டன் வெண்ணெய் தேக்கமடைந்துள்ளது. ஒரு கிலோ பால் பவுடர் உற்பத்திக்கு செலவினங்கள் உட்பட 310ரூபாய்க்கு மேல் அடக்கவிலை ஆன நிலையில் அதில் டன் கணக்கில் அண்டை மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒரு கிலோ பால் பவுடர் 201ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்.

அதுமட்டுமின்றி தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவிருப்பதால் நெய், வெண்ணெய் போன்ற பால் பொருட்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அதற்கான தேவை அதிகரிக்கும் சூழலில் தற்போது ஆவினில் தேக்கமடைந்துள்ள சுமார் 6ஆயிரம் டன் வெண்ணெயில் சுமார் 1600டன் வெண்ணையை வடமாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவரின் தனியார் நிறுவனத்திற்கு உற்பத்தி செலவில் இருந்து ஒரு கிலோவிற்கு 150ரூபாய்க்கு மேல் இழப்பில் கிலோ ஒன்றுக்கு 230.00ரூபாய் என்ற அடிமாட்டு விலைக்கு விநியோகம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்துள்ளது. (இதுவே வணிக சந்தையில் ஒரு கிலோ வெண்ணெய் 550.00ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது) பால் பவுடர், வெண்ணெய் விற்பனை மூலம் மட்டும் ஆவினுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

கடந்த கால ஆட்சியில் ஊழல் முறைகேடுகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த ஆவின் நிறுவனம் திமுக ஆட்சியில் சீர்செய்யப்பட்டு இழப்புகள் சரி செய்யப்பட்டு நல்ல நிலைக்கு கொண்டு செல்லப்படும் என நம்பியிருந்த நிலையில் அந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்க மீண்டும் ஆவினில் சதி நடக்கிறதோ என்கிற சந்தேகம் அழுத்தமாக எழுகிறது.

எனவே ஆவின் விவகாரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதோடு ஆவினை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இணைப்பு :- 24.09.2021 மற்றும் 25.09.2021ம் தேதியிட்ட ஆவின் நிர்வாக இயக்குனர் கடிதம்

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
25.09.2021 / மாலை 5.31மணி.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!