பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற’பறவையை கண்டான் விமானம் படைத்தான்’ என்ற பாடலில் ‘எதனைக் கண்டான் மதங்களை படைத்தான்?’ என்று கண்ணதாசன் எழுதியதை அனுமதிக்க முடியாது என்றனராம் தணிக்கைத் துறையினர்.தணிக்கைத் துறையினர் திருத்தச் சொன்ன வரியை வாசித்த கண்ணதாசன்,
‘நான் சரியாகத்தானே எழுதி யிருக்கிறேன்’ என்றார்.
‘இல்லை! மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல.’ என, தணிக்கைத் துறையினர் மறுத்தனர்.
கண்ணதாசன் சிரித்தபடியே, ‘கடவுளா மதத்தை உருவாக்கினார்? கடவுள் பெயரைச் சொல்லி, மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும்… அதைத்தானே நான் எழுதியிருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
நாதியிலார் நாதிபெற
நாப்படைத்தார்!
நாற்பத்தி அய்ங்கோடி
மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப்
பிறந்து வந்தார்!
பிறக்கையிலே பெரியாராய்த்
தான் பிறந்தார்!
என்று பெரியாரைப் பாடியவர்
கவியரசர் கண்ணதாசன்.
இப்படி எழுதியவர் தான் பின்னாளில் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதினார்.
கண்ணதாசன் ஏன் இப்படி மாறினார்? என்ற கேள்வி எழுகிறதல்லவா?அதற்கான காரணத்தை இதோ அவரைப்பற்றி அவரே செய்த சுயவிமர்சனம் சொல்கிறது பாருங்கள்:
“என்னையே நான் விமர்சனம் செய்து கொண்டால், இப்படித்தான் சொல்வேன் முட்டாள்களிடையே வாழ்ந்து கொண்டிருந்த கெட்டிக்காரன் ஒருவன், அவர்களோடு பழகத் துவங்கி,முட்டாளாக செத்துப் போனான்”
இன்று கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்!