மல்லி பூ சென்ட் பூசிக்கொண்டு பண்ணை வீட்டில் கட்டிலுக்கு அடியில் போர்வை போர்த்திக்கொண்டு பதுங்கி இருந்த பெண் புரட்சிப்புலி நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்.
சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சமூகப் பாதுகாப்பு கோரி பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசுகையில், நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து 4 வருஷம் ஆகுது. இங்க சினிமாவை விடுங்க. தொலைக்காட்சிகளில் நடுவர் ஆக கூட எனக்கு வாய்ப்பு தரக் கூடாது என மேலிடத்தில் இருந்து பிரஷர் தருவதாக சொல்கின்றனர்.
சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி, ஆரிய வந்தேறி என்கிறார்கள். யார் ஆரிய வந்தேறி ? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க. அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும். 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே..
ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.
300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க என்றார். மேலும் ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என கஸ்தூரி பேசியிருந்தார்.
இந்த கஸ்தூரியின் பேச்சுக்கு பலர் தனிநபர் தாக்குதல்கள் நடத்திய நிலையில், கஸ்தூரி மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இது தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில், நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 192, 196(1),(ஏ), 353(1)(பி) மற்றும் 353(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், கஸ்தூரியை காவல்துறை விசாரிக்க உள்ளதை அறிந்த அவர் காவல்துறை சம்மன் அளிக்க வருவதற்குள் போயஸ் கார்டன் வீட்டை பூட்டிக் கொண்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
அதேநேரம் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நியைத்தில் அளித்த புகாரின்படி, நடிகை கஸ்தூரி மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதேபோல் கோவை மாநகர காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் மீதும் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே நடிகை கஸ்தூரி எந்த நேரத்திலும் காவல்துறை தம்மை கைது செய்யலாம் என கருதி முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரியை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி எழும்பூர் ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையில் பெண் காவலர்கள் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் கடந்த ஒருவாரமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பஞ்சகுட்டா என்ற இடத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலகிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கஸ்தூரி பதுங்கி இருப்பதை தனிப்படையினர் உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து தனிப்படையினர் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் முகாமிட்டு தயாரிப்பாளர் பாலகிருஷ்ணாவின் பண்ணை வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கஸ்தூரி, காவல்துறையினர் வருவதை அறிந்து, பண்ணை வீட்டில் ரகசிய அறை ஒன்றில் பதுங்கியதாக கூறப்படுகிறது. தனிப்படையினர் பண்ணை வீடு முழுவதும் தேடியும் கஸ்தூரி கிடைக்கவில்லை. அதேநேரம், பண்ணை வீட்டில் உள்ள ரகசிய அறையை திறந்து சோதனை செய்த போது, அங்கும் கஸ்தூரி இல்லை எனத் தெரிந்து திடுக்கிட்டனர்.
இதையடுத்து பெண் காவலர் உதவியுடன் மீண்டும் ரகசிய அறையினுள் சென்று அங்கிருந்த படுக்கை அறையை பார்த்தபோது அந்த அறை முழுவதும் ‘மல்லிகைப் பூ சென்ட் வாசம் வீசியது’. இதனால் தனிப்படையினருக்கு நடிகை கஸ்தூரி இங்கேதான் பதுங்கி இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். பிறகு பெண் காவலர் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் சோதனை செய்து பார்த்தனர். அப்போது, நடிகை கஸ்தூரி போர்வையை தன்மீது போர்த்திக் கொண்டு படுத்திருந்தைக் கண்டுபிடித்து கஸ்தூரியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கஸ்தூரியை தனிப்படை ஐதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக 13 மணி நேரம் நீண்ட பயணத்திற்கு பிறகு நேற்று 12 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதற்கு முன்பாக நடிகை கஸ்தூரிக்கு தனிப்படையினர் இரவு உணவுக்காக அவரிடம், அசைவம் உணவு வேண்டுமா அல்லது சைவ உணவு வேண்டுமா என்று கேட்டு அவர் விரும்பிய உணவை வாங்கி கொடுத்தனர்.
பிறகு நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 5 மணிக்கு சூடாக ஒரு கப் காபியையும் காவல்துறையினர் வாங்கி கொடுத்தனர். பிறகு காலை ஒரு செட் பூரி மற்றும் மசால் வடையை வாங்கி கொடுத்து அவரை பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தனர். உணவு அருந்திய ஓட்டலிலேயே நடிகை கஸ்தூரி உதட்டுச் சாயம் மற்றும் முகத்தில் பவுடரை பூசிக் கொண்டு தன்னை அழகுப்படுத்தி கொண்டார். பிறகு வாகனம் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் வந்தடைந்ததும், கேமராக்கள் முன்பு முகமலர்ச்சியுடன் வணக்கம் செலுத்தியபடி கஸ்தூரி காவல் நிலைத்திற்குள் போஸ் கொடுத்தபடி சென்றார்.
பின்னர் கஸ்தூரியிடம் எழும்பூர் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசியது குறித்து விளக்கம் அளித்தார். அதை காவல்துறை வழக்கு மூலமாக பதிவு செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கஸ்தூரியை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு கஸ்தூரியை எழும்பூர் 5-வது நீதிமன்ற நடுவர் ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தினர்.
அவரை நீதிமன்ற நடுவர் ரகுபதி ராஜா வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடிகை கஸ்தூரியை வாகனத்தில் அழைத்து சென்று புழல் மத்திய சிறையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக கஸ்தூரியை நீதிமன்ற வளாகத்தில் இருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்ல காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்து வந்த போது, கேமராக்களை கண்டதும் ‘நீதி வெல்லட்டும்….’ என கோஷம் எழுப்பினார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரியை மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் கோயம்புத்தூர் காவல்துறை அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.