ரவுடிகள் மற்றும் குற்ற பின்னணி, மணல், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் போலீசார் தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது மாமுல் வாங்கியது தெரிய வந்தால் மன்னிப்பே கிடையாது அவர்களை உடனே டிஸ்மிஸ் தான் செய்வேன் என்று விழுப்புரத்தில் நடந்த போலீஸ் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் தமிழக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் எச்சரிக்கை விடுத்தார். இந்த செய்தி தமிழக போலீசார் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டதும் தமிழகம் முழுவதும் போலிஸ் அதிகாரிகளை சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடலூர் எஸ்பி ஆபீசில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு எப்படி பணி செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கினார். மேலும் பொதுமக்கள் மத்தியில் போலீசாருக்கு நன்மதிப்பு பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் மாவட்டம் மற்றும் மாநகரம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ரவுடிகள் பட்டியல் அவர்களின் வழக்கு விபரம் சிறையில் உள்ளவர்கள் குறித்த தகவல் தலைமறைவாக உள்ளவர்கள் வாரண்ட் உள்ளவர்கள் நீண்ட நாட்கள் நீதிமன்றம் செல்லாமல் இருப்பவர்கள் குறித்த பட்டியலை தயார் செய்து தனக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம், விழுப்புரம் எஸ்பி தீபக் சிவராஜ், கள்ளக்குறிச்சி எஸ்பி ராஜீத் சதுர்வேதி மற்றும் மூன்று மாவட்டத்தில் உள்ள ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மூன்று மணி நேரம் நடந்த அந்த கூட்டத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தமிழக காவல்துறை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. நம்மிடம் நவீன டெக்னாலஜி போதுமான அளவிற்கு காவலர்கள் இருக்கிறார்கள். குற்றங்களை விரைவில் கண்டுபிடிப்பதில் நாம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
ஆனால் பொதுமக்கள் மத்தியில் போலிசார் இணக்கமாக போக முடியவில்லை. ஏனென்றால் காவல் நிலையத்திற்கு வரும் மக்களுடன் அன்பாக பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. எனவே இனிமேல் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் அன்பாக பேசுங்கள். அவர்கள் குறைகளை காது கொடுத்து கேளுங்கள். அப்போதே அவர்களின் குறைகள் பாதித்த தீர்ந்து விட்டதை போல அவர்கள் உணர்வார்கள். பொதுவெளியில் பொதுமக்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்கு உதவுங்கள் பொதுமக்களும் காவல்துறையினரும் நெருக்கமாக இருந்தால் சமூகத்தில் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அரசு கொடுக்கும் சம்பளத்திற்கு உண்மையாக விசுவாசித்துடன் பணியாற்றுங்கள் என்று கூறினார்.
இனிமேல் ரவுடிகளுடன் தொடர்பில் இருந்தாலோ அல்லது குற்ற சம்பவம் செய்யும் நபர்களிடம் நெருக்கம் காட்டி இருந்தால் அல்லது லஞ்சம் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மன்னிப்பே கிடையாது அவர்களை உடனடியாக டிஸ்மிஸ் தான் செய்வேன் என்று அனல் பறக்கும் விதத்தில் பேசினார். அப்போது அதிகாரிகளின் முகம் வாடி இருந்தது
டிஎஸ்பிக்கள் அன்றாடம் மாலை மற்றும் இரவு நேரங்களில் கண்டிப்பாக ரவுண்ட்ஸ் போக வேண்டும். நீங்கள் போனால் தான் உங்களுக்கு கீழ் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் சரியாக வேலை பார்ப்பார்கள். இதனால் சமூகத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துவிடும். இனி கள்ளச்சாராயத்தால் மரணம் எதுவும் ஏற்படக்கூடாது கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நெஞ்சை நிமிர்த்தி வேலை செய்யுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் அறிவுரை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் தினமும் தனக்கு அறிக்கை தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தனது ஆட்டத்தை இப்போதுதான் பார்ப்பீர்கள் என்பதைப் போல அடித்து ஆடத் தொடங்கி விட்டார் என்கிறார்கள் டிஜிபி ஆபிஸ் அலுவலக த்தில் உள்ள உளவுத்துறை அதிகாரிகள்.