chennireporters.com

அதிமுக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: சென்னை சட்டமன்ற விடுதியில் தங்கியிருக்கும் வேலுமணியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை.

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி வீட்டில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது தவிர தமிழகத்தில் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அரசு ஒப்பந்த பணிகள் வாங்கி தருவதாக கூறி ஒரு கோடியே 20 லட்சம் மோசடி செய்து விட்டதாக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது இது தவிர எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலுமணி மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே குனியமுத்தூர், சுகுணாபுரம் இல்லத்தில் அதிமுக ஆதரவாளர்கள் திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இது தவிர அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் தெருவிளக்கு அமைக்கப்பட்டதில்  408கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று வந்ததாக அறப்போர் இயக்கம் ஏற்கனவே புகார் அளித்து இருந்தது.

அது தவிர திமுக சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் பாரதியும் வேலுமணி மீது புகார் அளித்திருந்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் வேலுமணி ஒரு முக்கிய அசைக்கமுடியாத சக்தியாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சட்டமன்ற விடுதியில் தங்கியிருக்கும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இது தவிர அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!