திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்டு இறந்த நிலையில் அவருடைய தம்பி நவீன்குமார் தற்போது உடல்நல பாதிப்பு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவருடைய தம்பி நவீன் குமார். தனது தாயின் 10 சவரன் நகைகளை காணவில்லை என்பதால் அஜித்குமார் மீது சந்தேகம் இருப்பதாக நிகிதா என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அஜித்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உடலில் 44 காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்ததும், இது சாதாரண மரணம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
அஜித்குமாரை காவல்துறை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோதே அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் மாவட்ட நீதிபதியிடம் சாட்சியம் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தனிப்படை காவல்துறையினரான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அஜித் குமாரிடம் நகை குறித்து விசாரணை நடத்திய போது அவரது தம்பி நவீன் குமாரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியதாகவும் தன்னையும் அவர்கள் தாக்கியதாகவும் நவீன் குமார் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், அஜித் குமாரின் தாயிடம் போனில் பேசி ஆறுதல் கூறினார். அது போல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அஜித்தின் தாயிடம் போனில் பேசினார். இந்த நிலையில் அஜித் குமாரின் தம்பி நவீன் குமாருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. அஜித்தை தாக்கும் போது நவீனையும் தாக்கியதால்தான் தனது மகனுக்கு தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டது என அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார்.