பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளதால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியான நிலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் நான் அதிமுகவில் இருந்து விலகுவதாக சொன்னேன் என்று, திருமாவளவன் சொல்லியிருக்கிறார். நான் எந்த நேரத்திலும் அப்படி சொல்லவில்லை. திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் செய்தி அது.
அதிமுக என்கிற இயக்கத்தில் இருந்து விலகுவதாக நான் எப்போதும் நினைத்து கூட பார்க்க முடியாத செய்தியை சமூக வலைதளங்களில் 4 நாட்களாக ட்ரெண்டிங் செய்து வருக்கின்றனர். யூடியூப் (Youtube) நடத்துபவர்களுக்கு என்னால் வருமானம் கிடைப்பது மகிழ்ச்சி. என் குடும்பம் திராவிட குடும்பம். என்னுடைய அப்பாவின் அண்ணன் வடசென்னை பெரியார் என்று அழைக்கப்பட்டவர்.
எங்களுடைய குடும்பம் ஒரு திராவிட குடும்பம். என் தந்தை இந்தி எதிர்ப்பு போராட்டம், சுதந்திரப் போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டவர். அவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டு மாநகராட்சி கவுன்சிலராக இருந்து நிலைக்குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
அப்படி ஒரு நீண்ட நெடிய திராவிட பாரம்பரியம் கொண்டது எங்களது குடும்பம். பதவிக்காக யாருடைய வீட்டு வாசலிலும் நின்ற வரலாறும் எங்கள் குடும்பத்திற்கு கிடையாது. எனக்கும் கிடையாது. தன்மானத்தோடு இருக்கின்ற அதிமுக எனக்கு அரசியல் அடையாளம் காட்டியது. அந்தஸ்தை கொடுத்தது. என்னை அடையாளம் காட்டியவர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா தான். எனவே வாழ்நாள் முழுவதும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்பேன