s.janaki #legendary voice of india ; காலத்தால் அழியாத காவியக் குரல். இந்தியாவின் இசைக்குயில் எஸ். ஜானகி காலமானார்.

July 12, 2026

By ஹேமதர்சினி ராதிகா

# 11-7-2026  #Special story  # S. Janaki #The legendary voice of India #Nightingale of Music

50 ஆண்டுகாலம் உலக இசை ரசிகர்களை தன் கைகளில் வைத்துக் கொண்டிருந்தவர். இந்தியாவின் இசை பேரரசி காலத்தால் அழியாத காவியக் குரல் பன்முகம் கொண்ட பாடகி இசை அரசி எஸ். ஜானகி உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தி உலகத் தமிழ் இசை ரசிகர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு இருப்பினும் கூட காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடி சென்றுள்ளார். மனிதர்கள் எப்போதெல்லாம் தன் இதயம் பலவீனப்பட்டு சோகத்தில் மூழ்கி இருக்கும் பொழுது அழகு மலராட அபிநயங்கள் கூட என்று ஜானகி அம்மாவின் பாடலை கேட்கத் தொடங்கினால் இதயம் லேசாகிவிடும். அதேபோல மனம் ஆனந்த படுகின்ற பொழுது அல்லது காதல் வயப்படுகின்ற போது தென்றல் வந்து தீண்டும் போது என்கிற பாடல் கேட்டால் இதயம் இறக்கை கட்டி பறக்கும். எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா , ஓர் ஆயிரம் நிலவே வா பாடலை கேட்கிற பொழுது மனித சமூகம் தன் நிலையை இழந்து போய்விடும் அந்த அளவிற்கு ஜானகி அம்மாவின் குரல் ஒட்டுமொத்த மனித சமூகத்தை கட்டி போடும். அவரது இசை பயணத்திற்கு சென்னை ரிப்போட்டர்ஸ். காம் இணையதளத்தின் அஞ்சலிகள் அவரது ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்.

”மச்சான பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே” என்று ஆனந்தம் பொங்க பாடிய குரல் இனி ஒலிக்கப்போவதில்லை ஆனால் அவர் பாடிய  ஜானி திரைப்படத்தில்  பாடிய காற்றில் எந்தன் கீதம்  என்ற பாடல்  மனித சமூகத்தை உருக வைத்த குரலுக்கு சொந்தக்காரி இவரின் குரல் பல தலைமுறைகளை தாண்டி வாழும். அவரது புகழும் மறையாது…தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் ஜானகி அம்மா பாடிய பாடல்   நான் போன பின்னும்  நீ வாழவேண்டும் எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு… என்ற பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்தியத் திரையுலகின் ‘கானக் குயில்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஜூலை 11 அன்று மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி பல தலைமுறை ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த அவரது மறைவு இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவு – இந்திய இசையுலகத்தின் பேரிழப்பு.

ஆந்திர மாநிலம்  குண்டூர் மாவட்டம் பல்லே பட்லா என்ற கிராமத்தில்  1938 ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 23 ம் தேதி பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தனது இனிமையான குரலால் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்தவர் எஸ். ஜானகி. பல சதாப்தங்களாக இந்திய இசைத்துறையில் அவர் நிகழ்த்திய பங்களிப்பு அளவிட முடியாதது.அவரது மறைவு இந்திய இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன், இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“குரல் என்றும் அழியாது; அவர் பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டி என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.”

1976 இல் இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகமான பிறகு தமிழ் திரை இசையில் புதிய அத்தியாயத்தை தொடங்கினார் . அவரது முதல் திரைப்படமான அன்னக்கிளி யில் இடம் பெற்ற மச்சானை பாத்திங்களா மலவாழத் தோப்புக்குள்ள என்ற பாடலைப் பாடிய எஸ் ஜானகி கிராமிய இசைக்கு புத்துயிர் ஊட்டி உலகெங்கும் புகழை பரவச் செய்தார்.

அதன் பின் இளையராஜா எஸ் ஜானகி எஸ் பி பி ஆகியோரின் இசைக் கூட்டணி தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத பொற்காலத்தை உருவாக்கியது எண்ணற்ற காதல் பாடல்கள் சோகப் பாடல்கள் பக்தி பாடல்கள் கிராமிய பாடல்கள் அவர்கள் அளித்த பாடல்கள் அவர்களின் கூட்டணி உலக தமிழ் இசை ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இசை மழையை ஒலித்துக் கொண்டு இருக்கிறது. எஸ். ஜானகியின் சிறப்பம்சம் என்னவென்று சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் பல விஷயங்களை குறிப்பிட்டு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.  அதில் எளிமையான தோற்றம் கொண்டவர் எந்த விதமான ஆடம்பரத்தையும் வெளிப்படுத்தாமல் சாதாரணமாக ஒரு வெள்ளை சேலை, ஒரு சிறிய நோட்டு புக், ஒரு சிறிய கைகுட்டை எடுத்துக் கொண்டு ரெக்கார்டிங் தியேட்டரில் எளிதாக வந்து பாடிவிட்டுச் செல்லும் பன்முகத் திறமை கொண்டவர்.  தனது குரலில் சோகம், குழந்தைத்தனம், காதல், வேதனை, குறும்பு என எல்லாவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர். அவரது இந்த அபாரமான திறமை உலகெங்கும் பறந்து கிடக்கிறது. அவரது புகழை பலமுறை பல மேடைகளில் பாராட்டி பேசி இருக்கிறார் எஸ் பி பாலசுப்ரமணியம். தமிழ் திரைப்படங்களில் குழந்தைகள் பாடும் பாடல்களை பெரும்பாலும் எஸ் ஜானகியே பாடியுள்ளார். காலத்தால் அழியாத பாடல்கள் பல உள்ளன. அதில் டாடி ஓ மை டாடி, டூத் பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு மாமா, அஞ்சலி அஞ்சலி , அர்ஜுன் நடித்த சங்கர் குரு படத்தில் சின்ன சின்ன பூவே , நடிகர் தியாகராஜன் நடித்த நீங்கள் கேட்டவை படத்தில் பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா போன்ற பல்வேறு பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள் உண்மையிலேயே திரையில் பாடுகிற பொழுது குழந்தைகள் பாடியதாக ரசிகர்கள் நினைத்துக் கொள்வார்கள் அப்படி ஒரு உணர்வை வெளிப்படுத்திய திறமை கொண்டவர் ஜானகி அம்மா என்று சொன்னால் அது மிகையாகாது.நான்கு தேசிய விருதுகள் பெற்ற ஜானகி அம்மா.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படத்தில் இடம்பெற்ற செந்தூரப்பூவே பாடலுக்கு ஜானகி அம்மா முதல் தேசிய விருதை பெற்றார்.  அதனை தொடர்ந்து தேவர்மகன் திரைப்படத்தின் இஞ்சி இடுப்பழகி, சரத்குமார் ,குஷ்பூ நடித்த நாட்டாமை படத்தில் பாடிய கொட்டைப்பாக்கு கொழுந்து வெத்தல பாடல் இன்றைக்கும் தமிழகம் எங்கும் எல்லா மூலை முடுக்குகளிலும் ஒழித்துக் கொண்டே இருக்கிறது.நடிகை ரோகிணி நடித்த மறுபடியும் திரைப்படத்தில் ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா, என் மாமா என்ற பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடல். நடிகர் முத்துராமன் நடித்த அச்சானி என்ற திரைப்படத்தில் ஜானகி அம்மா பாடிய மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன் என்ற கவிஞர் வாலி எழுதிய பாடல் இது போன்ற பல்வேறு பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் . இசை ரசிகர்களின் நெஞ்சில் அழிக்க முடியாத காவியமாகவும் நிற்கும். அவரது பாடல்களை தன் உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருக்கும்.

ஜானகி அம்மாவின் குரல் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

ஒரு பாடகி மறையலாம் ஆனால் பல தலைமுறைகளின் நினைவுகளில் அவரது குரல் வாழும் அது ஒருபோதும் தனது ஒளியின் ஓசையை நிறுத்தாது.இன்று ஜானகி அம்மா உடலால் நம்மை விட்டு பிரிந்து இருந்தாலும் அவர் பாடிய ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு உணர்வுகளையும், ஒவ்வொரு இசைத் துளியும் தமிழ் ரசிகர்களின் வாழ்வில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும். உலக தமிழ் இசை ரசிகர்களின் பெரும் உயிர் எஸ். ஜானகி அம்மாவின் ஆத்மா இறைவனடியில் இளைப்பாற வேண்டும் என்று சென்னை ரிப்போர்ட்டர்ஸ் டாட் காம் இணையதளத்தின் சார்பில் எங்கள் இதய அஞ்சலியை அவருக்கு காணிக்கையாக்குகிறோம். காலத்தால் அழியாத காவியம் ஜானகி அம்மா…

Share:

ஹேமதர்சினி ராதிகா

July 13, 2026

Leave a Comment