chennireporters.com

வேலூர் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.கணக்கில் வராத பணம் பறிமுதல்.

ரேணுகாம்பாள்

வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை இணைப் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இணைப்பதிவாளர் அலுவலகம்வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை (கற்பகம் சிறப்பு அங்காடி) வேலூர் அண்ணா சாலையில் செயல்பட்டு வருகிறது.

இங்கு அதன் இணைப் பதிவாளராகவும் மற்றும் மேலாண்மை இயக்குனருமாகவும் ரேணுகாம்பாள் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் புத்தாண்டை முன்னிட்டு சோப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் டீலர்களிடம் லஞ்சமாக பணம் பெறுவதாகவும், மற்றும் பல்வேறு வகைகளில் பில் தொகை வழங்குவதற்காக லஞ்சம் பெறுவதாகவும் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், விஜய் மற்றும் போலீசார் நேற்று இணைப்பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்தனர்.

இந்தநிலையில் மாலை 6 மணி அளவில் திடீரென அலுவலகத்துக்குள் நுழைந்த போலீசார் அங்கு இணைப்பதிவாளர் அறை மற்றும் ஊழியர்களின் அலுவலகத்தை திடீரென சோதனை செய்தனர்.

ரூ.2½ லட்சம் பறிமுதல்இந்த சோதனையின் முடிவில் அலுவலகம் மற்றும் அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே அலுவலகத்திற்கு வெளியாட்கள் யாரும் வராத வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது.

இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரேணுகாம்பாள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் லஞ்சமாக பெறப்பட்டதா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க.!