chennireporters.com

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை.

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று புது கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விஜயபாஸ்கர்.இவர் கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள வீடு.

அன்னை தெரசா கல்வி அறக்கட்டளை மற்றும் திருவேங்கைவாசலில் உள்ள அவரது கல்குவாரி, மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான மருத்துவமனை என பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அது தவிர விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

அதில் அவர் வைத்துள்ள சொத்துக்களின் மதிப்பீடு வைத்துள்ள வாகனங்கள் லாரி கல்வி நிறுவனங்கள் எல்ஐசி பாலிசிகள் உட்பட முதலீடு செய்யப்பட்டுள்ள அனைத்து சொத்துக்களின் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி மற்றும் அமைச்சருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அரசு ஒப்பந்ததாரர்கள் கல்வியாளர்கள், மருத்துவமனைகள் என 45க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அவரது வழக்கறிஞர் செல்வம் கூறுகையில் எங்கள் இடத்தில் அனைத்து ஆவணங்களும் கணக்கு வழக்குகளும் முறையாக இருக்கின்றன.

எங்களுக்கு எந்த வித பயமும் இல்லை.நாங்கள் சட்டப்படியாக வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒன்றில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதுதவிர கடந்த ஆட்சிகாலத்தில் தமிழக அரசிற்கு மருத்துவமனைகளுக்கு மருந்து மாத்திரை வழங்கிய கம்பெனிகளில் பெரும்பாலான சதவீதம் கமிஷனாக பெரிய தொகையை விஜயபாஸ்கர் பெற்றதாக கூறப்படுகிறது.

என்று தற்போதைய திமுக ஆட்சிக்கு பல புகார்கள் வந்து இருப்பதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அது தவிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை போர்டுகளில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் கொடுத்து கோடிக்கணக்கில் முறைகேடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு போர்டு செய்வதற்கு குறைந்தபட்ச தொகை விட பல மடங்கு அதிக அளவில் அந்த நிறுவனத்துக்கு அரசு பணம் கொடுத்து இருப்பதாக புகார் எழுந்தது.

இந்த போர்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மருத்துவமனை தாலுகா மருத்துவமனை கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று விஜயபாஸ்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.திமுக அரசு இதை எப்படி கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க.!