#Exclusive story; #Exclusive story;
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் ரவுடி நாகேந்திரனின் மகனுமான அஸ்வத்தாமனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் முக்கிய குற்றவாளியான அருள் என்ற வழக்கறிஞரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரிடம் அருள் அளித்த வாக்குமூலத்தில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன் முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளார் அவரது மகன் அஸ்வத்தாமன் தான் கூலிப்படையினரை ஏவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் இதை அடுத்து சென்னை வியாசர்பாடி எஸ் எம் நகரை சேர்ந்த அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார்.
ரவுடி நாகேந்திரன்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் அஸ்வத்தாமன் சட்டம் படித்துள்ளார். தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு ரியல் எஸ்டேட் முதலாளிகளிடம் மாமுல் வசூலித்தும் ஆள் கடத்தலில் ஈடுபட்டும் வந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகளில் பழைய இரும்பு பொருட்களை டெண்டர் எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் முக்கிய புள்ளி ஒருவரிடம் அடைக்கலம் தேடி தஞ்சம் புகுந்தார் .
இதற்கு நாகேந்திரன் தான் ஏற்பாடு செய்துள்ளார். இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த அஸ்வத்தாமன் கடந்த ஆண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் 30 என்பவரை கடத்தி துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அசத்தாமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் வைத்திருந்த உரிமம் இல்லாத துப்பாக்கியும் பறிமுதல் செய்தனர். பின்னர் ஜாமினில் வந்த அஸ்வத்தாமன் அவர் மீது ஜெயப்பிரகாஷ் புகார் அளித்ததின் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் இருந்துள்ளார் என்று ரவுடி நாகேந்திரனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது .
சிறையில் இருந்தபடியே மொபைல் போன் வாயிலாக ஆம்ஸ்ட்ரங்கை தொடர்பு கொண்டு என் மகன் விவகாரத்தில் தலையிடாதே என ரவுடி நாகேந்திரன் ஆம்ஸ்ட்ரங்கை மிரட்டியதாக கூறப்படுகிறது. ஒருமுறை ஆம்ஸ்ட்ராங்கை நேரில் சந்தித்த அஸ்வத்தாமன் அப்பா பேசுவதாக மொபைல் போனை கொடுத்துள்ளார்.
எதிர் முனையில் பேசிய நாகேந்திரன் என் மகனுக்கு எதுவும் ஆகக்கூடாது ஜெயபிரகாஷை கடத்திய விவகாரத்தை சுமூகமாக முடித்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ஆம்ஸ்ட்ராங் மறுத்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் செல்போனிலேயே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனையில் முடிந்திருக்கிறது. இதன் பின்னணியில்தான் கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அஸ்வத்தாமனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பில் இருந்தும் கட்சியிலிருந்தும் அஸ்வத்தாமனை காங்கிரஸ் கட்சி நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அஸ்வத்தாமன் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்.
ரவுடி நாகேந்திரனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் பல்வேறு விஷயங்களில் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக சொல்லுகிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள். பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய பொறுப்பாளரான பாம் சரவணனின் அண்ணன் தென்னரசுவை ரவுடி நாகேந்திரன் சொன்னதின் அடிப்படையில் தான் ஆற்காடு சுரேஷின் ஆதரவாளர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் பாம் சரவணன் குடும்பத்திற்கும் ரவுடி நாகேந்திரன் குடும்பத்திற்கும் முன் பகை இருந்து வந்துள்ளது. அதனால் எப்போது வேண்டுமானாலும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் பெரும் ஆபத்து வரும் என்று நினைத்து ரவுடி நாகேந்திரன் தனது மகன் மூலம் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லுகிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள்.
ஆம்ஸ்ட்ராங்க் உடன் அஸ்வத்தாமன்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள அஸ்வத்தாமனின் ஆதரவாளர்கள் ஒரு சிலர் அஸ்வத்தாமனின் அப்பா ரவுடி நாகேந்திரனுக்கும் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கும் எந்தவித முன் பகையும் இல்லை. விரோதமும் இல்லை. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது மருத்துவமனைக்கு உண்டான செலவினங்களுக்கு ஆம்ஸ்ட்ராங்க் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார் என்கின்றனர். அது தவிர விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்ததாக சொல்லுகிறார்கள். எனவே திட்டமிட்டு போலீசார் இந்த வழக்கில் கோர்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரே சமூகத்தினருக்கிடையே மோதலை உருவாக்கும் வேலையில் போலீசார் இறங்கி உள்ளனர் என்கின்றனர். எனவே போலீசார் அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரித்தால் தான் உண்மை என்னவென்று தெரியவரும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலும் போலீசார் தனிப்படை அமைத்து அஸ்வத்தாமனுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்று விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் புட்லூர், அரண்வாயில், தொழுவூர் அரக்கோணம், மணவூர் ஆகிய பகுதியில் உள்ள சின்ன சின்ன ரவுடிகளிடமும் சில சாதி அரசியல் கட்சி சார்ந்தவர்களிடமும் போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.