chennireporters.com

மனிதமும் மாண்பும் மிக்க தீரர் அமல்ராஜ் ஐ.பி.எஸ்…..

தாம்பரம் காவல் ஆணையரகத்தின் 2வது காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த அமல்ராஜ்? தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் சென்னை பெருநகர காவல்துறை இரண்டாக பிரிக்கப்பட்டது தாம்பரம் தனி காவல் ஆணையரகமாகவும், ஆவடி தனி ஆணையரகரமாகவும் பிரிக்கப்பட்டன.

தாம்பரம் காவல் ஆணையகத்திற்கு 20 காவல் நிலையங்களும், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு 25 காவல் நிலையங்களும் என பிரிக்கப்பட்டன தாம்பரம் முதல் காவல் ஆணையராக ரவி நியமிக்கப்பட்டார்.

கடந்த 6 மாதங்களாக அவர் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மே 31ம் தேதியன்று அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவரைத் தொடர்ந்து ஆவடி காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் வசம் தாம்பரம் காவல் ஆணையர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையராக தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக இருந்த ஏடிஜிபி அமல்ராஜை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

1996ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் ஆன அமல்ராஜ், திருப்பூர் ஏஎஸ்பியாக தனது காவல் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர், அதன் பிறகு மதுரை புறநகர், தர்மபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக 2000ஆம் ஆண்டு முதல் 2010 வரை

அவரது காவல் பணி பயணம் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து பதவி உயர்வு பெற்று திருச்சி, ராமநாதபுரம், சேலம் சரகங்களின் டிஐஜியாகவும் பின்பு பதவி உயர்ந்து சேலம், திருச்சி, கோவை காவல் ஆணையராகவும், திருச்சி, கோவை மண்டல ஐஜியாகவும் பணியாற்றியவர் அமல்ராஜ்.

அதன் பிறகு சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்ட அமல்ராஜ் பின்னர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்ந்து ஆபரேஷன்ஸ் (கமாண்டோ பிரிவு) பிரிவு ஏடிஜிபியாக தமிழக அரசு அவரை நியமித்தது அதன் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக மாற்றப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சொந்த ஊர். நாகர்கோவில் கார்மல் பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்த அமல்ராஜ் பின்னர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார் கல்லூரியில் அமல்ராஜ் ஹாக்கி விளையாட்டு வீரராக மிளிர்ந்தவர்.

அது மட்டுமின்றி தேசிய மாணவர் படையிலும் அங்கம் வகித்தார் ஐபிஎஸ் காவல் பணியில் சேர்ந்த பிறகு அமல்ராஜ் மனிதவள மேலாண்மைத்துறையில் எம்.பி.ஏ. பட்டமும், மதுரை
காமராஜர் பல்கலையில் டாக்டர் பட்டமும் பெற்றவர்.

சிறப்பான காவல் பணிக்காக அமல்ராஜ் ஜனாதிபதி பதக்கம் மற்றும் சிறந்த பொதுச்சேவை மற்றும் சிறந்த காவல் பணியாற்றியதற்காக முதலமைச்சரின் பதக்கங்களை பெற்றவர்.

துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வம் மிகுந்த அமல்ராஜ் தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற்றார் மாநில அளவில் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

திருச்சி, கோவையில் உலகத் தரம் வாய்ந்த துப்பாக்கி சுடும் தளங்களை காவல்துறை சார்பில் அமல்ராஜ் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல கோவை மற்றும் சென்னை எழும்பூரில் மாநிலத்திலேயே முதன் முறையாக போலீஸ் மியூசியம் அமைத்து முனைப்பாக செயல்பட்டவர். மேலும் சேலம், கோவை,
திருச்சியில் உயர்மட்ட சிசிடிவி கேமராக்கள் அடங்கிய நவீன கட்டுப்பாட்டு அறை அமைத்ததன் மூலம் அங்கு குற்றங்கள் 40 சதவீதம் குறைந்தது.

காவல் பணி மட்டுமின்றி எழுத்திலும் அமல்ராஜ் சிறந்த புலமைப் பெற்றவர் காவல் துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள் “வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள்”, “வெல்ல நினைத்தால் வெல்லலாம்” “சிறகுகள் விரித்திடு”, “போராடக் கற்றுக்கொள்” ஆகிய ஐந்து நூல்களை இவரே எழுதிய புத்தகங்கள் வெளி வந்துள்ளன என்பது காவல்துறையினரால் பாராட்டை பெற்றது.

தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அமல்ராஜ் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராகவும் பொறுப்பையும் கவனிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது 44 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் 44 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவி
ட்டுள்ளது காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழக காவல்துறையில் 44 காவல் துறை அதிகாரிகள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அது தொடர்பாக உத்தரவை தமிழக உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார் குறிப்பாக தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி கடந்த 31ம் தேதியோடு ஓய்வு பெற்ற பிறகு யாரையும் பணி அமர்த்தாமல் இருந்தது.

இந்நிலையில் ஏடிஜிபி அமல்ராஜை தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்ட்டுள்ளார் மேலும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூனியர் விகடன் குழுமம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டில் சிக்கிய ஐஜி கண்ணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கண்ணனை ஆயுதப் படை பிரிவு ஐஜியாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது மேலும் வடக்கு மண்டல ஐஜி ஆக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த தேன்மொழி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய மண்டல ஐஜியாக சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் கோவை காவல் ஆணையராக பாலகிருஷ்ணனும், நெல்லை காவல் ஆணையராக அவினாஷ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரி பணியமர்த்தப்பட்டுள்ளார் முக்கியமாக 8 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் மேலும் 36 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை அண்ணாநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் சைபர் கிரைம் புகார்கள் அதிகமாக வருவதை அடுத்து அதற்காக மத்திய குற்றப்பிரிவில் தனியாக துணை ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது.
அந்த துணை ஆணையர் பதவியில் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று திருச்சி மாநகரத்தின் தலைமை இடத்திற்கு புதிதாக துணை ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு சுரேஷ் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டு அதற்கு எஸ்பியாக சண்முகப்பிரியா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர், மதுரை, திண்டுக்கல், திருவாரூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் எஸ்.பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க.!