திருவள்ளூர் அருகே இரவு நேரங்களில் பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளை அடித்த பாஜக இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளையடித்த திருடன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருடர்களை தேடி வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டை அடுத்த பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன் என்பவரது வீட்டை உடைத்து வீட்டில் இருந்த ஐந்து சவரன் நகை 900 கிராம் வெள்ளி பொருட்கள் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் மோட்டார் பைக் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது . இதுகுறித்து மணிகண்டன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
கொள்ளை நடந்த சம்பவத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் காரில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பூண்டி அடுத்த தோமூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் கேசவன் என்பது தெரிய வந்தது.
பெரம்பூர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடித்தது மற்றும் வெங்கல், பெரியபாளையம், பென்னாலூர் பேட்டை ஆகிய பகுதிகளில் பூட்டப்பட்டு இருந்த 20 வீடுகளில் நகை பணம் கொள்ளையடித்ததை இவர்கள் ஒப்புக்கொண்டனர். கொள்ளையடித்த பொருட்கள் அனைத்தும் ஆந்திர மாநிலம் தாசு குப்பம் கிராமத்தில் ஒரு வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர். போலீசார் அங்கு சென்று சோதனை நடத்திய போது 85 சவரன் தங்க நகைகள் 900 கிராம் வெள்ளி பொருட்கள் ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பிரபாகரன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணை தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் அந்த கட்சியை சேர்ந்த வினோத் பி. செல்வம் என்பவர் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் அவரை சந்தித்து பலமுறை தனியாக புகைப்படம் எடுத்திருக்கிறார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர் கொள்ளை அடித்து திருடப்பட்ட பணத்தை வினோஜ் பி செல்வத்திடம் கொடுத்து இருக்கிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிஜேபி வினோஜ் செல்வத்துடன் திருடன் தோமூர் பிரபாகர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா இளைஞர் அணி துணைத் தலைவரான தோமூர் பிரபாகரன் மீது ஊத்துக்கோட்டை பெரியபாளையம், வெங்கல், பென்னாலூர் பேட்டை காவல் நிலையங்களில் 20 கொள்ளை வழக்குகள் பதிவு ஆகி உள்ளன. இவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடுகளில் திருடிய திருடன் தோமூர் பிரபாகரன் தி.மா.பா.ஜ.க இளைஞரணி தலைவர்.
கொள்ளையடித்த பணத்தில் தன் சொந்த ஊரான தோமூர் கிராமத்தில் பங்களா வீடு கட்டி சொகுசாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். சமீபத்தில் பாஜக மாநில பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கல்யாணராமனுக்கு சொந்தமான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாந்தோப்புகளை பிரபாகரன் பராமரித்து வந்துள்ளார். கல்யாணராமன் மூலம் பிரபாகரன் கட்சியில் சேர்ந்து பொறுப்பு பெற்றுள்ளார்.
இவர் சொந்தமாக இரண்டு கார்கள் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இதேபோல் தோமூர் கிராமத்திற்கு அருகில் உள்ள ராமஞ்சேரி கிராமத்தில் அதிமுக பிரமுகர் ஒருவரின் உறவினர்கள் பை திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபாஜக பிரமுகர் பிரபாகரன் செய்தி குறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியானதும் அது குறித்து பொதுமக்கள் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
திருடன் பூண்டி கேசவன்.
கொள்ளையர்களிடமிருந்து 51 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 85 சவரன் கொண்ட உருக்கிய தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஐந்துக்கும் மேற்பட்ட மோட்டார் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரபாகரன் தனது சொந்த ஊரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டி இருக்கிறார் என்கின்றனர் காவல்துறையினர். மேலும் ஊத்துக்கோட்டை பகுதியில் பல்வேறு கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. பெரும்பாலும் மோட்டார் பைக்குகள் திருடப்பட்டுள்ளன.
டி.எஸ்.பி. கணேஷ்குமார்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபாகரன் மற்றும் கேசவனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தால் இன்னும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மோட்டார் பைக்குகள் குறித்த செய்திகள் வெளியாகும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள். நேர்மைக்கு பெயர் போன ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. கணேஷ்குமார் கொள்ளையர்களை காவலில் எடுத்து விசாரணை செய்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.