இங்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் ஒருவர் தலைமையில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் முறையான அனுமதியுடன் தமிழகத்துக்கு வருகின்றனவா, சரக்கு வாகனங்களின் எடை, சுற்றுலா வாகனங்களில் அதிகப்படியான பயணிகள் வருகின்றனரா என்பது உள்ளிட்டவற்றை கண்காணிப்பதுடன் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து கட்டணம் வசூலிக்கின்றனர்.
மேலும், அலுவலக ஆவணங்களை சோதனை செய்ததில் நேற்று (அக்.22) தொடங்கி இன்று காலை வரை 24 மணி நேரத்துக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்திக்கு பணி என்ற நிலையில் பல்வேறு வகைகளில் வெளிமாநில வாகனங்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அபராதம் இல்லாமல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரூ.1.39 லட்சம் லஞ்ச பணத்தை 3 வெளிநபர்களை நியமித்து வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அலுவலக அறையில் இருந்து ஆந்திராவில் இருந்து காட்பாடி வழியாக வேலூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் காய்கறி, பழங்கள் ஏற்றிய லாரிகளில் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட காய்கறி, பழக்கூடைகள் இருந்தன.
காட்பாடி வட்டார போக்குவரத்து துறை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.1.39 லட்சம் பறிமுதல் தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்தி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் அந்தப் பணியை மட்டும் கவனிக்காமல் கூடுதலாக எடை ஏற்றி செல்வது கடத்தல் பொருட்களை லஞ்சம் வாங்கிக் கொண்டு கடத்த உறுதுணையாக இருந்து அனுமதிப்பது என்று சட்டத்திற்கு புறம்பான எல்லா வேலைகளையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில எல்லைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனை சாவடிகளில் உள்ள பிரேக் இன்ஸ்பெக்டர்கள் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஊழல் செய்து பல கோடி ரூபாய் கொள்ளை அடித்த வருகின்றனர் என்பது ஊர் அறிந்த விஷயம்.
இந்த லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் சோதனை சாவடிகளில் கண்காணிக்கும் சிசிடிவி மானிட்டரி காட்சியை மையத்தை அமைக்க வேண்டும் என்கின்றனர் லாரி உரிமையாளர்கள்.
சரியாக எடையுள்ள வாகனத்தை இயக்கினால் கூட ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் எங்கள் லாரி டிரைவர்களை மிரட்டி லஞ்சம் வாங்குகின்றனர். அதிக எடை உள்ள பொருட்களை ஏற்றி செல்வதாக அபராதம் விதிக்கின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். லாரி உரிமையாளர்கள் எனவே அரசு தனிமனித ஊழலை ஒழிக்க அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
ஒரு நாளில் மட்டுமே மேற்படி பெண் இன்ஸ்பெக்டர் சம்பாதித்து இருப்பதால் ஏறக்குறைய கடந்த 3 மாதத்தில் எவ்வளவு சம்பாதித்து இருப்பார் என்று கணக்கிட்டுப் பாருங்கள் என்கின்றார் லாரி உரிமையாளர் சங்கத்த தலைவர் யுவராஜ்.
கடந்த மூன்று மாதத்தில் மட்டும் ஒன்றை கோடி ரூபாய் அளவிற்கு மேற்படி பிரேக் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி ஜெயந்தி சம்பாதித்துள்ளார் என்கின்றனர் அவருடன் பணியாற்றும் சில புரோக்கர்கள். எனவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஸ்ரீதேவி ஜெயந்தியின் குடும்பத்தில் உள்ள அனைவரின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்து சொத்துக்களையும் அவர் வைத்துள்ள நகைகளையும் பறிமுதல் செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.