ஸ்ரீவைகுண்டம் தாலுகா அரியநாயகபுரம் கிராமத்தைச் சார்ந்த தம்பி தேவேந்திர ராஜ் கபடி போட்டியில் வென்றதற்காக கைகளை வெட்டி இருக்கின்றார்கள் கொடூரமான சாதி வெறியர்கள்.
பதினோராம் வகுப்பு ஆண்டு அரசு தேர்வு எழுதுவதற்காக சென்ற மாணவனை பஸ்ஸிலிருந்து கீழே இறக்கி கொடூரமாக வெட்டிய சாதி வெறியர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதுவரை தமிழக அரசோ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களோ எந்த அறிக்கையும் கொடுக்காமல் இருப்பது மிக வேதனையாக இருக்கின்றது, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் Dr. ரேவதி பாலன் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக நேரில் சென்று தம்பியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம்.
தலையில் மட்டும் ஆறு வெட்டு, அதில் ஒன்று மண்டை ஓட்டை துளைத்துள்ளதாம், தலையில் விழும் வெட்டை தடுக்க தன் கையால் தடுத்ததால் இடது கை விரல்கள் அனைத்தும் சிதையுண்டு போனதாம். ஒரு விரல் கிடைக்கவும் இல்லையாம். வலது கையில் பெருவிரல் துண்டாகிவிட்டதாம். அதை தவிர முதுகில் மூன்று வெட்டுக்கள்.மண்டையிலுள்ள வெட்டுக்களுக்கு தையல் போட்டிருக்கின்றனர். விரல்களை திரும்ப பொருத்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் அறுவை சிகிச்சை நடைப்பெற்றது.
அவர் தாயாரிடம் கேட்டு கண்ணீர் மல்க அவர் சொன்னார் எனது மகன் கோப்பையை வென்றதற்காக வெட்டிருக்கின்றார்கள்…
இரண்டு ஆண்டுக்கு முன்பு வகுப்பில் நன்றாக படிக்கிற பையன் என்று ஆசிரியர் சுட்டிக்காட்டியதால் நாங்குநேரியில் சின்னத்துரைக்கு மாற்று சமுதாய அதே வகுப்பு மாணவர்களால் நடந்தது போன்ற அதே கொடூரம்.
கபடில ஜெயிச்சா
கைய்விரலை வெட்டுறாங்க! நல்லா படிச்சா
வாயில வெட்டுறாங்க! புல்லட் ஓட்டுனா
கைய வெட்டுறாங்க! கோயிலுக்குள் நுழைஞ்சா
ஆளவச்சு அடிக்கிறாங்க! காசு பணம் சம்பாதிச்சா
தண்ணியில் மலம்கழிக்குறாங்க! இதெல்லாம் தட்டிக்கேட்டா
கூட்டணிக்கு பிரச்சனைங்றங்கா! திருப்பி அடிச்சா
வன்முறை என்கிறாங்க! நாங்கள் என்னதான் செய்யறது?
நாளெல்லாம் எங்கள் சேரி மட்டுமே எரியுது!
தமிழக அரசு இதுபோன்ற ஆதிக்க சாதிவெறி பிடித்தவர்களை வேரறுக்க வேண்டும் என்பதை எங்களுடைய கோரிக்கை.
இந்த தாக்குதல் குறித்து விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு சாதிய தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த தாக்குதல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் மாணவர்களிடையே சாதிய வன்முறை சம்பவம் அரங்கேறி இருப்பதே மாணவர்கள் மத்தியில் பெரும் மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது.