பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரித்தால்தான் சிலை கடத்தல் வழக்கில் பல முக்கிய உண்மைகள் தெரியவரும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது. இதனால் பொன்.மாணிக்கவேல் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் காவல்துறை ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக பொன். மாணிக்கவேல் பணியில் இருந்த கால கட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த 2008 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 சிலைகள் கிடைத்துள்ளன.
இந்த சிலைகளைக் கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காதர்பாட்ஷா, சுப்பராஜ் ஆகியோர் சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தீனதயாளனின் உதவியோடு, சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமலுக்கு வந்த மின் கட்டண உயர்வு.. ஜூன் 16 முதல் கணக்கு செய்து வசூல்..
சிலையைக் கடத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான டிஎஸ்பி காதர் பாட்ஷா, கோயம்பேடு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாக 2017 ஆம் ஆண்டு ஜூன் 29 -ஆம் தேதி காதர் பாட்ஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின், நெல்லையில் பழம்பெரும் கோயில் சிலைகள் விற்கப்பட்ட சம்பவத்தில் டி.எஸ்.பி காதர் பாட்ஷாவுக்கு தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதையடுத்து அவர் மீண்டும் 2019 ஆம் ஆண்டு திருவள்ளூரில் நில மோசடி பிரிவு டிஎஸ்பியாக இருந்த பொழுது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்தததாக கூறி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யக் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவின் முன்னாள் ஐஜி, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க கடந்த ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கிட்டதட்ட ஏழரை மணிநேரம் விசாரணை நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த நிலையில் சிலை தடுப்பு பிரிவு காவல்துறை முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நீதிமன்றம் டிஐஜி தரத்திற்கு குறையாத அலுவலரைக் கொண்டு, விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. ஆனால் சிபிஐயின் காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர் என் மீது வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல அது சட்டவிரோதமானது.
தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் நீதிமன்றம் முடிவு செய்யும். சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன் மதிப்பை குலைக்கும் விதமாக உள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரித்தால்தான் சிலை கடத்தல் வழக்கில் பல முக்கிய உண்மைகள் தெரியவரும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது.
டிஎஸ்பி காதர் பாட்ஷா.
மேலும், சிலை கடத்தல்காரர்களுக்கு உதவுவதற்காகவே சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி காதர் பாட்ஷாவை பொய்யாக இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது. முன்னாள் காவல்துறை ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை காப்பாற்றும் நோக்கில் பொன் மாணிக்கவேல் செயல்பட்டாரா? என்றும், பொன் மாணிக்கவேலுக்கு எதிராக ஆவணங்கள் உள்ளதா என்றும் சிபிஐக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட முக்கிய கோப்பு ஒன்று நீதிபதியிடம் வழங்கப்பட்டது. அதில் பொன் மாணிக்கவேலுக்கு எதிராக பல முக்கிய ஆவணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சிபிஐ பொன் மாணிக்கவேலுவை கைது செய்யும் வாய்ப்பு இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.