காக்கி சட்டை அணிந்து கொண்டு பொது மக்களிடையே அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசு வேலை வாங்கித் தருவதாக 27 பேரிடம் ரூ.1.47 கோடி மோசடி செய்து போலி பணி நியமன ஆணை வழங்கியதாக எழுந்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அந்த புகார் மனுவில் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன், புதுக்கடை காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது அறிமுகமானார். எனது மகன் விஷாலுக்கு அரசுப் பள்ளியில் இளநிலை உதவியாளர் பணியை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். அதோடு 50 பேருக்கு இளநிலை உதவியாளர் பணியும், 10 பேருக்கு ஆசிரியர் பணியும் உள்ளதாகக் கூறினார்.


27 பேருக்கும் பணி நியமன ஆணை தனித்தனியே கிடைத்தது. பின்னர் ஏசு ராஜசேகரனிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. அவரது மொபைல் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்து அந்த பணி நியமன ஆணையை அரசு அதிகாரி ஒருவரிடம் காண்பித்து கேட்ட போது அது போலியானது எனத் தெரிய வந்தது. மோசடி செய்த ஏசு ராஜசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இழந்த பணத்தையும் மீட்டுத்தர வேண்டும்.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டாராம். இந்த நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள அவரது இல்லத்திற்கு கன்னியாகுமரி டி.எஸ்.பி மகேஷ்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்தனர். இந்த தகவலறிந்து ஏசு ராஜசேகரன், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி முன்பு ஆஜராகி இந்த மோசடிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளார்.
நெல்லை சரக டிஐஜி மூர்த்தி
இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டிஐஜி மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதில், ஏசு ராஜசேகரனின் மனைவி என கூறப்படும் கனகதுர்கா இதே போல் தேனி மாவட்டத்திலும் மோசடி புகாரில் சிக்கியுள்ளாராம். ரூ.1.11 கோடி மோசடி செய்த கனகதுர்காவை தேனி குற்றப்பிரிவு போலீஸார், திண்டுக்கல்லில் அவரை கைது செய்துள்ளனர். அந்த விசாரணையில்தான் ஏசு ராஜசேகரனுடன் இணைந்து கன்னியாகுமரியில் 27 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

மேலும் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மீது பல பேர் இணையதளத்தின் வழியாக புகார் அளித்து வருகின்றனர். மோசடி செய்தவர்களின் எண்ணிக்கையும் பணத்தின் மதிப்பும் அதிகரிக்கலாம் என்கின்றனர் குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்.