இந்த அணுகுமுறை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? அந்த விளைவுகள் ஏற்படுத்தவிருக்கும் பாதிப்புகள் என்ன? நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அரசுக்கு எதிரான வழக்குகளின் கதி என்னவாகும்….? மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் நீதிமன்றங்களின் மாண்பு இனி என்னாகும்?
நீதிபதி சந்திரசூட்
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் இல்லத்தில் செப்டம்பர் 11 அன்று செய்யப்பட்ட விநாயகர் பூஜை வீடியோவானது மிகப்பெரும் பேசு பொருளாகவும், பெரும் சர்ச்சையாகவும் ஆகி உள்ளது. காரணம் , அதில் கலந்து கொண்டவர் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான். அவரைத் தவிர வேறு எவரையும் தலைமை நீதிபதி அழைக்கவில்லை போலும்.
அந்த வீடியோவில் பிரதமர் தலைமை நீதிபதி, தலைமை நீதிபதியின் மனைவி மற்றும் இருவர் மட்டுமே உள்ளனர். அந்த இருவரும் தலைமை நீதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் போல உள்ளது. விநாயகர் பூசைக்கு சென்ற பிரதமர் அந்த பூசையில் பூசாரியாக செயல்பட்டுள்ளார்.
தலைமை நீதிபதி அவர்கள் பிரதமர் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட அனைத்து கட்சி தலைவர்களையும் அவரது இல்ல விநாயகர் பூஜைக்கு அழைத்து இருந்தால் கூட, அதுவும் முறையற்றது தான்.
தலைமை நீதிபதி தனது வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்வது பற்றி எவருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. அதே போல பிரதமரும் அவரது வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்து இருப்பினும் அதில் ஏதும் ஆட்சேபனை இருக்க முடியாது.
மக்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை அளிப்பதாக நீதிமன்றங்கள் –அதிலும் குறிப்பாக உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் -இருக்கின்றன. காரணம், அவைகள் சுயேச்சையாக அரசின் நிர்பந்தங்கள் ஏதும் இன்றி இயங்குகின்றன என மக்கள் நினைக்கின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன்
தலைமை நீதிபதி பதவியில் இருக்கும் ஒருவர் அவரது வீட்டில் நடக்கும் பூஜைக்கு பிரதமரை அழைப்பது நீதி துறையின் சுதந்திரத்திற்கும் மற்றும் அதன் மாண்பிற்கும் விரோதமானது ஆகும்.
அரசமைப்புச் சட்டத்தின் கூறு 50 , நிர்வாகத் துறையில் இருந்து பிரிந்து தனியாக சுயேச்சையாக நீதித்துறை இயங்க வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது.
எனவேதான், இதுவரையில் எந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ அல்லது தலைமை நீதிபதிகளோ எவரும் தங்களது இல்லத்தில் நடைபெறும் தனிப்பட்ட பூசை போன்ற நிகழ்ச்சிகளுக்கு பிரதமரை அழைத்தது இல்லை.
மேலும் மிக முக்கியமாக,அரசாங்கம் தான் மிக அதிக அளவில் வழக்குகளை தினம் தினம் உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் நடத்தி வருகிறது. எனவே, பிரதமரோ அல்லது மந்திரிகளோ நீதிபதிகளின் வீட்டுக்கு தனிப்பட்ட முறையில் இது போன்ற பூசைகளுக்கு அல்லது நிகழ்வுகளுக்கு செல்வது நீதித்துறைக்கு மிகப்பெரிய களங்கத்தை உண்டாக்கும்.
குறிப்பாக தலைமை நீதிபதிக்கு ஒரு சிறப்பான அதிகாரம் உள்ளது. அவர் தான் நீதிபதிகளின் அமர்வுகளை தீர்மானிப்பவர். அதாவது மூன்று நீதிபதிகள் அமர்வு என்றால் எந்த எந்த மூன்று நீதிபதிகள் அந்த அமர்வில் இருப்பார்கள் என்பதை தீர்மானிப்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான். அது மட்டுமின்றி எந்த எந்த அமர்வுகள் எந்த எந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தான்.
ஒன்றுக்கும் மேற்பட்ட முதலமைச்சர்களும், அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் ED-யால், மற்றும் சிபிஐ -ஆல் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டனர்; அடக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிணை வழங்கும் வழக்குகள் எந்த அமர்வில் வருவது என்பதை தீர்மானிப்பது தலைமை நீதிபதி தான். அல்லது அவரது அமர்விலேயே கூட அந்த வழக்குகளை விசாரிக்கலாம்.
தினம் தினம் எண்ணற்ற மிக முக்கிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதை தினமும் அச்சு ஊடகமும் மற்ற ஊடகங்களும் தெரிவிக்கின்றன. அந்த வழக்குகள் எந்த அமர்வில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் தலைமை நீதிபதி தான்.
அது மட்டுமன்றி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிக்கும் கொலேஜியத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவரும் தலைமை நீதிபதி அவர்கள் தான்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா
எனவேதான் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் நாள் , உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தவிர்த்து அவருக்கு அடுத்த நிலையில் இருந்த நான்கு மூத்த நீதிபதிகள், தலைமை நீதிபதி அமைக்கும் அமர்வுகள் மற்றும் அந்த அமர்வுகளுக்கு ஒதுக்கப்படும் வழக்குகள் ஒன்றிய அரசிற்கு அனுகூலமாக இருப்பதாக ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை பொது வெளியில் சுமத்தினர். அதாவது அவர்கள் ஊடகங்களை சந்தித்து மேற் சொன்ன குற்றச்சாட்டை வெளிப்படையாக சுமத்தினர்.
இப்போதும் கூட சிவ சேனா கட்சி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் அவர்கள், சிவசேனா பிளவுண்டது பற்றியும் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவியது பற்றியும் ஆன வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார். எனவே இந்த நேரத்தில் தனிப்பட்ட முறையில் தனியாக பிரதமர் தலைமை நீதிபதியின் இல்லத்திற்கு செல்வது சரியல்ல என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
பிரசாந்த் பூஷன் இந்திரா ஜெய்சிங்
பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங் போன்ற சில மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர், தலைமை நீதிபதி அவர்கள் பிரதமரை அவரின் வீட்டிற்கு தனிப்பட்ட முறையில் அழைத்தது கண்டிக்கத்தக்கது என்று அறிக்கைகள் மூலம் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.
நீதித்துறையின் சுயேச்சை தன்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மக்களுக்கும், குறிப்பாக வழக்குரைஞர் சமுதாயத்திற்கும் உண்டு. ஆனால் வழக்குரைஞர் சங்கங்களும் பார் கவுன்சில்களும் நீதித்துறையின் சுதந்திரத்தை காப்பாற்ற தவறிவிட்டனர் என்று என்ன தோன்றுகிறது. ஏனெனில் எந்த வழக்குரைஞர் சங்கமும் பார் கவுன்சிலும் இதனை கண்டித்து பேசாமல் மௌனம் காத்து வருவதே மிகுந்த கவலையை தருகிறது.
ஆளும் பிஜேபி தரப்பிலிருந்து ,பிரதமர் அவர்கள் தலைமை நீதிபதியின் வீட்டு விநாயகர் பூசையில் கலந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறுவது பாசிசத்தின் அறிகுறிகள் ஆகும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அப்போதைய தலைமை நீதிபதி , பிரதமர் அளித்த ரம்ஜான் விருந்தில் கலந்து கொண்டார் என்றும், எனவே பிரதமர் மோடி தலைமை நீதிபதியின் வீட்டு பூஜையில் கலந்து கொண்டது சரிதான் என்றும் பிஜேபி தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
ஒரு தவறு மற்றொரு தவறுக்கு பதிலாகாது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த ரம்ஜான் விருந்துக்கு பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் அப்போதைய தலைமை நீதிபதி. அந்த நிகழ்ச்சிக்கு கூட தலைமை நீதிபதி செல்லாமல் தவிர்த்து இருந்தால் நன்றாக இருக்கும். காரணம் ,மதம் சம்பந்தப்பட்ட எந்த பொது நிகழ்ச்சியிலும் நீதிபதிகள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அரசின் நிகழ்ச்சிகள் மற்றும் தலைமை நீதிபதியின் வீட்டு திருமணம் போன்ற நிகழ்வுகளில் பலர் கலந்து கொள்ளும் போது, அவர்களில் ஒருவராக பிரதமர் இருப்பின் அதில் ஆட்சேபனை செய்வதற்கில்லை. நீதிபதிகள் வீட்டு திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கூட பிரதமரையோ அல்லது மற்ற மந்திரிகளையோ அழைப்பதை தவிர்த்தால் மிகவும் நல்லது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சத்யதேவ் என்ற ஒரு மாமனிதர் நீதிபதியாக பணியாற்றினார். அவர் நீதிபதியாக இருந்த காலத்தில் நான் வழக்குரைஞராக இருந்தேன். அவரது மகனின் திருமணத்திற்கு அவர் எந்த மந்திரியையும் அழைக்காதது மட்டுமின்றி, உடன் பணி புரியும் உயர் நீதிமன்ற நீதிபதிகளில் கூட அவருடைய வகுப்புத் தோழர்களாக இருந்த மூவரைத்தான் அழைத்தார் என்றும், திருமணம் முடிந்ததும் காலையில் நீதிமன்றத்திற்கு வந்து பணி செய்தார் என்றும் கூறுவர். அது போன்ற செயல் அல்லவா மிகப்பெரிய நம்பிக்கையை மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது ஊட்டும்.
மிகச் சமீபத்தில் பங்களாதேசில், அந்த நாட்டின் பிரதமரை நாட்டை விட்டு விரட்டிய மக்களின் போராட்டம் ,அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் அவரது பதவியை விட்டு விலக வேண்டும் என்று கூறி அதில் வெற்றியும் பெற்றது சுட்டி காட்டப்பட வேண்டும்.
அது போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் நடைபெறாமல் இருக்க இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் .அதுவே ஜனநாயகத்திற்கும் நல்லது .சுதந்திரமான நீதித்துறைக்கும் உத்தரவாதம் அளிக்கும்.
கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்
ஒய்வு பெற்ற நீதிபதி
சென்னை உயர் நீதிமன்றம்