chennireporters.com

வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தொடங்கி வைத்தார்.

வழக்கறிஞர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தொடங்கி வைத்தார்.

கொரோனாவுக்கு தடுப்பூசிக்கு மாற்றாக ஏதுமில்லையென தலைமை நீதிபதி உறுதிபட தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் கிளார்க்குகள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்ற பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம். சுந்தரேஷ்,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ், துணை தலைவர் கார்த்திகேயன், இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ். பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, நீதிக் கரங்கள் அமைப்பின் நிர்வாகியான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி.,

தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் முதல் தடுப்பூசியை இரண்டாவது தவணையாக பார்கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் செலுத்திக் கொண்டார்.

முகாமை தொடங்கி வைத்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசும்போது, கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிக்கு மாற்று ஏதுமில்லை.

கொரோனா மீண்டும் பரவாமல் இருக்க முகக்கவசம், கிருமி நாசினி, தனி மனித இடைவெளி நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், கொரோனா பெருந்தொற்றை தடுக்க ஒரே வழி தடுப்பூசிதான்.

11 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ள நிலையில், 1 கோடியே 41 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தற்பொழுது வரை செலுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள 9 கோடி தடுப்பூசி மருந்துகளை பெற்றுத்தர உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பேசும்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தொடர் முகாம்கள் நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேயிலை தோட்ட பணியாளர்களுக்கும், பழங்குடியினருக்கும் நேரடியாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலை தோட்ட பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பணி இன்னும் 10 நாட்களில் நிறைவடையும்.

தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சட்டமன்ற தொகுதியாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி உள்ளது. 90 ஆயிரம் பேர் அங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இன்றைய காலை நிலவரப்படி தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

தடுப்பூசி இல்லையென காலை முதல் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. தடுப்பூசி இல்லை என்பது வருத்தமான ஒன்றுதான். இன்று மதியத்திற்கு மேல் தடுப்பூசி தட்டுப்பாடு நிலைதான் காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

விழாவில் பேசிய நீதிபதி என்.கிருபாகரன், கொரோனாவால் வருமானம் இழந்துள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும். நோய் தொற்றால் இறந்துபோன வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க.!