ஒடுக்குமுறை சட்டங்களையும், அதிகார வர்க்க அடக்குமுறைகளையும் ஒன்றிணைந்து வீழ்த்துவோம்!பாலஸ்தீன பத்திரிகையாளர்களுக்கு தோள் கொடுப்போம். மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மே தின அறைகூவல்!
பத்திரிகைத்துறையின் பொற்காலம் என்று எந்த ஒரு ஆட்சியையும் குறிப்பிட்டுக் கூற முடியாது. ஆனால், மிக மோசமான காலம் எது என்பதை எளிதில் கூறி விடலாம். இந்தியாவில் அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலைக்குப் பிறகு, அதுபோன்ற ஒரு மிக மோசான நெருக்கடியை பத்திரிகைத்துறை தற்போது சந்தித்து வருகிறது.
மதவாதத்தை எதிர்த்து எழுதியதற்காக பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டார். கொடுங்கோல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீர் பத்திகையாளர் அசீஃப் சுல்தான் மீண்டும் கைது செய்யப்பட்டார். விசாரணை என்று அழைக்கப்பட்ட காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் ஃபகத் ஷா இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு காஷ்மீர் பத்திரிகையாளர் குஹாசி ஷிப்லி கைது செய்யப்பட்டு விடுதலையான பிறகும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார். செய்தி சேகரிக்க சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பான் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். மக்கள் போராட்டங்களை செய்தியாக்கியதற்காக நியூஸ் கிளிக் இணையதளத்தின் ஆசிரியர் பிரபிர் புர்க்யாஸ்தா தேசவிரோத குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆல்ட் நியூஸ் என்ற உண்மை சரிபார்க்கும் ஊடக நிறுவனத்தின் ஆசிரியர் முகமது சுபேர் ஜோடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதுடன் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் வலதுசாரி சமூகவிரோத சக்திகளால் செய்தி ஊடகங்கள் மிரட்டப்பட்டு பல முன்னணி ஊடகவியலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். தேசிய அளவிலும் பல ஊடகவியலாளர்கள் இதுபோல் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பத்திரிகையாளர்களுக்கு இப்படியாக பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களும் இந்த அடக்குமுறையிலிருந்து தப்பவில்லை. 2002 குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டு மிரட்டப்பட்டது. இதன் காரணமாக அந்த நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்தின் வழியாக இந்தியாவில் செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் குறித்து செய்தி வெளியிட்ட நியூஸ்கிளிக் நிறுவனத்திற்கு எதிராக ஒன்றிய அரசு நிறுவனங்களால் கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டது. இன்று அந்த நிறுவனம் மிகப்பெரிய நெருக்கடியின் மத்தியிலேயே இயங்கி வருகிறது. இந்திய செய்தி ஊடகங்களின் முன்னோடியான என்டிடிவி குறுக்கு வழியில் விலைக்கு வாங்கப்பட்டது. இன்று அந்த நிறுவனம் தனது நன்மதிப்பை இழந்து, பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மற்றொரு ஊடகம் என்ற அளவிற்கு குறுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களையும், டிஜிட்டல் ஊடகங்களையும் கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் விதிகளில் 2021 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தது. இதேபோல், 2023 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம், செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் அமைப்பை உருவாக்குவதற்கு அரசுக்கு அதிகாரம் வழங்கியது. அந்த அமைப்பு ஒரு செய்தியை “உண்மைக்கு புறம்பானது” என்று வகைப்படுத்தினால் அதை அனைத்து தளங்களிலிருந்தும் நீக்கும் அதிகாரத்தையும் அந்த திருத்தம் வழங்கியது. திருத்தப்பட்ட இந்த விதிகளுக்கு எதிராக பல பத்திரிகையாளர்களும், சமூக வலைதள மற்றும் ஊடக நிறுவனங்களும் தொடுத்த வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என்றாலும் இவை எப்போதும் பத்திரிகை சுதந்திரத்தின் தலையின் மேல் தொங்கும் கத்தியாகும்.
அரசியல்வாதிகளிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகள் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்ததில்லை. அது மக்களின் மனதில் உள்ள கேள்விகள். அவர்களின் பிரதிநிதிகளாகவே பத்திரிகையாளர்கள் அந்த கேள்வியை எழுப்புகிறார்கள். இந்த அடிப்படையைக் கூட புரிந்துகொள்ளாத சில அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்களை மிரட்டுவதையும் அவமானப்படுத்துவதையும் ஒரு தந்திரமாகவே கையாள்கின்றனர்.
அதேபோல், பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவில், இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். லட்சக்கணக்கான மக்கள் வீடின்றி, உணவின்றி, மருந்தின்றி, குடிக்க நீரின்றி சொந்த தேசத்திலேயே அகதிகளாக கடந்த 6 மாதமாக அலைந்துகொண்டிருக்கின்றனர். பாலஸ்தீன மக்கள் சந்திக்கும் இந்த மாபெரும் அவலத்தை தங்கள் உயிரை பணயம் வைத்து களத்தில் நின்று செய்தி சேகரித்து உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை பத்திரிகையாளர்களும் பத்திரிகைத்துறை பணியாளர்களும் செய்து வருகின்றனர். அவர்களில் இதுவரை நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் அமைப்புகள் கூறுகின்றன. இதில் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக சில பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து கொலை செய்ததாகவும், அந்த அமைப்புகள் கூறுகின்றன. இத்தனை உயிர்கள் பலியான பிறகும், இத்தனை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பத்திரிகையாளர்கள் களத்தில் நின்று தொடர்ந்து செய்தி வழங்கி வருகிறார்கள்.
இங்கும் பத்திரிகை மற்றும் ஊடகநிறுவனங்கள் பத்திரிகையாளர்களை சட்டத்திற்குப் புறம்பாக அநியாய பணிநீக்கம் செய்து வருகின்றன. தாலுகா மற்றும் மாவட்ட அளவில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை ஆண்டுக்கணக்கில் ஒப்பந்த பணியாளர்களாகவே வைத்திருக்கும் நிறுவனங்கள், அவர்களுக்கு எந்தவித சமூக பாதுகாப்பையும் வழங்க மறுத்து வருகிறார்கள். அரசு தரப்பிலும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் சமூகநலத் திட்டங்களில், ஒப்பந்த பணியாளர்கள் என்பதை சுட்டிக்காட்டி இவர்களை பயனாளிகளாக சேர்க்க மறுக்கின்றனர்.
இத்தகைய நெருக்கடியான நேரத்தில் எதிர்வரும் இந்த மே தினத்தில், நமது அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம், சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்கள் வழங்கியுள்ள உரிமைகளை எள்ளளவிலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதே நமது வரலாற்றுக் கடமையாகும்.
ஆகவே, இந்த மே தினத்தில்,
தற்போதைய குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலை உணர்ந்து அடக்குமுறைக்கு எதிராக, ஒன்றிணைந்து உறுதியாக குரல் கொடுப்போம் என உறுதியேற்போம்!
தம் கடமையைச் செய்வதற்காக சிறைப்படுத்தப்படும் பத்திரிகையாளர்களின் உடன் நின்று அவர்களது விடுதலையை உறுதிசெய்வோம் என்று உறுதியேற்போம்!
கண்காணிப்பு மற்றும் தணிக்கையை சட்டப்பூர்வமாக மாற்றும் முயற்சியை முறியடிப்போம்!
பத்திரிகையாளர்களும் பத்திரிகை நிறுவனங்களும் சந்திக்கும் அச்சுறுத்தல்களை ஒன்றிணைந்து முறியடிப்போம் என உறுதியேற்போம்!
பணி இடத்தில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் அநியாய பணிநீக்கம் மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை சங்கமாக ஒன்றிணைந்து முறியடிப்போம் என உறுதியேற்போம்!
பத்திரிகை நிறுவனங்கள் தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக கடைபிடிக்கச் செய்வோம் என உறுதியேற்போம்!
மக்கள் படும் துயரங்களை உலகறியச் செய்யும் மகத்தான பணியில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளையில், தற்போதும் இஸ்ரேல் ராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுடன் தோளோடு தோள் நிற்போம் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அறைகூவல் விடுக்கிறது!