மாறன் குடும்பத்தில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகிய இருவருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் தயாநிதி மாறன் சார்பில் தன்னுடைய அண்ணன் கலாநிதி மாறனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கலாநிதி மாறன் முறைகேடாக சன் டிவி நிறுவன பங்குகளை தன் வசப்படுத்திக் கொண்டார் என அவருடைய சகோதரர் தயாநிதி மாறன் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்த நிலையில் சன் டிவி குழுமம் சார்பாக இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கலாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு:
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அக்கா மகனான முரசொலி மாறனால் தொடங்கப்பட்ட சன் டிவி குழுமம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மீடியா குழுமமாக செயல்பட்டு வருகிறது.
முரசொலிமாறன்.
ஆண்டுக்கு சுமார் 4, 544 கோடி வருமானம் கொண்ட ஒரு குழுமம் தான் சன் டிவி நெட்வொர்க். சன் டிவி குடுழுமத்தில் இருந்த பங்குகளை குறைவாக மதிப்பீடு செய்து 2003 ஆம் ஆண்டு கலாநிதி மாறன் மோசடியாக பங்குகளை தன் வசப்படுத்தி நிறுவனத்தை தனது கட்டுக்குள் கொண்டு வந்தார் என தயாநிதிமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
சன் டிவி தரப்பில் அறிக்கை:
கலாநிதி மாறன் அவருடைய மனைவி காவேரி மாறன் உள்ளிட்டோருக்கு 7 நாட்களுக்குள் 2003ஆம் ஆண்டில் இருந்த நிலைக்கே சன் குழும பங்குகளை கொண்டு வர வேண்டும் என தயாநிதி மாறன் சட்டபூர்வமான நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது.
தயாநிதிமாறன்.
இதனை அடுத்து பங்குச்சந்தையிலும் சன் டிவி குழுமத்திற்கு சொந்தமான பங்குகள் சரிவடைய தொடங்கின. இந்த சூழலில் தான் சன் டிவி தரப்பில் இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. 22 ஆண்டுகளுக்கு முன் நடந்தது: பங்குச்சந்தைக்கு சன் டிவி சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் பிரமோட்டர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது அது தொடர்பான விளக்கம் தான் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை கிட்டத்தட்ட 22 ஆண்டு காலத்திற்கு முன்பு சன் டிவி நெட்வொர்க் தனியார் நிறுவனமாக அதாவது பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாமல் தனியார் நிறுவனமாக செயல்பட்ட போது நிகழ்ந்தது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. செய்திகளில் இது தொடர்பாக வெளிவந்திருக்கும் தகவல்கள் தவறானது , உண்மைக்கு புறம்பானது மற்றும் சட்டத்திற்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனமாக இருந்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறுவதற்கு முன்னதாகவே அனைத்து சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் இடமும் நிறுவனம் தொடர்பாக அனைத்து விவரங்களும் பகிரப்பட்டு சட்டரீதியாக அனைத்து ஆய்வும் நடத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ்.
இந்த தகவல்கள் சன் டிவி நெட்வொர்க் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் இதுசன் டிவி நிறுவன பிரமோட்டரின் குடும்ப பிரச்சனை மற்றும் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட பிரச்சனை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.