போக்குவரத்து நெரிசலில் காஞ்சிபுரம் நகர மக்கள் தினந்தோரும் தவித்து வருகின்றனர். குறித்த நேரத்திற்கு ஆபிசுக்கு போகமுடியாமலும் பள்ளி, கல்லூரிக்கு போக முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். அலுவலக நேரங்களில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும் பஜார் வீதி, கலெக்டர் ஆபிஸ் ரோடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நிலவி வருவதால் போது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் கோயில்கள் நிறைந்த நகரமாக இருப்பதால், நாள்தோறும் வெளி மாநிலத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு சாமி கும்பிட வருகின்றனர். அது தவிற காஞ்சிபுரம் பட்டு நகரமாகவும் இருப்பதால்,பட்டுப் புடவைகள் எடுப்பதற்காகவும், ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரத்திற்கு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகர் பகுதியில் உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் என நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. தற்போது சபரிமலை மற்றும் மேல்மருவத்தூர் கோயில் சீசன் என்பதால், சபரிமலை மற்றும் மேல்மருவத்திற்கு செல்லும் பக்தர்கள், காஞ்சிபுரத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்து செல்கின்றனர்.
குறிப்பாக காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வரும் பக்தர்கள், பல ஆயிரக்கணக்கானோர் தினமும் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். சுற்றுலா வாகனங்களை நகர் பகுதிக்குள் அனுமதித்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், யாத்திரை நிவாஸ் என்ற பகுதியில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்திவிட்டு, அங்கிருந்து கோயிலுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
அப்பகுதியில் இருந்து பக்தர்கள் ஷேர் ஆட்டோ மூலம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று யாத்தர் நிவாஸ் பகுதியில், முறையான கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அவதி அடைந்துள்ளனர். வாகனம் நிறுத்தும் இடத்தில் கழிவுநீர் கழிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகர் பகுதியில் முறையான உள்ளூர் நகர பேருந்துகள் இல்லாததால், 500க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது. 3 பேர் செல்லக்கூடிய ஆட்டோக்களில் 8 பேர், 10 பேர் வரையும், 5 பேர் செல்லக்கூடிய ஆட்டோக்களில், 15 பேர் வரை ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்து, காமாட்சி அம்மன் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்ல நபர் ஒருவருக்கு 60 முதல் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோயில் வாசலிலே ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி விடுவதால், உள்ளூர் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.தினந்தோரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி முழுவதும் ஷேர் ஆட்டோக்கள் பெருகி இருப்பதால், போக்குவரத்து நெரிசலில் காஞ்சிபுரம் சிக்கி தவித்து வருகிறது. ஆன்மீக சுற்றுலா வரும் பயணிகளால் மாநகராட்சிக்கும், அரசுக்கு என பல துறைக்கும் வருவாய் கிடைத்து வந்தாலும், சுற்றுலா வரும் பயணிகளுக்கு எந்த வித வசதிகளும் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது பக்தர்களுக்கு கழிவறை வசதி மற்றும் சுகாதாரம் முறையாக வழங்க வேண்டும் என காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு கோரிக்கையை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் நம்மிடம் கூறுகையில், ஆன்மீக சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை இதுவரை மாவட்ட நிர்வாகமோ, மாநகராட்சியும் செய்து தர முன்வருவது கிடையாது. சுற்றுலாப் பயணிகளால் வரும் வருவாயை மட்டும் எடுத்துக் கொள்ளும், அரசு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் என்ன செய்துள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஒரு சில ஆட்டோ ஓட்டுநர்கள் விதிகளை மீறுவதாக புகார் எழுந்துள்ளது. விதிகளை மீறும் ஆட்டோ ஓட்டுனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், போக்குவரத்துத் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்காத வகையில், ஒவ்வொரு கோவிலுக்கு அருகே ஆட்டோக்கள் நிறுத்துவதற்கான, இடங்களையும் ஏற்படுத்தி தரவேண்டும். காஞ்சிபுரம் நகர் பகுதியில் மினி பேருந்துகள் இயக்குவது, ஆன்மீக சுற்றுலா வரும் பயணிகளுக்கு முறையான கழிப்பறை வசதி, இலவச தங்கும் கூடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தருவதற்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.காஞ்சிபுரம் நகர் பகுதியில், மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கலாம். காஞ்சிபுரத்தில் இருக்கும் முக்கிய கோயில்களுக்கு இந்த மின்சார பேருந்துகள் மூலம் இணைப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதன் மூலம் காஞ்சிபுரம் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவது மட்டும் இல்லாமல், ஆன்மீக சுற்றுலா வரும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். என்று தெரிவித்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் நெரிசலில் சிக்காமல் அவர்கள் சென்று வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.