சென்னை சத்தியமூர்த்தி பவனில் கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கடந்த மாதம் 20ஆம் தேதி நடந்தது. இதில் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட சிவகங்கை தொகுதி எம்பி கார்த்திக் சிதம்பரம் கூட்டணி கட்சியான திமுகவை விமர்சித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஈவிகே.எஸ் இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அவர்கள் ரெண்டு பேர் இடையே வார்த்தை போர் வெடித்தது. அதே வேளையில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே ஆர் ராமசாமி முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோரை அழைக்காததால் கோஷ்டி பூசல் நீடித்து வந்தது. இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்திய மூர்த்தி பவனுக்கு வந்திருந்தனர்.
அப்போது அவர்கள் கார்த்தி சிதம்பரம் எம்பி மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவரின் செயல்பாடுகளை கண்டித்து தங்களுடைய ஆதங்கத்தை கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையிடம் புகாராக தெரிவித்தனர். பின்னர் பரபரப்பான கடிதம் ஒன்றை செல்வப் பெருந்தகையிடம் வழங்கினார்கள். அந்த கடிதத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் தங்கள் தலைமையில் நடைபெற்றது
எங்களைப் போன்ற நிர்வாகிகளை அழைக்காமல் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் என்பது குடும்ப கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சி அனைவருக்கும் சொந்தமானது. அந்தக் கூட்டத்தில் கார்த்திக் சிதம்பரம் எம்பி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை பற்றி பேசியது நியாயமானது. ஆனால் நமது பிரதான கூட்டணி கட்சியான திமுகவை விமர்சித்து பேசியது மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அளிப்பதாகும்.
எம்பி பதவியில் அவர் மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்துடன் பேசியுள்ளார். கூட்டணி தர்மத்துக்கு எதிராக பரப்புரை ஆற்றினால் எதிர் வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எப்படி மாவட்ட அளவில் பேச்சு வார்த்தை நடத்தி இட ஒதுக்கீடுகளை பெற முடியும்? இவற்றை கருத்தில் கொண்டு ஆராய்ந்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன.
இரண்டு அணிகளாக கட்சி பிளவுபட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு சாரராக கூட்டத்தை நடத்தியதை கண்டிக்கத்தக்கது. 2 அணி நிர்வாகிகளை அழைத்து மீண்டும் தங்கள் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு பாரபட்சம் இல்லாத தலைவர்களை கொண்டு குழு அமைக்க வேண்டும். தற்போது உள்ள மாவட்ட தலைமை எம்பி பொறுப்பில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்பட்டதால் நியாயமாக எதுவும் நடைபெறாது இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக் சிதம்பரத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர்களை ராமசாமி தடுத்து நிறுத்தினார். அதனால் அனைவரும் கையை மட்டும் உயர்த்தி காண்பித்து விட்டு அமைதியாக புறப்பட்டு சென்றனர். முன்னதாக கே ஆர் ராமசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூட கார்த்தி சிதம்பரம் பெயரை பயன்படுத்தவில்லை. அவர் நிருபர்களிடம் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கூட்டத்திற்கு எங்களை அழைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வப் பெருந்தகை இடம் முறையிட்டும் அவர் டெல்லி தலைமையிடம் சொல்லி முடிவை அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார் என்று கூறினார்.
கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் மேலிடத்திற்கு எதிராகவும் ராகுல் காந்திக்கு எதிராகவும் கார்த்திக் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகிறார். இது தொடர்பாக அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் கட்சிக்கு எதிராக பேசி வரும் போக்கை கண்டித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் புகார் அளித்தனர். மேலும் கட்சி தலைமை விரைவில் கார்த்திக் சிதம்பரத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் என்கின்றனர் டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர்கள்.
கார்த்திக் சிதம்பரம் கட்சிக்காக ஒன்றும் உழைத்து விடவில்லை. கட்சிக்காக அவர் செய்த தியாகம் எதுவும் இல்லை. சிதம்பரத்தின் மகன் என்ற ஒரே அடையாளம் மட்டும்தான் அவருக்கு இருக்கிறது .எனவே அவருக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்ததே பெரிய விஷயம் என்கின்றனர் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள்.
குடும்ப கட்சியாக இல்லாமல் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை நிறுவ வேண்டும் என்றால் கோஷ்டி பூசலை ஒழித்து தீவிரமான அரசியலை மேம்படுத்தி மக்களிடத்தில் கொண்டு சேர்த்தால் வரும் காலங்களில் காங்கிரஸ் தன்னந்தனியாக தனித்து நிற்கும் என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்.