இருளர் மக்களின் சுடுகாட்டு நிலம் எரி மேடை ஆக்கிரமிப்பு ,உரிய நடவடிக்கை எடுப்பது யார்? செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், குண்ணப்பட்டு ஊராட்சியில் சுமார் 30க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் இறந்தால் அவர்களது சடலத்தை அடக்கம் செய்வதற்காக ஊரையொட்டி உள்ள ஓடை பகுதியை சுடுகாடாக பயன்படுத்தி அடக்கம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த இடத்தில் சுடுகாடு வேண்டாம். வேறு ஒரு இடத்தில் உங்களுக்கு சுடுகாடு ஒதுக்கி தருகின்றோம் என்று கிராமத்தினர் சொல்ல, மறு பேச்சு சொல்லாமல் இருளர் மக்களும் அதற்கு சம்மதித்தனர்.செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப.,
இதனையடுத்து, குன்னப்பட்டு கிராமத்தில் மலை பகுதியை யொட்டி உள்ள புறம்போக்கு நிலம் இருளர் சுடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்டு, அங்கு அரசு மூலம் 2014-2015 ஆண்டிற்கான தாய் திட்டத்தின் கீழ் சுடுகாட்டுக்கு செல்லும் சிமெண்ட் சாலை எரிமேடை போன்றவை அமைக்கப்பட்டது.
ஆனால் இந்த எரி மேடையில் ஒரே ஒரு நாள் கூட இருளர் மக்கள் தங்கள் பிணத்தை எரித்த பாடில்லை. ஏனென்றால் எரிமேடையில் வைக்கோல் போர் போட்டு ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது.

ஒதுக்கப்பட்ட சுடுகாட்டு நிலத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சரி புதைக்கவாவது செய்வோம் என்று புதைத்தால் புதை குழியின் மீது வரப்புப் போட்டு இறந்து போனவர்களின் நினைவிடங்கள் அவமதிப்புள்ளாகிறது.
தமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும், தமது வாழ்வியல் அவமதிப்புள்ளாகி வருவதும் கண்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டார்கள்.



நடையாய் நடந்தது தான் மிச்சம். கால் தேய திரிந்தது தான் மிச்சம். இம்மியளவும் நீதி கிடைத்த பாடில்லை. இதாவது பரவாயில்லை. குன்னப்பட்டு ஊராட்சி இட ஒதுக்கீடு அடிப்படையில் இருளர் மக்களுக்காக ஒதுக்கப்பட்டு, இருளர் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒப்புக்கு ஓரிரு நாள் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்திருப்பாரா? என்று கூட தெரியாது. அந்த இருளர் தலைவர் விரட்டி, துரத்தி அடிக்கப்பட்டார். இது நாள் வரை அவர் ஊர் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை.
நாமெல்லாம் இருளர் சமூகச்சிக்கலைப் பேசும் ஜெய்பீம் போன்ற படங்களை உச்சி முகர்ந்து கொண்டாடுகின்றோம். நிஜத்தில் இருளர் மக்களுக்கு நிகழும் கொடுமைகளை கண்டு ஜடம் போலக் கடந்து செல்கின்றோம்.

எந்த நேரமும், எந்த பக்கமிருந்தும் வாழ்வின் மீதான அச்சுறுத்தல் நிகழக்கூடும் என்ற இருளர்களின் பதட்டத்தை, அனாதரவான சூழலை,
பாம்பைக் கூட நம்ப நம்பலாம், சக மனிதனை தான் நம்ப முடியாது என்று சொந்த மண்ணில் அகதிகளாய் வாழும் இருளர் மக்களின் அவல நிலை குறித்து எத்தனை முறை மனுக்கள் கொடுத்தும், எத்தனை முறை முறையிட்டும் என்ன நடந்து விடப்போகிறது?
