யாரோ செய்த தவறுக்கும், அலட்சியத்திற்கும் தங்களது ஆசைக் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு, ஆறுதல் கூற வார்த்தைகள் இன்றி உறவினர்களும், ஊர் மக்களும் கையறுநிலையில் நிற்பது கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெரும் கனவுடன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீடு திரும்பிய தந்தைக்கு அடுத்த அரை மணி நேரத்தில் அதிர்ச்சிகரமான தகவல் வந்துள்ளது. பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் சிக்கி மகள் இறந்துவிட்டதாக கூறியவர்கள், அடுத்த சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனும் உயிரிழந்ததாக கூறியதை கேட்டு, தாயும் தந்தையும் மனம் உடைந்து நொறுங்கிப் போயுள்ளனர். யாரோ செய்த தவறுக்கும், அலட்சியத்திற்கும் தங்களது ஆசைக் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு, ஆறுதல் கூற வார்த்தைகள் இன்றி உறவினர்களும், ஊர் மக்களும் கையறுநிலையில் நிற்பது கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சுப்பிரமணியபுரம் அருகே சின்னக்காட்டு சாகை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி திராவிட மணி – கலைச்செல்வி. இந்த தம்பதி, கிராமத்தில் கூறுவது போல் ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதில், மகள் சாருமதி 11ஆம் வகுப்பும், மகன் செழியன் 10ஆம் வகுப்பும் படித்து வந்தனர். குமாரபுரம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் படித்த இருவரும், நாள்தோறும் பள்ளி வாகனத்திலேயே சென்று வந்தனர். மகள் சாருமதியை மருத்துவராகவும், மகனை ஐஏஎஸ்-க்கு படிக்க வைத்து கலெக்டராகவும் ஆக்கி அழகு பார்க்க தாயும், தந்தையும் உயரிய குறிக்கோளுடன் இருந்துள்ளனர்.

இதற்காக, தங்களுக்கு சொந்தமாக உள்ள ஒரு ஏக்கர் விளைநிலத்தில் விவசாயம் செய்ததுடன், கணவன் – மனைவி இருவரும் கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளனர். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவர்களை நன்றாக படித்து வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற வேட்கையில், வெளியூரில் உள்ள பள்ளியில் சேர்த்துள்ளனர். அவர்களின் லட்சியத்தை நிறைவேற்ற எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே, பள்ளி வேனிலேயே பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நாள்தோறும் காலையில் பள்ளிக்கு புறப்படும்போது, தந்தை திராவிடமணிதான், தனது இரு பிள்ளைகளையும் வேனில் ஏற்றிவிடச் செல்வார். வழக்கம்போல் இருவரையும் ஏற்றிவிட்ட பின்னர் கூலி வேலைக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளார். அடுத்த அரை மணி நேரத்தில் உங்கள் குழந்தைகள் சென்ற பள்ளி வேன் மீது, ரயிலில் மோதி விபத்தில் சிக்கியதாக திராவிட மணிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கேட்டு தங்களது குழந்தைகளுக்கு என்ன ஆனதோ, ஏது ஆனதோ என பெற்றோர் பரிதவித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் படுகாயமடைந்த மகள் சாருமதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மகன் செழியனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை கேட்டு, தலையில் இடி விழுந்ததுபோல் நொறுங்கிப் போயுள்ளனர். ஒரே நேரத்தில் இரு குழந்தைகளும் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து, அவர்களின் எதிர்கால கனவு காற்றில் கரைந்து போனதால், பெற்றோர் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களுக்கு ஆறுதல் கூற முடியாமல் உறவினர்களும், ஊர் மக்களும் கையறுநிலையில் உள்ளனர். குழந்தைகளை கலெக்டராகவும், மருத்துவராகவும் ஆக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற வேட்கையில் படிக்க வைத்த பெற்றோர், தற்போது இரு பிள்ளைகளையும் பறிகொடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நிமிலேஷ் என்ற மாணவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விஸ்வேஷ் என்ற மாணவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி என்பது தெரியவந்துள்ளது.
இன்று காலை கடலூரிலிருந்து ஆலப்பாக்கம் வழியாக சென்ற தனியார் பள்ளி வேன் ஆளில்லாத ரயில்வே கேட்டு தாண்டி செல்லும்போது மயிலாடுதுறை செல்லும் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கு காரணம் வேன் ஓட்டுநர் சங்கர் செல்போன் பேசியதனால் ஏற்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆளில்லாத ரயில்வே கேட்டில் தினமும் அந்த வழியாக வேன் ஓட்டிச் செல்லும் டிரைவருக்கு காலையில் சிதம்பரம் செல்லும் ரயில் வருவதை தெரிந்தும் கூட விபத்தில் சிக்கியது எப்படி என்று கேள்வி எழுப்புகின்றனர் மாணவர்களின் பெற்றோர்கள்.

செல்போன் பேசியதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்கின்றனர் பெற்றோர்கள். ஏனென்றால் ஒரு பாஸ்ட் பேசஞ்சர் ரயில் ஆளில்லாத தண்டவாளத்தை கடக்கும் பொழுது ரயிலின் அதிர்வலைகள் நன்கு உணர முடியும் அதே நேரத்தில் ஆளில்லாத ரயில்வே கேட் கடக்கும்போது ரயில் ஓட்டுநர்கள் கண்டிப்பாக ஹாரன் அடிப்பார்கள் அந்த ஆறு சத்தத்தை கூட கேட்காமல் சங்கர் செல்போன் பேசியதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்கின்றனர்.
போலீஸ அதிகாரிகள் அது தவிர ரயில் வருவதை பார்த்ததும் மாணவர்களின் அலறல் சத்தத்தை கேட்டது வண்டியை வேறொரு பக்கம் திசை திருப்பி இருக்கலாம் என்கின்றனர் பெற்றோர்கள். எனவே தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு உரிமையான வேன் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்கின்றனர் கடலூர் ரயில் விபத்தில் உயிரிழந்த பெற்ற குழந்தைகளின் பெற்றோர்கள்.
