விடுதலை -2, தமிழ் சினிமாத்துறை வளர்ச்சியடையத் தொடங்கிய காலகட்டத்தில் திராவிட இயக்க அரசியல் தமிழ் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, தமிழ் மறுமலர்ச்சி என திராவிட இயக்க அரசியலின் சமூகத் தாக்கம் தமிழ் சினிமாவிலும் எதிரொலித்தது.
இயக்குனர் வெற்றிமாறன்.
பின் திராவிட இயக்கத்தின் தாக்கம் குறைந்து வாழ்க்கையின் எதார்த்தத்தை பதிவு செய்கிற சினிமாக்கள் ஒருபுறமும் சாதிய பெருமைகளை பேசுகின்ற சினிமாக்கள் மறுபுறமும் என சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவில் ஆங்காங்கே சில புரட்சிகர கருத்துக்களை தாங்கிய படங்களும் வெளிவந்து கொண்டிருந்தன.
இத்தகைய சூழலில் தான் பா.ரஞ்சித்/ ராஜு முருகன் போன்றோரின் வருகை தமிழ் சினிமாவில் ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் இருந்து சமூகத்தின் போக்கை எடுத்துரைக்கிற அவரது கதை சொல்லல் பிற இயக்குனர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை, ‘லப்பர் பந்து’ மணிகண்டன் ஆகியோர் சமூகத்தில் நிலவி வரும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை, தீண்டாமையை தனது சினிமாவில் பேசுவதற்கான வெளியை வழங்கி அவற்றை வெற்றி பெறவும் செய்தனர் தமிழ் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவின் இத்தகைய போக்குகள் அனைத்துமே தமிழ் சமூகத்தில் நிலவி வந்த, வருகிற சமூகக் கருத்தாங்கள், அரசியல் நிலைப்பாடுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டிற்கென்று இருக்கின்ற தனித்துவமான, குறிப்பான அரசியல் நிலைப்பாட்டில் இருந்து ஒரு முழுத் திரைப்படம் வெளிவரவில்லை என்ற குறையை இயக்குநர் வெற்றிமாறன் நிவர்த்தி செய்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல் என்றாலே அது விடுதலை அரசியல்தான். தனித்தமிழ் இயக்கம் கண்ட தமிழ்நாட்டு முன்னோடிகளான கி.ஆ.பெ.விஸ்வநாதம், மறைமலை அடிகள் ஆகியோர் பிரிட்டிஷ்-இந்தியாவில் முன்வைத்த தனித் தமிழ்நாடு கோரிக்கை தந்தை பெரியாரால் இந்திய அரசிடம் இருந்து சமூக, பொருளாதார, அரசியல் விடுதலையை கோருகின்ற தனி நாட்டு கோரிக்கையாக வலுவடைந்தது.
பெரியார் கருத்தியலோடு நின்றுவிட்டாலும் கூட, தன் வாழ்நாள் இறுதி காலங்களில் அவர் கூறிய ” எனக்குப் பின் வரும் இளைய தலைமுறை இரத்த சகதியில் தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவார்கள்”. என்பதற்கு ஏற்ப அவருக்கு பின் பேரறிஞர் அண்ணா தனி திராவிட நாடு கேட்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றத்தோடு சூழல் காரணமாக நிறுத்தினாலும்
தமிழர்களின் மனவோட்டத்தை நிறைவேற்றுவார்கள்
என்பதை மெய்ப்பித்தது தமிழ்நாடு விடுதலைப் படையும் அதன் தோழர்களுமே.
ஆனால் புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் அவர்களுக்குப் பின் வந்த லெனின், மாறன் போன்ற தோழர்களையும் அவர்கள் முன்வைத்த அரசியலையும் அவர்களது அமைப்புச் செயல்பாடுகளையும் தமிழ் சினிமா மட்டுமல்ல தமிழ்நாட்டு முற்போக்கு அரசியல் இயக்கங்களே பேச தயங்கி நின்றன.
அரசியல் இயக்கங்களே அரசுக்கு அடிபணிந்து பேச மறுத்த ஒரு அரசியலை அதுவும் தமிழ்நாட்டிற்கான விடுதலை அரசியலை தனது திரைப்படத்தின் மூலம் வெற்றிமாறன் கொண்டு வந்திருப்பது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. ஒரு விடுதலை அரசியலை பேசுவதற்கு துணிவு மட்டும் போதாது அரசியல் தெளிவும் வேண்டும். அந்த அரசியல் தெளிவும் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் சுருங்கிவிடாமல் பரந்துபட்ட அளவில் இருக்க வேண்டும்.
அத்தகைய பரந்துபட்ட அரசியல் தெளிவுதான் படத்திற்கு “விடுதலை” என்று பெயர் சூட்ட வைத்துள்ளது. தமிழ் சமூகம் உச்சி முகர்ந்து கொண்டாடப்பட வேண்டிய ஒரு கலைஞன் வெற்றிமாறன்.