chennireporters.com

3000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் உள்ள குரும்பிறை மலைக்குன்றில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மனிதர்கள்.

இறந்தால் அவர்களை புதைக்கும் ஈமச்சின்னங்களான கல்வட்டங்களை கள ஆய்வின் பொழுது உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கண்டறிந்துள்ளார்.

கொற்றவை ஆதன்.

இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் நம்மிடம் கூறியதாவது கல் வட்டங்கள் என்பவை பெருங்கற்கால பண்பாட்டை சார்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும்.

அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் வேட்டையின் போதோ வயது மூப்பின் காரணமாகவோ நோய் வாய்ப்பட்டோ இறக்க நேரிட்டால் இறந்தவர்களின் உடலை புதைத்து அவ்விடத்தில் அவர் நினைவாகவும் .

அடையாளத்திற்க்காகவும் தரையின்மேற்பரப்பில்பெரிய, பெரிய பாறை கற்களை வட்டமாக நட்டு வைத்து ஈமச்சின்னங்களாக அமைத்தனர்.

இதற்க்கு கல்வட்டம் என்று பெயர் இது அமைவதனால் பிற்காலத்தில் இறந்தவர்களை புதைப்பது இங்கு தவிர்க்கப்படுகிறது.

சில பகுதிகளில் இந்த கல் வட்டங்களின் கீழ் பெரிய பெரிய தாழிகளில் இறந்தவர்களின் உடலை வைத்தும் அவர்களுக்கு பிடித்த பொருட்களை வைத்தும் புதைத்து வைத்திருப்பார்கள்.

சுருங்கச்சொன்னால் இன்றைய சமாதிகள் அமைத்துகொண்டிருப்பதற்க்கு இதுதான் துவக்கமாக இருக்கும் எனகருதலாம்.மனிதர்களின் சுவடுகள் பெரும்பாலும் மலைகள் ஒட்டிய பகுதிகளிலும் மலைச்சரிவுகளிலுமே அதிகமாக காணப்படுகின்றன.

இந்தக் குறும்பிறைமலைக் குன்றில் பத்துக்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் அடுத்தடுத்து காணப்படுகின்றன.அவை ஒவ்வொன்றும் 5 மீட்டர் நீளமும்,5 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது.

மேலும் இதற்கு அருகிலேயே உள்ள பைரவர் குன்றிலும் சில கல்வட்டங்கள் காணப்படுகின்றன.நாங்கள் இக் கிராமத்திற்க்கு அருகில் உள்ள எடமிச்சி கிராமம் சின்னமலையிலும் அருகருகே

ஐந்துக்கும் மேற்பட்ட கல் திட்டைகள் மற்றும் கல் வட்டங்களை கண்டறிந்தோம்.எனவே இப்பகுதி அனைத்தும் அக்காலத்தில் ஒரே பகுதியாக இருந்திருக்கலாம் பெருங் கற்காலத்தில் ,மனிதர்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்க
வாய்ப்புள்ளது எனக்கருதலாம்.

தற்பொழுதும் இந்தப் பகுதி இங்கு வாழும் மக்களின் சுடுகாடாகவும் இடுகாடாகவும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கல்வட்டங்கள் இன்றிலிருந்து சுமார் 2500 லிருந்து 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதிலிருந்து இவ்வூர் மிகப்பழமையான ஊர்.இவ்வூரில் சுமார் 3000ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

இவ்வளவு பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வட்டங்களில் பலவற்றில் முட்செடிகள் சூழப்பட்டும் சில சிதைந்து அழியும் தருவாயில் உள்ளன.

எனவே தமிழகத் தொல்லியல் துறை உடனடியாக இவ்விடத்தை ஆய்வு மேற்கொண்டு அவைகளை அடையாளப்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.

மேலும் இதுகுறித்த தகவல்களை அனைவரும் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் எண்ணமாகும்
என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க.!