chennireporters.com

வருமான வரித்துறை நோட்டிஸை ரத்து செய்யகோரி கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

வருமான வரி மறுமதிப்பீட்டிற்காக, விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி., மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு, விற்பனை ஒப்பந்தம் பதிவு பத்திரம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, 2014-15, 2015-16ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை மறுமதிப்பீடு செய்வது தொடர்பாக, விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீநிதி சிதம்பரமும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், ‘வருமான வரித்துறை, வருமான வரிக் கணக்குகளுக்கான மதிப்பீட்டையும், மறு மதிப்பீட்டையும் தொடங்காத நிலையில், வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது.

இந்நிலையில், வருமான வரித்துறை நோட்டீசில் தலையிட முடியாது. சட்டப்படி மதிப்பீட்டையும், மறுமதிப்பீட்டையும் வருமான வரித்துறை மேற்கொள்ளலாம்.

வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!