சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் திமுகவினரிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சித் தேர்தல் 188 வது வார்டில் போட்டியிட மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் செல்வம் என்பவர் தனது மனைவியை போட்டியிட வைக்க முடிவு செய்திருந்தார்.
அதற்கான தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.இந்த நிலையில் நேற்று இரவு கூலிப்படையினர் மூலம் செல்வம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் சென்னையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்.இவர் மடிப்பாக்கம் தி.மு.கவின் 188 வது வட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார்.வரும் மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட அவரது மனைவி சமினா அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மடிப்பாக்கம் ராம் நகரில் உள்ள அவரது ஆபிசில் இரவு சுமார் ஒன்பது மணிக்கு எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்தது.அவர்கள் அண்ணனைப் பார்த்து மாலை போட்டு விட்டு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அலுவலகத்தில் இருந்த செல்வம் வெளியே வந்து அவர்களை வரவேற்றார்.மாலையுடன் வந்த அவர்கள், செல்வத்திற்கு மாலை போடும் போது உடனிருந்தவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் செல்வத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்கள்.
தனது ஆபிஸ் வாசலில் ரத்த வெள்ளத்தில் செல்வம் சரிந்து விழுந்தார். உடனடியாகசெல்வத்தின் ஆதரவாளர்கள், அருகில் இருந்த சரஸ்வதி மருத்துவமனைக்கு செல்வத்தை கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வம் கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் தொழில் போட்டியா, அல்லது அரசியல் பகையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வத்தை கொலை செய்த கூலிப்படையினரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கொலை செய்யப்பட்ட திமுக வட்ட செயலாளர் செல்வம்,பிரபல ரவுடி சிடி. மணியின் நெருங்கிய நண்பர் என்கிறார்கள் காவல்
துறையினர் .
செல்வமும், சிடி. மணியும் கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.சிறையிலிருந்த சிடி. மணி தற்போது பெயிலில் வெளியே வந்து தலை மறைவாக இருக்கிறார்.
தனது நண்பர் செல்வம் கொலை செய்யப்பட்டது தெரிந்தது சிடி மணி கதறி அழுத தாக கூறப்படுகிறது.
தனது நண்பனை கொலை செய்த ஒருவரை கூட உயிருடன் விட்டு வைக்கக் கூடாது என்று சபதம் எடுத்ததாகவும் அவர்கள் யார் எந்த ஏரியாவை சேர்ந்தவர்கள் என்பதை தனக்கு தெரிந்த காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு சிடி மணி கேட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .
அவர்கள் தற்போது எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து ஸ்பெஷல் ஸ்கெட்ச் போட்டு அவர்களை பழிவாங்க வேண்டும் என்று தனது கூட்டாளிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம் சி.டி. மணி.
இறந்து போன திமுக வட்ட செயலாளர் செல்வம் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திற்கு மிகவும் நெருக்கமானவர்.அது தவிர கட்சித் தலைமைக்கும் உதயநிதிக்கும் நல்ல பரிச்சயம் ஆனவர் என்கிறார்கள் திமுக தொண்டர்கள்.
சென்னையில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.