chennireporters.com

தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன், காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றததை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் நீண்ட இழுபறிக்கு பின்னர், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் துரைமுருகனுக்கு நீர்ப்பாசனம் மற்றும் கனிம வளத்துறை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காட்பாடி தொகுதியில் துரைமுருகன் வெற்றி பெற்றதை எதிர்த்து, அத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் வி.ராமு, சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘ வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே, காட்பாடி தொகுதியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தி.மு.க வேட்பாளர் துரைமுருகன் 85 ஆயிரத்து 140 வாக்குகள் பெற்றார் அவருக்கு அடுத்தப்படியாக வந்த தான், 84 ஆயிரத்து 394 வாக்குகள் பெற்றேன்.

746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார் ஆனால், வாக்கு எண்ணிக்கையின் போது, பதிவான தகுதியான வாக்குகள் பல நிராகரிக்கப்பட்டது.

தேர்தல் நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப் படவில்லை. ஆகவே, தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குகளையும், மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்.

காட்பாடி தொகுதியில் தி.மு.க. அமைச்சர் துரைமுருகன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல, தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.பழனியின் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு 370 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சார்பில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ‘தேர்தல் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.

குறிப்பாக தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்.

தென்காசி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.பழனி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார் இந்த இரு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வருமெனத் தெரிகிறது.

இதையும் படிங்க.!