அக்டோபர் 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் தற்போது 64 சுங்க கட்டண சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை ஒழிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய சிறப்பு கவன ஈர்ப்பு கேள்விக்கு பதிலளிக்கையில் மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா
இந்த தகவலைத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சருக்கு, அதிகாரிகளால் போதிய ஆலோசனைகள் வழங்கப்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.
அமைச்சரின் எழுத்துப்பூர்வ பதிலில், 1997 ஆம் ஆண்டின் முந்தைய தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் அறுபது கிலோமீட்டர் தூரம் குறித்து எந்த அளவுகோலும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இது 1997 விதிகளைப் பற்றிய தவறான புரிதலைக் குறிக்கிறது. இந்த விதியானது உண்மையில் இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையில் 80 கி.மீ தூரத்தை குறிப்பிடுகிறது.
மேலும், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, 60 கி.மீ சுற்றளவில் சுங்கச்சாவடிகள் அனுமதிக்கப்படாது என்று நாடாளுமன்றத்தில் தவறுதலாக அறிவித்து விட்டார் என்பதை இது குறிக்கிறதா?
சென்னையில் உள்ள பரனூர் சுங்கச் சாவடியில் சாலை பயனர்களுக்கு 2008 கட்டண விதிகளின் விதி 6 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பலன்களை மறுப்பது அநீதியானது. இது சுங்க கட்டணங்களில் 60 சதவீதம் குறைக்க அனுமதிக்கிறது, இதனால் 40 சதவீதம் குறைக்கப்பட்ட விகிதத்தில் கட்டணம் வசூலிக்க உதவுகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பரனூரில் செய்த முதலீட்டை விட ரூ.28.54 கோடி கூடுதல் இலாபம் ஈட்டியுள்ளது என்பதையும், விதிகளின்படி சுங்கக் கட்டணத்தைக் குறைக்கத் தவறிவிட்டது என்பதையும் அமைச்சர் ஒப்புக்கொள்கிறார்.
நிதின் கட்காரி.
அதுமட்டுமின்றி, வசூல் செய்யப்பட்ட அதிகப்படியான நிதியானது இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் டெபாசிட் செய்யப்படுகிறது என்பதும், அது தேசிய நெடுஞ்சாலைகளை மேலும் மேம்படுத்துவதற்கும் விரிவாக்குவதற்கும் ஒதுக்கப்படுகிறது என்ற விளக்கமும் மிகவும் கேள்விக்குரியது.
இந்த நடைமுறையானது சுங்கச்சாவடி கட்டணம் குறித்து நிறுவப்பட்ட சட்டங்களை மீறுவதாகவும், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகவும், சாலை பயனர்களின் செலவில் ஒரு சிலருக்கு பயனளிப்பதாகவும் தெரிகிறது. மேலும், இந்த முதலீடுகள், செலவுகள் மற்றும் வசூல்களை மறுஆய்வு செய்ய சுயாதீன தணிக்கை ஆணையம் என்று எதுவும் இல்லை.
தி.மு.க. மாநிலங்களை உறுப்பினர் பி.வில்சன்
கட்டண விதிகள் பெரும்பாலும் நெகிழ்வான விதிமுறைகளுடன் ஒப்பந்தக்காரர்களுக்கு சாதகமாக உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.. அதே நேரத்தில் பொது மக்கள் அத்தகைய அநீதியான சட்டத்தின் கீழ் நியாயமற்ற தொகையை செலுத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
எனவே, இந்த அநியாயமான சுரண்டலுக்கும், கொள்ளைக்கும் அஞ்சி நாம் நம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் ஒரு நாள் வரலாம்.
இந்த நியாயமற்ற சுங்கச்சாவடி கட்டணங்களை எதிர்க்கவும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றவும் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.