வங்கதேச எல்லையில் பூமிக்கடியில் பதுக்கப்பட்ட கண்டெய்னர்கள்! மோப்பம் பிடித்து அதிரடி காட்டிய பி.எஸ்.எப். இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்குள் சட்ட விரோதமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னரில் இருந்து 62,200 பென்சிடைல் இருமல் மருந்து பாட்டிலை பறிமுதல் செய்துள்ளனர்.
இவற்றின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனவும் பி.எஸ்.எப் அதிகாரிகள் கூறினர். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு தற்போது இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ளார். இடைக்கால அரசு அமைந்தது முதல் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது.
இடைக்கால அரசு பொறுபேற்றதில் இருந்து நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் வங்கதேச அரசு செயல்பட்டு வருகிறது. எல்லையில் தேவையின்றி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். வங்கதேசத்துக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான எல்லையில் வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நம் நாட்டு வீரர்களுடன் மோதுகின்றனர். அதேபோல் பாகிஸ்தான், துருக்கி, சீனாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளன. பாகிஸ்தானுடனும் வங்கதேசம் நெருக்கம் காட்டி வருவதனால் எல்லையில் முன்பை விட கண்காணிப்பு தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில்தான், வங்கதேச எல்லையில் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்த விவரம் வருமாறு:- இந்தியா வங்கதேச எல்லை அருகே மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் இருந்து வங்கதேசத்திற்கு சில வகை போதை பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, உள்ளூர் போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படையினர் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். இதில், பூமிக்கு அடியில் 7 அடி உயரமும் 10 அடி நீளமும் கொண்ட 3 இரும்பு கண்டெய்னர்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டெய்னர்களுக்குள் இருந்து 1.4 கோடி மதிப்புள்ள பென்சிடைல் இருமல் மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மொத்தம் 62, 200 பென்சிடியமல் இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியுள்ளனர். சட்ட விரோதமாக வங்காளதேசத்திற்கு இவை கடத்தப்பட இருந்ததாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.