பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான, பக்ரீத் இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம் நாள் இந்த பக்ரீத் பண்டிகை திருநாளாக கொண்டாடப்படுகிறது
பக்ரீத் வரலாறு
இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள்.
தியாகம்
இப்ராஹிமின் மகன் இஸ்மாயீல் பால்ய பருவத்தை அடைந்தபொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டார். இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியோடு பலியிட துணிந்த பொழுது, சிஃப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து நிறுத்தினார்.
சிறப்பு தொழுகைகள்
ஒரு ஆட்டினை இறக்கி வைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டினை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டார். இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாக திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் மேற்கொள்கின்றனர்.
இறைவன் பெயரால் பலி
இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கினை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்; எளியவர்களிடம் கருணை காட்டுங்கள், சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.
சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.