chennireporters.com

#father’s day; நான், அப்பா, மழை. மறக்க முடியாத இரவுகள். நெகிழ வைக்கும் தந்தையர் தினப்பதிவு.

வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான தோழர் சமரன் நாகன் அவர்கள் தனது தந்தை நாகன் பற்றி நினைவு கூறும் வகையில் தந்தையர் தினமான இன்று ஒரு பதிவை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.  நெஞ்சை நெகிழ வைக்கும் அந்தப் பதிவு அப்பாவின் மீது அளப்பரிய அன்பும், காதலும் கொண்டவர்களின் இதயத்தை கசக்கி பிழிந்தது . அவர் பதிவு செய்ததை நாம் நம் வாசகர்களுக்கு அப்படியே வழங்கியிருக்கிறோம்.  கருத்துக்களையும், அப்பாவின் மீது அன்பு வைத்திருப்பவர்களின் உங்கள் பாசத்தையும், நீங்கள் உங்கள் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.

எழுத்தாளர் சமரன் நாகன்.

அப்பாவுடனான மழை நாட்கள் மறக்க முடியாதவை.

மழை நாட்களால் மண் குடிசை ஈரிச்சிக்குனு ஓதம் காத்து இருக்கும். நிற்கவே முடியாது. படுக்க என்ன செய்வது?

ஓதம் படிந்த தரையில் வைக்கோல் பரப்பி அதன் மீது நெல் கோணிப்பைகளை விரித்து டிரங்கு பெட்டியில் இருக்கும் அம்மாவின் புடவைகள் மெத்தை விரிப்பாய் மாற்றி எங்களை படுக்க வைப்பார் அப்பா. நாங்கள் தூங்க போகும் முன் ரச கற்பூர வாசனை மணக்கும்.

அப்பாவிடம் கதை கேட்போம்.

அவர் சொல்லும், ‘தோல் இருக்க சுளை முழுங்கி ‘  என்ற கதையை கேட்கும் போது சிரித்து சிரித்து வயிறு வலிக்கும். இரவுகள் கதைகளோடு நகர.. நடுராத்திரியில் ஜோவென.. மழை பிடித்துக் கொள்ளும். ஆங்காங்கே குடிசை பொத்துக் கிட்டு ஒழுகுக தொடங்கும். இதற்காகவே காத்திருந்தவர் போல ஆங்காங்கே அண்டான், குண்டான்னு எடுத்து ஒழுகலுக்கு வைப்பார்.

நாகன், எழுத்தாளர் சமரன் நாகன்.

நிரம்பிய பாத்திரங்களுக்கு பதில் வேறு ஒரு  பாத்திரம் வைத்து நிரம்பிய நீரின் பாத்திரத்தை ஒவ்வொன்றாய் கொண்டு வந்து வாசலில் ஊற்றுவதே வேலையாய் போய், மழை ஓய்ந்த பின்னிரவில் நாட்டாங்கு மீது சாய்ந்து உட்காந்தப்படி உறங்கிக்கொண்டிருப்பார்.

தூங்கி எழுந்ததும் படுக்கையில் அப்பாவை தேடுவேன். நாற்று பறிக்க சென்றதாக அம்மா சொல்வார். பள்ளிக்கூடம் கிளம்புவதற்கு முன்..

ஒரு பெரிய தூக்கு சட்டியும் கையுமாக வீட்டுக்குள் நுழைவார். வேலை பார்த்த இடத்திலிருந்து கொண்டு வந்த சுடு கஞ்சி எங்களுக்கு கொடுத்து விட்டு அவர் பழைய கஞ்சி குடித்துவிட்டு பழையபடி கழனிக்கு போவார்.

மழை விடுமுறைகளில் அடம் பிடித்து அப்பாவோடு கழனிக்கு போவோம். ஜம்மாங் குடை போர்த்தி எங்களை வரப்பு மீது உட்கார வைத்துவிட்டு மழை நீர் சொட்ட சொட்ட கழனியில் தண்ணி மாறுவார்.

தந்தை நாகன்.

மரமேறி இளநீர் பறித்து கொடுத்து, நிரம்பி வழியும் கிணறுகளில் நீச்சல் பழக வைத்து, நண்டு பிடித்து , மாடு விரட்டி பொழுது சாயும் முன் வீட்டுக்கு கூட்டிவருவார் எங்களை. புளியம் மரம் உலுக்க போகவேண்டுமே அவரோடு. ஏறி நின்னார்னா மரக்கிளைகள் சொம்மா பேயாட்டம் ஆடும்.

ஒரு முறை வீட்டு வாசலில் கூட்டமாக ஏதோ பேசிக்கொண்டுடு நின்றார்கள். படித்திருந்த புத்தகத்தை மூடி வைத்து வீட்டு தட்டியை த் திறந்து கொண்டு வெளியில் வந்து பார்த்தேன்.

காய்ந்தப்போய் கிளைகள் நீட்டி நின்ற ஒரு முந்திரி மரத்தை அடியோடு வெட்டி அப்படியே தலையில் வைத்து சுமந்துகொண்டு மூச்சிரைக்க ஓட்டமும் நடையுமாக ஓடி வந்து கொண்டிருந்தார். ஊரே ஆச்சரியப்பட்டு போனது.

தனது குழந்தைகளுடன் எழுத்தாளர் சமரன் நாகன்.

பம்பரத்துக்கு சாட்டை கேட்போம். பழைய துணி கிழித்து தொடையில் வைத்து சாட்டை திரித்துக் கொடுப்பார். மயிர் காலில் வலி என்றாலும் மகிழ்ச்சி தான் அவருக்கு. சாட்டை திரித்துக் கொடுப்பதில் இருந்து, கில்லி தாண்டு செய்து கொடுப்பதுவரை, அவர் செய்யும் எல்லாமும் ஹீரோத்தனமாகவே இருக்கும்.

தோள் மேல் தூக்கி வைத்து கொண்டு ஊர் முழுக்க சுற்றி வருவார். சாயங்காலம் ஆன பஜார்க்கு கூட்டிட்டு போயி கல்லுண்டை, கலர் பாயாசமெல்லாம் வாங்கி தருவார்.

கொஞ்ச நேரம் கூட என்னை தரையில் இறக்கி விட்டது இல்லை அவர். நீ தூங்கிட்டு இருப்பே.. உன்ன மார்ல சாய்சிகிட்டு அவர் பாட்டுக்கு ஏர் ஓட்டிக்குணு இருப்பார்னு கீழ படுக்க போட மாட்டார்னு இப்பவும் பெரியவங்க சொல்ல கேட்டிருக்கிறேன்.

தனது குழந்தைகளுடன் எழுத்தாளர் சமரன் நாகன்.

தன் பிள்ளை நாலு பேரு மதிக்கிற மாதிரி பெரிய ஆளா வரணும் என்பது அவரது கனவு. கந்தசாமி செட்டியாரும் கஜேந்திர முதலியாரும் தான் அவருக்கு ஆஸ்தான ஆளுமை குறியீடுகள்.

நெழல்ல உட்கார்ந்து பார்க்குற மாதிரி ஏதாச்சும் ஒரு வேலை எங் புள்ளைக்கு கெடச்சா அது போதும் என்பது தான்’ அவரது உச்சப் பட்ச ஆசையாக இருந்தது.

கழனி காடுகளும்
களத்துமேடுகளுமே தனது
உலகமாக்கிக் கொண்டு – தன் மகன்
இந்த உலகத்தையே வெல்ல
வேண்டும் ஆசைப்பட்ட
அப்பாவிற்கு,

எழுத்தாளர் சமரன் நாகன்.

அவர் என் மீது செலுத்திய அந்த கனத்த அன்பை என் பிள்ளைகளுக்கு கடத்துவது தான் ; என் பிள்ளைகள் ஊடே இச்சமூகத்திற்கு வழங்குவது தான் அவருக்கு நான் செலுத்தும் பெற்ற கடனாகும்.

இதையும் படிங்க.!