chennireporters.com

படித்ததில் பிடித்தது. வென்றது யார்? ஜனநாயகமா!! பண நாயகமா?

முன்னாள் எம்.பி. திருக்குறள் முனுசாமி

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகம் வென்றதா பணநாயகம் வென்றாதா என்பதை ஆய்வு செய்கிறது இந்த கட்டுரை.

சமூக வலைதளத்தில் வைரலாகிவரும் பதிவு இது:

மாநகராட்சித் தேர்தலுக்காக ஒரு கவுன்சிலர் வேட்பாளர் செய்த செலவு 1.75 கோடி ரூபாயாம் கையூட்டு போதையில் சிக்க வைக்கப்பட்ட தமிழ்நாட்டு வாக்காளர்கள்

இனி அரசியல் கட்சிகளே நினைத்தாலும் தங்களை மாற்றிக்கொள்ள முடியாது. நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் அதற்கு செய்யப்படும் செலவுகள் இவற்றுக்கும்.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மன்ற அவைகளுக்கு நடக்கும் தேர்தலுக்காக செய்யப்படும் செலவுகளுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருந்தன.

இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தலின் போது திண்டிவனம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தினமணி நிறுவனர் ராம்நாத் கோயங்கா போட்டியிட்டார்.

ராம்நாத் கோயங்கா

அவர் விமானத்திலும், ஹெலிகாப்டர் எனும் வானூர்தியிலும் பறந்து வந்து பரப்புரை மேற்கொண்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திருக்குறள் முனுசாமி எனும் எளிய ஆனால் சிறந்த அறிவாளி நடந்து சென்றும் மிதிவண்டியில் சென்று பரப்புரை மேற்கொண்டார் வாக்குகள் சேகரித்தார்.

அந்தத் தேர்தலில் இந்திய நிலப்பரப்பில் அதிக வாக்குகள் பெற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக திருக்குறள் முனுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் நாம் அறியவரும் ஒரு உண்மை தமிழ்நாட்டு வாக்காளர்களின் அறம்சார்ந்த குணம் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஓரளவுக்கு நேர்மையாகவும் உறுதியாகவும் இருந்திருக்கிறது என்பதே. பணத்திற்கும் ஆடம்பரத்திற்கும் மயங்காமல் இருந்திருக்கிறார்கள் என்றும் நாம் அறிய முடிகிறது.

ஆனால் இன்று 2000, 3000 ரூபாய் பணம், கொலுசு, சமையல் பொருட்கள், மளிகை பொருட்கள் என தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு கொடுக்கும் கையூட்டு அதாவது வாக்குகளுக்கு விலை கொடுத்து வாங்கக்கூடிய ஊழல் வழக்கத்திற்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

ஒருபுறம் டாஸ்மாக் மதுபான போதையில் சிக்குண்டு கிடப்போர் தமிழ்நாட்டின் ஒருபுறம் இருக்க நடுத்தர மற்றும் வசதி வாய்ப்புள்ள வாக்காளர்களும் இன்று தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் கொடுக்கும் இந்த கையூட்டு பொருட்களை வரிசையில் நின்று வாங்கும் அவலம் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியிருக்கிறது.

சாலையோரமாக கீரை விற்பவர் காய்கறி விற்பவர் கூட காலையில் ஆயிரம் ரூபாய் முதலீடாகக் கொண்டு பொருட்களை வாங்கி மாலைவரை அவற்றை விற்றால் மாலையில் அவர் கைகளில் 1,100 ரூபாய் இருந்தால் நூறு ரூபாய் அவருக்கு வருவாய். 900 ரூபாய் இருந்தால் 100 ரூபாய் அவருக்கு நட்டம்.

ஆக ஒரு சிறு வணிகத்தில் கூட முதலீடாக இட்ட பணத்திற்கு ஒரு ரூபாயாவது கூடுதலாக எடுத்தால்தான் அவர் அடுத்த நாள் அந்த தொழிலை சிரமப்பட்டாவது மேற்கொள்ள முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பணிபுரியக்கூடிய பகுதி என்பது பரப்பளவில் பெரியது பல்வேறு தொழில் வளங்கள் தொழிற்சாலைகள் இருக்கக்கூடியது.

என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் ஒரு சிறு நகராட்சி மன்ற உறுப்பினருக்கு ஐந்து ஆண்டுகள் அவர் பொறுப்பில் இருந்தாலும் கூட அவரால் நியாயமாக ஈட்டக்கூடிய தொகை என்பது அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாயைத் தாண்டாது.

இதற்காக அவர்கள் குறைந்தது ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் நியாயமான தேர்தல் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஆக ஐந்து ஆண்டுகளில் அவருக்கு கிடைக்கக்கூடிய இலாபத் தொகை என்பதே ஒரு 50 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும். அதிலும் கோவில் செலவுகள் நன்கொடைகள் என மக்களுக்கு விருப்பப்பட்டு.

செய்யக்கூடிய செலவுகளை எல்லாம் கணக்குப் பார்த்தால் அந்த நகராட்சி மன்ற உறுப்பினர் ஐந்து ஆண்டுகளில் செலவு செய்த தொகையைக்கூட எடுக்க முடியாது.

ஆனால் இன்று ஒரு நகராட்சி மன்ற உறுப்பினராக போட்டியிடும் வேட்பாளர்கள் ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு ஆயிரம் இரண்டாயிரம் வெள்ளி கொலுசு மளிகை பொருட்கள் என கையூட்டுக்காகவே பல லட்சம் ரூபாயை செலவு செய்கிறார்கள்.

ஒரு மாநகராட்சியின் மாமன்ற அவைக்காகப் போட்டியிட்ட ஒரு கட்சியின் உறுப்பினர் 19ஆம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டும் செலவு செய்த தொகை ஒன்றே முக்கால் கோடி ரூபாய்.

ஒரு மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்காக ஒன்றே முக்கால் கோடி ரூபாய் ஒருவர் செலவு செய்கிறார் என்றால் அவர் ஐந்து ஆண்டுகளில் எத்தனை கோடியை ஈட்ட வேண்டும் என்று எண்ணிப் பார்த்தால் குறைந்தது இரண்டு கோடியாவது ஐந்து ஆண்டுகளில் அவர் ஈட்ட வேண்டும்.

இது சாத்தியமா என்று விசாரித்தபோது, ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் என்று அதிர்ச்சித் தகவலை நமக்குத் தருகிறார்கள் உள்ளாட்சி மறைமுக வருவாய் பற்றி நன்கு அறிந்தவர்கள்.

ஆக நேர்மையான வழியில் நியாயமாக சம்பாதித்து இந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா 2 கோடி என்றால் பத்து கோடி ரூபாயை எந்த நகராட்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் சம்பாதிக்க இயலாது.

முடிந்தவரை எல்லாவற்றையும் சுரண்ட வேண்டும், எல்லாவற்றுக்கும் விலை வைக்க வேண்டும், எல்லோரிடமும் பிடுங்க வேண்டும் எனும் நிலை இருந்தால் மட்டும்தான் ஒரு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஐந்து ஆண்டுகளில் இத்தனை கோடி சம்பாதிக்க இயலும்.

ஆக ஆண்டுக்கு இரண்டு கோடி என்று 5 ஆண்டுகளில் 10 கோடி வரை சம்பாதிக்க முடியும் என்கிற அந்த தெளிவும் உறுதியும் இருக்கின்ற காரணத்தினால்தான்.

தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுப்பதற்காக அடாவடி செலவுகள் செய்வதற்காக ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வரை ஒரு கட்சியின் வேட்பாளர் செலவு செய்கிறார் அதுவும் நகராட்சி மன்றத் தேர்தலுக்கு.

இது ஒருபுறமிருக்க அரசியல் கட்சிகள் இந்த நகர்ப்புற ஊராட்சி தேர்தலின்போது தொலைக்காட்சிகளில் விளம்பரம் உள்ளிட்ட இணைய வழி விளம்பரங்கள் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள்.

பரப்புரைகள் தேர்தல் அலுவலகங்கள் கட்சியினருக்கு செலவுக்கு பணம், உணவு உள்ளிட்ட செலவுகள், போக்குவரத்து என நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலுக்காக செய்யப்படுவதற்கு ஈடான செலவை இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு செலவு செய்திருக்கின்றன.

என்றால் அந்தக் கட்சிக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் வாயிலாக எத்தனை கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்?!

அவ்வாறு உறுதியாக பணம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில்தானே அவர்கள் நூறு, ஆயிரம் கோடி ரூபாயை உள்ளாட்சித் தேர்தலுக்காக செலவிடுகிறார்கள்.

வாக்குகளைப் பெறுவதற்கு போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களை கையூட்டு போதையில் சிக்க வைத்துவிட்டு இன்று அரசியல் கட்சிகளே திணறத் தொடங்கியிருக்கின்றன.

வாக்காளர்கள் அரசியல் கட்சிகளிடம் உரிமையோடு கையூட்டு கேட்கும் அளவிற்கு நிலை இன்று மாறி இருக்கிறது.

அதேபோல ஒரு வாக்காளர், எத்தனை கட்சிக்காரர்கள் இந்த கையூட்டை அளித்தாலும், பொருட்களை அளித்தாலும் மகிழ்ச்சியோடு அவற்றைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மன நிலை உருவாகி இருக்கிறது.

ஒரே வீட்டில் இரண்டு மூன்று கட்சியினரிடம் பணம் வாங்கிக்கொண்டு பணத்திற்கு ஏற்ப, எண்ணிக்கையில் வாக்குகளை அளிக்கக்கூடிய நிலைக்கும் வாக்காளர்கள் வந்துவிட்டார்கள்.

ஆக அரசியல் கட்சிகள் தாங்கள் பெருமளவில் பணத்தை சுரண்டுவதற்காக மக்களை கையூட்டு லஞ்சம் கொடுத்து ஊழல்வாதிகளாக, முழுச் சந்திரமுகிகளாக மாற்றி வைத்து விட்டார்கள்.

இனி ஒரு அரசியல் கட்சி, தாமாக மனம் திருந்தி இனிமேல் வாக்குகளை பணம் கொடுத்து வாங்க மாட்டோம் என்று எண்ணினால்கூட அந்தக் கட்சி மக்களிடம் வாக்குகளை பெற முடியாத நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

அதேபோல தேர்தலில் செலவு செய்ய முடியாத எந்த நேர்மையான வசதி குறைவான நபர்களும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

தேர்தலில் பல ஆயிரம் கோடியை செலவு செய்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாங்கக்கூடிய அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் – இவர்களிடமிருந்து கூச்சமே இல்லாமல் பணத்தைக் கையூட்டை வாங்கிக் கொள்ளக்கூடிய வாக்காளர்களுக்கும் இடையே நடக்கக்கூடிய கொள்ளை வணிகமாக தேர்தல்கள் முழுமையாக மாறிவிட்டன.

ஒன்று எல்லா அரசியல் கட்சிகளும் மனம் திருந்தி மூன்று முதல் ஐந்து தேர்தல்களிலாவது பணம் கொடுக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுத்து வாக்காளர்களை மாற்றாவிட்டால் பெரும் பணம் படைத்த வேட்பாளர்கள் கூட தேர்தலில் போட்டியிட முடியாத நிலை விரைவில் ஏற்படும்.

மக்களின் கையூட்டு போதையை அளவுக்கு அதிகமாக ஏற்றி வைத்துள்ள அரசியல் கட்சிகள் புலி வாலைப் பிடிக்கவில்லை மாறாக மத யானையின் வாலைப் பிடித்திருக்கின்றன.

அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்த தமிழ்நாட்டு வாக்காளர்களை அறம் என்றால் என்ன? அதை பின்பற்றினால் அதற்கு கொலுசு தருவீர்களா குக்கர் தருவீர்களா பணம் தருவீர்களா என்று கேட்கும் அளவிற்கு வாக்காளர்களை கையூட்டு அடிமைகளாக மாற்றிவிட்டிருக்கின்றன இந்த அரசியல் கட்சிகள்.

இதில் வேடிக்கை என்னவெனில் இந்த கொள்ளை வணிகத்திற்கு “தேர்தல்கள்” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த நாடு ஜனநாயகக் குடியரசு என்கிறார்கள். மாநில மக்களின் சுயாட்சி என்கிறார்கள், சமூக நீதி மண் என்கிறார்கள்.தன்னாட்சித் தேர்தல் ஆணையம் என்கிறார்கள்.

வெட்கம்.

சமூக ஆர்வலரின் மனக்குமுறல்
ஊடகவியலாளர் 20/2/22

இதையும் படிங்க.!