திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக துணை நடிகை கொடுத்த புகார் தொடர்பான வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கேட்டு சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை பெசண்ட் நகரைச் சேர்ந்த துணை நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில், அடையாறு அனைத்து மகளிர் போலீசார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், மோசடி, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு உள்ளிட்ட 5 குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்த புகாரில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், மணிகண்டனின் பேச்சை நம்பி தான் கர்ப்பம் அடைந்ததாகவும், அதை அவர் கட்டாயப்படுத்தி கலைத்துவிட்டார் என்றும், அதன்பின்னர் தன்னை மிரட்டியதுடன்,
சமூக வலைதளங்களில் போட்டோக்களை பதிவேற்றம் செய்து அவமானப்படுத்தி விடுவதாகவும் மிரட்டி வந்தார் என துணை நடிகை சாந்தினி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில், மணிகண்டனின் முன் ஜாமின் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானதை அடுத்து, அவர் தலை மறைவானார்.
பெங்களூரில் பதுங்கியிருந்த மணிகண்டனை இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமின் கேட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் இந்த மனு, நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.