தேனி என்.ஆர்.டி. நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக உள்ள முருகானந்தம்(56) என்பவர், , தவறான கணக்கு காட்டி ரூ.1 கோடியே 16 லட்சம் கையாடல் செய்துள்ளார். அந்த பணத்தில் கோவிலுக்கு நன்கொடை வழங்கியதோடு, குடும்பத்தோடு சுற்றுலா சென்று செலவு செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.முருகானந்தம்
தேனி என்.ஆர்.டி. நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கழிவுநீர் அகற்றும் கோட்டத்தின் தலைமை அலுவலகத்தின் உத்தரவின்பேரில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரி வரதராஜன் கடந்த ஜூன் 6, ஆகஸ்ட் 5,செப்டம்பர் 24, 26ம் தேதிகளில் ஆய்வு செய்தார்.அதில், அங்குள்ள குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய முருகானந்தம் என்பவர் (திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர்) , தவறான கணக்கு காட்டி ரூ.1 கோடியே 16 லட்சம் கையாடல் செய்து இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து முருகானந்தம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் கருத்தப்பாண்டியன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்திடம் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் முருகானந்தம் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். முருகானந்தம் கடந்த 20-ந்தேதி தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை கடந்த 29-ந்தேதி 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்பேரில் அவரை தேனி இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையிலான போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையை தொடர்ந்து அவரை நேற்று ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த விசாரணையின்போது கையாடல் செய்தது எப்படி? அந்த பணத்தை என்ன செய்தார்? என்பது குறித்து போலீசாரிடம் முருகானந்தம் தெரிவித்தார். அப்போது முருகானந்தம் கையாடல் செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.அதில், புதிய வீடு வாங்கியதாகவும், தனது குடும்பத்துக்கு ஆடம்பர செலவுகள் செய்ததாகவும், கோவில்களுக்கு நன்கொடைகள் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை ஒரு பஸ்சில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று ஆடம்பர செலவுகள் செய்ததாகவும் அவர் வாக்குமூலத்தில் கூறினாராம். இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.2019-ல் பெரியார் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் தட்டச்சராகப் பணியில் சேர்ந்த முருகானந்தம், பதவி உயர்வில் கண்காணிப்பாளராக பொறுப்புக்கு வந்தார் என்றும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மோசடி புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.