chennireporters.com

அரசு வழங்கிய பட்டா இங்கே! அரசு வழங்கிய இடம் எங்கே?

சுமார் 16 ஆண்டுகளாக அரசு பட்டா பெற்றும், உரிய நிலத்தில் குடியேற முடியாமல் பரிதவிக்கும் 130 குடும்பங்களுக்கு தீர்வு வழங்க கோரி, அம்மக்களின் பிரதிநிதிகளுடன், அறப்போர் இயக்கம் இணைந்து (06.06.2022) சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உடனடி தீர்வு காணுமாறும் கோரிக்கை வைத்துள்ளது.

2005ல் எடப்பாடி நகர அரசு மருத்துவமனை கட்டுமான பணி துவங்கும் போது, அந்த இடத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த சுமார் 18 குடும்பங்களை, அரசு நிர்வாகம் அப்புறப்படுத்தியது, அப்போது அவர்களுக்கு மாற்று இடம் தருவதாக அரசு உறுதியளித்தது.

அதை தொடந்து விளிம்பு நிலை மக்கள் அடையாளம் கண்டு, அந்த 18 குடும்பங்கள் உட்பட சுமார் 130 குடும்பங்களுக்கு 17.11.2006 அன்று, சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பட்டா வழங்கப்பட்டது, அந்த நிகழ்வில் அப்போதைய வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டு பட்டாவையும், அதற்குறிய லேஅவுட்டும்(Lay-Out Sketch) பயனாளிகளுக்கு வழங்கினார். ஆனால் அரசு பட்டா கிடைத்தும் அங்கு குடியேறமுடியாமலும், மாற்று இடம் கிடைக்காமலும், சுமார் 16 ஆண்டுகளாக, இன்று வரை தெருவோரமாகவே வாழ்ந்து வருகின்றனர் அந்த பயனாளிகள்.

பட்டா கிடைத்த 130 பயனாளிகளில் சுமார் 30 பயனாளிகள் ஆரம்பத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட, பட்டா நிலத்தில் வீடு கட்ட முயன்றனர், அப்போது ஒரு நபர் முழு நிலத்திற்கும் உரிமை கோரினார். மேலும், அந்த நபர் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியதாகவும், நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததாகவும் தெரிகிறது. இதனால், அரசிடம் இருந்து பட்டா கிடைத்தும் உரிய நிலம் கிடைக்காமல் 130 பயனாளிகளும் மீண்டும் நிலமற்றவர்களாக மாறினர். இதற்கிடையில், பயனாளிகளுக்கு மாற்று நிலம் ஏற்பாடு செய்து தருவதாக ஆட்சியர் மூலம் அரசு உறுதியளித்ததாக தெரிகிறது.

அதற்காக சேலம், ஆவணிபேரூர் கீழ்முகம் கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் (HR & CE) கட்டுப்பாட்டின் கீழ் வரும், அருள்மிகு கோட்டை மாரியம்மன் & சின்ன மாரியம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான, சர்வே எண். 246/2 – 6.30 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு,அந்த நிலத்திற்கு சந்தை மதிப்பு / வழிகாட்டு மதிப்பைவிட சுமார் 150% அதிகம் செலுத்த ஒப்புதல் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் கடிதம் வழங்கியதாக அறிகிறோம் (ந.க.எண் 20034/2011(pc2) – நாள் 07.03.2012), ஏறக்குறைய 9 ஆண்டுகள் கடந்தும், இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

விளிம்பு நிலையில் வாழும் அந்த மக்கள், கைத்தறி மற்றும் இதர பகுதிகளில் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாக சேலம் எடப்பாடி தாலுகா மற்றும் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் பல்வேறு அதிகாரிகளின் அலட்சிய போக்கால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியாகும், மேலும் கடந்த காலங்களில் பல அதிகாரிகளின் அலட்சிய போக்கு காரணமாக மக்கள் ஏற்கனவே நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நீண்ட கால பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணுமாறும், 130 பயனாளிகளுக்கும் மேற்கண்ட இடத்திலோ அல்லது அருகிலுள்ள வேறு இடத்திலோ உடனடியாக பட்டா மற்றும் உரிய நிலம் வழங்க அறப்போர் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க.!