chennireporters.com

எடப்பாடிக்கு துரோகம் செய்த அண்ணாமலை போட்டுக் கொடுத்த ஐ.டி விங்.

தமிழக பாஜவின் ஐடி விங் தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், நேற்று முன்தினம்   எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்ததித்து தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். இந்த தகவல், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிர்மல் குமார் எடப்பாடி வீட்டிற்கு போகும்போது, பிற்பகல் 2.30 மணியளவில் நிர்மல்குமாருக்கு வந்த போனில், பாஜ தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது நிர்மல்குமார், அண்ணா.. சின்ன மீட்டிங்கில் உள்ளேன், பிறகு பேசுகிறேன் என்று கூறி அண்ணாமலையின் செல்போன் இணைப்பை துண்டித்தார். எடப்பாடி வீட்டில் இருந்தவரை அண்ணாமலையுடன் நிர்மல்குமார் தொடர்பில் தான் இருந்துள்ளார்.

அந்த அளவுக்கு நம்பிக்கையாகவும், நெருக்கமாகவும் இருந்தவர் தான் நிர்மல் குமார். இருப்பினும் இருவருக்கும் தொடர்ந்து பிரச்னைகள் இருந்துவந்தது. எடப்பாடியை சந்திக்க உள்ளே சென்ற நிர்மல்குமார் 45 நிமிடம் அவரிடம் தனியாக பேசியுள்ளார். அப்போது, அண்ணாமலை பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை எடப்பாடியிடம், நிர்மல்குமார் சொன்னதாக தெரிகிறது. அதுவும் கூட்டணியில் இருந்தே அண்ணாமலை குழிபறித்த பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அண்ணாமலையை பற்றி எல்லோரும் எடப்பாடியிடம் சொல்லும்போது, நமக்கு சொந்தக்கார பையன் அண்ணாமலை. அதனால், அவர் நமக்கு எதிராக எதையும் செய்ய மாட்டார் என கூறி அவர்களின் பேச்சை தட்டி கழித்தார். இந்த நிலையில் தான் நிர்மல் குமார், எடப்பாடிக்கு எதிராக நடந்து வரும் பல்வேறு விஷயங்களை போட்டு உடைத்துவிட்டார்.

அதிமுகவுக்கு எதிராகவும், எடப்பாடிக்கு எதிராகவும் அண்ணாமலை என்ன செய்தார். செய்து வருகிறார் என்பதை நிர்மல்குமார் முழுவதுமாக சொல்லியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பாஜவின் ஐடி விங்க் என்ன செய்தது என்றால், தமிழகத்தை பொறுத்தவரை நமக்கு எதிரி காங்கிரஸ் கிடையாது.

அதனால காங்கிரசுக்கு கூட ஓட்டு போடுங்கள். அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள். அதிமுக, பாஜவை மதிக்காத கட்சி. தேர்தலில் தோற்றால் தான் அதிமுகவுக்கு புத்தி வரும் என்ற நிலையில்தான், நாடாளுமன்ற தேர்தலில் நம்மிடம் வருவார்கள் என்று ஐடி விங்க் பிரசாரம் செய்தது.

அந்த அளவுக்கு பாஜ, அதிமுகவுக்கு செய்த துரோகம் எல்லாவற்றிற்கும் அண்ணாமலை தான் காரணம் என்றும், அப்போது நிர்மல் குமார் ஆதாரத்துடன் கூறியுள்ளார். அதிமுக உடைவதற்கும் அண்ணாமலை தான் காரணம். உடைவதற்கு என்னென்ன விஷயங்களை அண்ணாமலை செய்தார் என்ற விவரங்கள் அனைத்தையும் எடப்பாடியுடனான சந்திப்பின்போது நிர்மல் குமார் உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

மேலும், பாஜ உள்கட்சிக்குள் நடைபெற்று வரும் ஆபாச ஆடியோ விவகாரம் தொடர்பாகவும், அப்போது எடப்பாடியிடம் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அனைத்து விவரங்களையும் ஆதாரத்துடன் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட எடப்பாடி அதிர்ச்சியடைந்துள்ளார். மலைபோல நம்பிய அண்ணாமலை இப்படி செய்தார் என்ற விரக்தியில் எடப்பாடி இருந்து வருகிறார். இதற்கு தக்க பதிலடி விரைவில் கொடுப்பேன் என்று எடப்பாடி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை பற்றி அனைத்து விவரங்களையும் எடப்பாடியிடம், பாஜவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார் தெரிவித்துள்ள விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

பாஜவில் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்தான் இந்த ஐடி விங் தலைவர் நிர்மல் குமார், பாஜவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தபோதே இப்பிரச்னை, பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நிர்மல்குமார், அண்ணாமலை குறித்து எடப்பாடியிடம்  ஆதாரத்துடனான தெரிவித்த பட்டியல் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.  அண்ணாமலைக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கையை  என்ன எடப்பாடி என்ன செய்யப்போகிறார் என்று திமுகவின் கூட்டணிக்கட்சிகள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க.!