chennireporters.com

ஆருத்ரா நிறுவன மோசடி நடிகர் ஆர்.கே. சுரேஷ்க்கு தொடர்பு.

ஆருத்ரா நிறுவன மோசடி- நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில்  தெரியவந்துள்ளது. விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அவர் 2 மாதமாக வெளிநாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டாளர்களிடம் முதலீடாக பெற்ற 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக பொளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா, மைக்கேல் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் இயக்குனர்களான ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேனேஜர் மற்றும் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ராஜா, அய்யப்பன், ரூசோ, ரஜசேகர் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது, இதில் பாஜக நிர்வாகியும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், அதனை உறுதிசெய்ய பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்றுள்ளது.

ரூசோ, மோசடியின் மூலம் கிடைத்த பணத்தின் குறிப்பிட்ட தொகையை ஆர்.கே.சுரேஷிடன் கொடுத்துவைத்திருப்பதாகவும், ரூசோ மற்றும் ராஜசேகர் இருவருடனும் ஆர்.கே.சுரேஷ் தொடர்பில் இருந்துவந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் ஆர்.கே.சுரேஷ் செல்போன் நம்பர் மற்றும் அவர் வந்துசென்ற சிசிடிவி காட்சிகள் போன்ற பல்வேறு ஆதாரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வைத்துள்ளனர்.

இது தொடர்பாக ஆர்.கே.சுரேஷை விசாரிக்க அவரை தொடர்புகொண்டபோது, அவரது செல்போன் இரண்டு மாதங்களாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அவரிடம் உரிய விசாரணை நடத்தாமல் அவருடைய தொடர்பு என்ன என்பதை உறுதியாக சொல்லமுடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். ஒருவேளை அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால், அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள இருப்பதாக பொருளாதாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க.!