chennireporters.com

பாரதிய பாசா சமிதி அமைப்பின் தலைவருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்.

தமிழ்நாட்டில் 35% பிற மொழியினரா? இந்திய மொழிகள் வளர்ச்சிக் குழுத்தலைவரின் அறியாமை; தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

“தமிழ்நாட்டு மக்கள்தொகையில் 30 முதல் 35% மக்கள் தமிழ் அல்லாத பிற மொழிகளைப் பேசுபவர்கள் ஆவார்கள். தமிழ்மொழிகூட 12 முதல் 13 வட்டார மொழிகளில் பேசப்படுகிறது. ஆனாலும். தமிழ்நாடு அரசு தமிழை வளர்ப்பதில் மட்டுமே முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அம்மாநிலத்தில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டில் 75% மாணவர்கள் தமிழ்வழிக் கல்விப் பள்ளிகளில் படித்தார்கள். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 55%ஆக குறைந்துவிட்டது.

தமிழக அரசின் தவறான கொள்கையின் விளைவாக இப்படி ஆகிவிட்டது” என உயர் அதிகாரம் படைத்த பாரதிய பாசா சமிதி என்னும் அமைப்பின் தலைவர் சம்மு கிருஷ்ண சாஸ்திரி கூறியுள்ளார். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, சமற்கிருதத்தைப் பரப்புவதே தனது நோக்கமாகக் கொண்டவர். 2021ஆம் ஆண்டில் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துறை இந்திய மொழிகளை வளப்படுத்துவதற்காக உயர் அதிகாரக் குழு ஒன்றினை அமைத்த போது அதன் தலைவராக நியமிக்கப்பட்ட இவர்தான் மேலே கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ்மொழியில் 12 அல்லது 13 வட்டார வழக்குகள் உள்ளன. எனவே அவை ஒன்றுக்கொன்று மாறானவை என்ற கருத்துப்பட கூறியிருப்பது மொழியியலின் அடிப்படைகூட அவருக்குத் தெரியவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது. எல்லா மொழிகளிலும் வட்டார வழக்குகள் உண்டு. ஆனால் இலக்கியங்கள் படைக்கப்படும் எழுத்துமொழி ஒன்றாகத்தான் இருக்க முடியும். தொல்காப்பியரும், வள்ளுவரும் எந்த தமிழில் எழுதினார்களோ அதே தமிழில்தான் இன்றுவரை மாறாமல் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பற்றியோ, தமிழ்மொழியைப் பற்றிய அறியாமையின் விளைவாகவோ அல்லது பொய்யான பரப்பரை செய்ய திட்டமிட்டு இவ்வாறு கூறுகிறாரா? என்பது நமக்குத் தெரிந்தாக வேண்டும்.

2011ஆம் ஆண்டில் இந்திய அரசின் அதிகாரப்பூர்வமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் தமிழ்ப்பேசும் மக்களின் எண்ணிக்கை 89.41% ஆகும். தெலுங்கு – 5.65%, கன்னடம்-1.67% உருது-1.51%, மலையாளம்–0.89% மட்டுமே இம்மொழிகளை பேசுகிறார்கள். சௌராட்டிரம் போன்ற குறைந்த எண்ணிக்கையில் உள்ள பிற மொழியினர் 0.87% ஆவார். இவர்களின் மொத்த எண்ணிக்கை 10.51% மட்டுமேயாகும். இந்திய அரசு அறிவித்துள்ள இந்த உண்மையை மறைத்து தமிழகத்தில் மொழிச் சிறுபான்மையினரின் எண்ணிக்கை 30 முதல் 35% இருப்பதாக அவர் கூறியிருப்பது திட்டமிட்ட பொய்யுரையாகும்.

மேலும் அவர் “இந்திய மொழிகள் அனைத்தும் மொழியியல்படி பேச்சு மொழி, வாக்கிய அமைப்பு, பெயர் – வினைச் சொற்கள் போன்றவற்றில் ஒன்றுபட்ட தன்மை கொண்டவை. பல மொழிகளையும் மக்களால் புரிந்துகொள்ள முடியும்” என்றும் கூறியிருக்கிறார். மொழியியலின் அரிச்சுவடிகூடி அவருக்குத் தெரியவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது.

தமிழும் மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 33க்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் பேசப்படுகின்றன என்பதும் இவை சமற்கிருதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை மட்டுமல்ல, சமற்கிருதத்தின் துணையின்றி தனித்து இயங்கும் வளம் நிறைந்தவை என்று உலக அறிஞர்கள் கூறிய உண்மையைகூட அவர் அறிந்திருக்கவில்லை.

மேலும், வட இந்தியாவில் பேசப்படும் பீகாரி, மைதிலி, போஜ்புரி, அரியான்வி, இராசஸ்தானி, மார்வாரி போன்ற மொழிகள் இந்தியிலிருந்து முற்றிலும் வேறானவையாகும். ஆனால் இந்தி மொழி கணக்கில் இவை அனைத்தையும் சேர்த்துதான் பெரும்பான்மை மொழி இந்தி என்று கூறுகிறார்கள். இந்த மொழிகளுக்கிடையே வேறுபாடுகள் நிறைய உண்டு. ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாகும் என்பது போன்ற மொழியியல் உண்மைகளைகூட அவர் மறைக்க முயன்றிருக்கிறார்.

புதிய கல்வித் திட்டத்தின்படி முதல் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வகுப்பு வரை தேவையான அறிவியல், வணிகம், கலையியல், மானுடவியல் போன்ற பல்வேறு துறைகளுக்குத் தேவையான புத்தகங்கள் அனைத்தையும் இந்திய அரசே தயாரித்து வழங்கும்” என்றும் அவர் அறிவித்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரவர் தாய்மொழியில் கல்வி கற்பிக்க புதிய கல்வித் திட்டம் வழி வகுத்திருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவையாகும். தாய்மொழியில் கல்வி கற்பிப்பதனால் அந்தந்த மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில்தான் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்படவேண்டும். அப்போதுதான் தாய்மொழிக் கல்வி என்பது முழுமைப்பெறும். அதற்குப் பதில் இந்தியா முழுமைக்குமான ஒரே பாடத்திட்டம் என்பது ஒருபோதும் சாத்தியமற்றது. வடமொழியின் ஆதிக்கத்தைப் பிற மொழிகள் மீது திணிப்பதாகும்.

 

பாரதிய பாசா சமிதியின் தலைவரான சம்மு கிருஷ்ண சாஸ்திரியின் இந்தத் திட்டம் இந்தி மொழியைத் தவிர இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்ட பிற தேசிய மொழிகளை அழிக்கும் திட்டமாகும். இதை மிகக் கடுமையாக எதிர்க்க தமிழர் உள்பட அனைத்து தேசிய மொழி பேசும் மக்களும் இணைந்து போராட முன்வரும்படி வேண்டிக்கொள்கிறேன்.

இதையும் படிங்க.!